இயக்குநர் ஷங்கர் ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்ய படத்தில் நிறைய விஷயங்களை வைத்துள்ளார்! -‘இந்தியன் 2’ பிரஸ் மீட்டில் எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்ட உலகநாயகன் கமல்ஹாசனின் பேச்சு

கமல்ஹாசன் நடித்துள்ள, ரசிகர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘இந்தியன் 2’ வரும் ஜூலை 12-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இயக்குநர் ஷங்கர், கதாநாயகன் கமல்ஹாசன், நடிகர் சித்தார்த் மூவரும் பத்திரிகையாளர்களை சென்னையில் சந்தித்தனர்.

அப்போது பேசிய கமல்ஹாசன், ‘இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது, நிறையத் தடங்கல்களும் வந்தது. இவ்வளவு கஷ்டப்படுகிறோம் ஆனால் இந்த உழைப்பு ரசிகர்களிடம் போய்ச்சேருமா? எனத் தயக்கம் இருந்தது, ஆனால் இப்போது அது சேரப்போகிறது என்பது மகிழ்ச்சி. சென்சாரில் படம் பிடித்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். அது இன்னும் மகிழ்ச்சி.

இந்தியன் என்றால் தாத்தா வருவார், ஷங்கர் படமென்றால் பிரமாண்டம் பாட்டு நல்லாருக்கும் என எளிதாகச் சொல்லிவிடுவார்கள். அதைத்தாண்டி மிகச் சிறப்பாகத் திரைக்கதை அமைத்துள்ளார் ஷங்கர். ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்ய நிறைய வைத்துள்ளார். படம் உங்கள் அனைவரையும் அசத்தும்” என்றார்.

இயக்குநர் ஷங்கர் பேசியபோது, ‘இந்தியன் உருவான போது, சேனாதிபதி கதாப்பாத்திரத்தை உருவாக்கக் கமல் சாரோட போட்டோ, அவரோடு அப்பா போட்டோ, அண்ணா போட்டோ  என எல்லாவற்றையும் தோட்டா தரணியிடம் தந்து ஒரு ஸ்கெட்ச் போட்டுத் தரச் சொன்னேன்.  அந்த ஸ்கெட்ச் பார்த்த போதே சிலிர்ப்பாக இருந்தது. முதல் படத்தில் அவர் மேக்கப் போட்டு வந்து நின்ற போது கூஸ்பம்ஸ் வந்தது, இப்போது இந்த படத்தில் மீண்டும் அவர் மேக்கப் போட்டு வந்த போது, அதே சிலிர்ப்பு வந்தது. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அவரை ஷூட்டில் பார்க்கும்போது கமல் சார் என்றே தோன்றாது, ஏதோ இந்தியன் தாத்தா நம்முடனே இருக்கிறார் என்பது போல் தான் தோன்றும். அவர் இந்தியன் தாத்தாவாகத்தான் வாழ்ந்திருக்கிறார். அதே உணர்வு படம் பார்க்கும் போது உங்களுக்கும் வரும். இந்தியன் படம் எடுக்கும் போது 2 ஆம் பாகம் எடுப்பேன் என நினைக்கவே இல்லை, அப்போது தேவைப்பட்ட போது, இந்தியன் தாத்தாவிற்கு அப்போதைக்கு ஒரு பிறந்த வயது வைத்து விட்டேன், ஆனால் இப்போது படம் எடுக்கும்போது அவருக்கு வயது என்ன என்கிற சர்ச்சை வந்துள்ளது. இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் சீனாவில் 118 வயது மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரர் இருந்தார், அந்த வயதிலும் அவர் திடகாத்திரமாக சண்டை போடுவார், ஜேம்ஸ் பாண்ட் ஒரிஜினல் வயது 100க்குமேல் ஆனால் அதையெல்லாம் நாம் கண்டுகொள்வதில்லையே, அதே போல் இந்தியன் தாத்தா என்பது ஒரு உணர்வு. அதை ரசிகர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்.

இந்தியன் பார்ட் 1 வந்த போது,  பிராஸ்தடிக் மேக்கப்  அந்த அளவு வளரவில்லை, அதனால் அது ரொம்ப திக்காக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த நிறுவனத்திடம் சொல்லி மேக்கப் தின்னாக இருக்க வேண்டும் எனக்கேட்டு போட வைத்தோம். அதனால் நீங்கள் கமல் சார் நடிப்பை இன்னும் நன்றாகப் பார்க்கலாம். இந்தப்படத்தை முதலில் வேறொருவர் தான் எடுப்பதாக இருந்தது ஆனால் கதையை கேட்டவுடன் நான் தான் தயாரிப்பேன் எனச் சொன்னார் சுபாஸ்கரன், இந்தியன் மாதிரி ஒரு படத்தை லைகா போன்ற நிறுவனம் தான் எடுக்க முடியும்.

சுபாஸ்கரன் சார், ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்ந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி. இந்தியன் படம் தமிழ் நாட்டில் நடக்கும் ஆனால் இது இந்தியா முழுக்க நடக்கும் கதை, இந்தியா முழுக்க பல மாநிலங்களில் ஷூட் செய்துள்ளோம். ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here