கிஷோர், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் மாறுபட்ட திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள படம் ‘முகை.’ அறிமுக இயக்குநர் அஜித்குமார் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் அஜித்குமார் பேசியபோது, ‘‘இது என் முதல் படம். நாயகி நடித்த ஒரு யூடியூப் விடியோ பார்த்து அவரை தேர்வு செய்தேன். மிக நன்றாக நடித்துள்ளார். ஒரே இடத்தில் நடக்கும் கதை. கிஷோர் சார் இந்த படத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். முகை உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்னை நம்பி உழைத்த என் படக்குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.
தயாரிப்பாளர் சந்தோஷ் ‘‘என் வாழ்வின் முதல் மேடை இது. நாங்கள் அழைத்து இங்கு வந்து வாழ்த்திய திரை பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தை தயாரிக்க ஆதரவாக இருந்த என் குடும்பத்திற்கு என் நன்றி. லாக்டவுனில் தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அஜித்குமார் அப்போது தான் பழக்கமானார். சும்மா இருக்கிறோம் ஏதாவது கதை பண்ணு என்றேன். அவர் உருவாக்கிய கதை தான் இது. இந்தப்படத்திற்கு கிஷோர் பொருத்தமாக இருப்பார் என அவரை சந்தித்தோம். அவர் எங்கள் படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார். கிஷோர் சார் இல்லையென்றால் இந்த படம் இல்லை. நாயகி எங்களை நம்பி வந்து நடித்து தந்தார். படம் நன்றாக வரவேண்டுமென தொழில்நுட்ப கலைஞர்கள் மிகவும் உழைத்துள்ளனர். இப்படத்திற்காக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.
தயாரிப்பாளர் கே. ராஜன் ‘‘ ‘முகை’ ஒரு அற்புதமான தமிழ் தலைப்பு. மலரின் முன் பருவத்தை குறிக்கும் வகையில் இயக்குநர் தமிழில் தலைப்பு வைத்துள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன். இந்த காலத்தில் நம்மூர் இயக்குநர்கள் ஹாலிவுட் படத்திற்கு இணையாக தங்கள் படத்தை உருவாக்குகிறார்கள். இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்” என்றார்.
படத்தின் நாயகி ஆர்ஷா சாந்தினி பைஜூ, நடிகரும் அரசியல்வாதியுமான எஸ் வி சேகர், இயக்குநர் பிரவீன் காந்த், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் தயாரிப்பாளருமான முரளி ராமசாமி, தயாரிப்பாளர் டில்லிபாபு, தயாரிப்பாளர் ராஜா, நடிகர் ஜெயப்பிரகாஷ், இசையமைப்பாளர் சக்தி, ஒளிப்பதிவாளர் அர்ஜுன், இணை தயாரிப்பாளர் கிஷோர் என பலரும் நிகழ்வில் பேசினார்கள்.
படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.