இயக்குநர் மிஷ்கின் முதன் முறையாக இசையமைத்திருக்கும் படம் ‘டெவில்.’ ‘சவரக்கத்தி’ படத்தை இயக்கிய ஆதித்யா இயக்கியுள்ள இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின், விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு, ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நவம்பர் 3; 2023 அன்று நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் ஆதித்யா பேசியபோது, “இப்படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டு ஒரு இக்கட்டான தருணத்தில் நான் இருந்த போது, சேகர் மூலமாக தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்னை அணுகி இரண்டு இலட்சம் ரூபாய்கான செக்கை வழங்கினார். படப்பிடிப்பிற்கான பணிகளை துவங்கினோம். பிறகு தயாரிப்பு பணிகளில் ஹரி சாரும் தன்னை இணைத்துக் கொண்டார்.
தயாரிப்பாளர்கள் இப்படம் சிறப்பாக உருவாக எல்லா வகைகளிலும் உதவினார்கள் அவர்களுக்கு நன்றி. நான் முதலில் எழுதிய கதையை இயக்குநர் மிஷ்கினிடம் கொடுத்தேன். அவர் இந்தக் கதை நல்ல கதை தான். ஆனால் முதலில் நீ அன்னாகரீனா’வைப் படி என்று கொடுத்தார். அது கிட்டத்தட்ட 600 பக்கம் இருக்கும். பின்னர் தேவி பாரதி எழுதிய சிறுகதையை வாசித்தேன். அது என்னை மிகவும் பாதித்தது. பின்னர் படத்திற்குள் பூர்ணா, விதார்த், அருண் என ஒவ்வொருவராக வந்தார்கள். பூர்ணா இப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசியபோது, “எல்லாக் கதைகளும் ஒரே கதைகள் தான். இந்த படத்தின் கதையும் அதே தான். ஒரு அமைதியான வீட்டிற்குள் கருப்பு உள்ளே வரும். வீடு சின்னாபின்னமாகி சிதிலம் அடையும். மீண்டும் அது புத்துயிர் பெற்று துளிர்க்கும்.
இப்படத்தில் சில பாடல்களை முயற்சித்திருக்கிறேன். இந்த உலகின் மிகப்பெரும் இசை ஆளுமைகள் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும். அவர்கள் தான் இசையமைப்பாளர்கள். நான் அல்ல.
ஒரு படம் இயக்குநரின் உழைப்பும் அறிவும் வெளிப்படையாக தெரிவது போல் இருந்தால் மட்டுமே அப்படம் ஓடும். இல்லையென்றால் அது எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும் ஓடாது. மக்கள் நிராகரித்து விடுவார்கள். படத்தை பாருங்கள். அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தூக்கிப் போடுங்கள். அவன் மீண்டும் அதைவிட நல்ல கதையோடு உங்களைத் தேடி வருவான். படம் நன்றாக இருந்தால் கொண்டாடுங்கள், ஆதரவு தாருங்கள்” என்றார்.
நடிகர் விதார்த் பேசியபோது, “நான் முதலில் மிஷ்கின் சார் படத்தில் தான் நடிக்க அழைக்கிறார்கள் என்று தான் போனேன். ஆனால் அங்கு போன பிறகு தான் இயக்குநர் ஆதித்யா என்பதே தெரிந்தது. இப்படத்தில் நடித்து முடித்தப் பின்னர் தான் இப்படம் என் வாழ்நாளில் ஒரு மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. மிஷ்கின் சாரின் இயக்கத்தில் நடிக்க முடியவில்லை என்றால் கூட, அவரது இசையில் நடித்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றார்.
இயக்குநர் மிஷ்கினுக்கு இசை கற்றுத் தரும் குரு இசை மேதை பீம்சென் ஜோஷியின் சிஷ்யரான 90 வயது நிரம்பிய இசை பண்டிதர் ராமமூர்த்தி பேசியபோது, இன்று காலையில் கூட நாங்கள் இருவரும் சேர்ந்து இரண்டரை மணி நேரம் பயிற்சி செய்தோம். ஸ்வாதி சிந்து என்னும் ஒரு புதுவகையான ராகத்தை இரண்டு ராகங்களை கலந்து நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். நான் 53 வருட காலமாக குறைந்தது 10000 நபர்களுக்கு இசை கற்று கொடுத்திருப்பேன். சைந்தவி, விஜய் பிரகாஷ் ஆகியோர் எனது மாணவர்கள் தான்… ஆனால் என்னுடைய சிறந்த மாணாக்கன் என்றால் அது மிஷ்கின் என்று தான் சொல்வேன். ஏனென்றால் ஒரு நாளில் எட்டரை மணி நேரம் பயிற்சி செய்கிறான். நான் போன் செய்தால் பேசுவது இல்லை, அவன் பயிற்சி செய்யும் ஓசை தான் கேட்கிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் வேலை செய்தால், இசை தானாகவே வரும். அது மிஷ்கினுக்கு நடந்திருக்கிறது. என்னுடைய சிறந்த மாணவனின் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் பாலா பேசியபோது, “நான் என் படத்தின் பாடல் ஒலிப்பதிவிற்காக இளையராஜாவிடம் போயிருந்தேன். அப்பொழுது இளையராஜா மிஷ்கினைப் பற்றி சொன்ன ஒரு விசயம் எனக்கு ஞாபகம் வருகிறது. அப்பொழுதெல்லாம் எனக்கு மிஷ்கின் யார் என்றே தெரியாது. அவர் எடுத்த படத்தைப் பற்றியும் தெரியாது. ஒரு ஷார்ட்ஸ் அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஷூ மற்றும் டீ சர்ட் போட்டுக் கொண்டு, துறுதுறுவென அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருந்தார் ஒருவர். அவனை சாதாரணமாக நினைக்காதே அவன் மிகப்பெரிய இன்டெல்சுவல் என்றார்.
அவர் எந்த கோணத்தில் அப்படி கூறினார் என்று தெரியாது. ஆனால் உண்மையாகவே மிஷ்கின் ஒரு இன்டெலக்ஷுவல் தான்” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசியபோது, “மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம். அவரோட பெரும்பாலான திரைப்படங்கள், மனிதர்களின் இருண்மை சூழ்ந்த மனதிற்குள் ஆழ்ந்து சென்று அதில் ஒளியை தேடுவதற்கான பயணமாகத் தான் இருக்கும். அதைப் போலத் தான் அவரின் இசையும் இருக்கிறது. மிஷ்கின் பாடல்கள் பாடி அவை எந்த அளவிற்கு வைரல் ஆகியிருக்கிறது என்பதை நாம் அனைவருமே பார்த்து இருக்கிறோம். அது போல் அவருக்கு இசை மீது இருக்கும் ஆர்வமும் எல்லோரும் அறிந்ததே. இந்த இசை பயணத்திலும் அவர் வெற்றியடைய வாழ்த்துகிறேன். அது போல் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்து, அவர் ஸ்டைலிலேயே படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ஆதித்யா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் வசந்த் ரவி, இசை விமர்சகர் ஷாஜி, படத்தின் தயாரிப்பாளர் இராதாகிருஷ்ணன், மற்றொரு தயாரிப்பாளர் ஹரி, தயாரிப்பாளர் சங்க நிர்வாகி முரளி, இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பூ சசி, வின்சென்ட் செல்வா, கதிர், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மிஷ்கினின் இசையமைப்பு முயற்சியை பாராட்டி வாழ்த்தினார்கள்.