‘ராஜா ராணி’, ‘திருமணம்’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் சித்து. அவர் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அகோரி.’
கதாநாயகியாக ‘144′ பட நாயகியும், கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவருமான ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார்.
தெலுங்கில் ‘சஹா’ படத்தின் மூலம் புகழ் பெற்ற, 6.5″ உயரமுள்ள ஜக்குல்லா பாபு வில்லனாக நடித்திருக்கிறார்.
‘பாரதி’ படத்தில் பாரதியாராக நடித்து கவனம் ஈர்த்தவரும், பல படங்களில் வில்லனாகவும் குணசித்திர பாத்திரங்களிலும் நடித்து வரும் சாயாஜி ஷிண்டே இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வித்தியாசமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மைம் கோபி, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி,கார்த்தி, ‘கலக்கப்போவது யாரு’ சரத், டிசைனர் பவன் ஆகியோரும் நடித்துள்ளனர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள்.
படத்தை அறிமுக இயக்குநர் டி.எஸ். ராஜ்குமார் இயக்கியுள்ளார். ‘மோஷன் பிலிம் பிக்சர்’ சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார்.
சிவனடியாரான அகோரி ஒருவருக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே படத்தின் கதை. ஆறிலிருந்து 60வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஹரித்துவார் செட் அமைத்து அகோரிகளுடன் சாயாஜி ஷிண்டே நடித்த காட்சியும், கேரளாவின் காட்டுப் பகுதியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு அகோரிகள் நடித்த காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த படத்தில், ‘ராட்சசன்’ படத்தின் சிஜி குழுவில் இடம்பெற்றிருந்த ‘அக்ஷயா ஸ்டுடியோஸ்’ அசோக் குமார் பணிபுரிந்துள்ளார். அவரது பங்களிப்பில் படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும் விதத்தில் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.
இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘நல்ல பொழுதுபோக்குடன் அமைந்த திகில் கதையாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுப் பாராட்டி, குழந்தைகள் பெரியவர்களுடன் பார்க்கும்படியாக இருப்பதால் யூ / ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.
பிரமாண்டமான பல வெற்றிப் படங்களை வெளியிட்ட ‘பி விஆர் சினிமாஸ்’ இப்படத்தை வெளியிடுவதால் படத்தின் நம்பகத்தன்மையும் வணிக மதிப்பும் அதிகரித்துள்ளது.
‘ஈகோ’, ‘கள்ளத் துப்பாக்கி’ படங்களின் ஒளிப்பதிவாளர் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபமாக கேரளாவில் புகழ் பெற்று வருகிற, நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி ‘ஃபோர் மியூசிக்.’ அவர்கள் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்கள்.
ஜெயச்சந்திரன் கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.
இதுவரை சின்னத்திரையில் தனது திறமையை வெளிப்படுத்திய சித்து, திரையுலகில் அறிமுகமாகியுள்ள இந்த படத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறார்.