சந்தானம், மேகா ஆகாஷ் நடிக்க, கார்த்திக் யோகி இயக்கியுள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் நடிகர் சந்தானம் பேசியபோது, ‘‘கே.ஜி.எஃப்’ எடுக்கும்போது நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு யஷ் பெரிய ஹீரோவா என்றால் அப்போது இல்லை. ஆனால், அந்தக் கதையை நம்பி அந்தப் படம் எடுத்தார்கள். அதேதான், ‘பாகுபலி’ பிரபாஸூக்கும். அதுபோலதான், இந்தக் கதையை தயார் செய்துவிட்டு நாங்கள் தயாரிப்பாளர்களிடம் சென்றபோது, ‘சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா’ எனப் பலரும் தயங்கினார்கள். ஆனால், கதையை மட்டுமே நம்பி தயாரிப்பாளர் பீப்பிள் மீடியா ஃபேக்டரி’ விஸ்வா சார் முன் வந்தார். எனக்கு இதுதான் பெரிய முதல் பட்ஜெட் படம். என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் எடுத்துள்ள விஸ்வா சாருக்கு நன்றி.
65 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நேர்த்தியாக செய்து கொடுத்தார்கள்.
பீப்பிள் மீடியா ஃபேக்டரி’ தெலுங்கில் நிறைய படங்கள் எடுத்திருக்கிறார்கள். தமிழிலும் இரண்டு படங்கள் செய்திருக்கிறார்கள். அதில் முதல் படமாக ‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெளியாகிறது.
கதையை நம்பிய தயாரிப்பாளர்கள் எப்போதுமே தோற்றதில்லை. இந்தப் படம் வெற்றியடையும். கார்த்திக் யோகி இந்த கதையை நேர்த்தியாக செய்திருக்கிறார். தியேட்டரில் பார்க்கும்போது நிச்சயம் மகிழ்வீர்கள்” என்றார்.
இயக்குநர் கார்த்திக் யோகி, ‘‘ ‘டிக்கிலோனா’ படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுதான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆரம்பிக்க காரணம். சந்தானம் அண்ணன் கொடுத்த ஆதரவு பெரிது. மீண்டும் மீண்டும் சந்தானம் அண்ணாவுடன் படம் செய்வேன்” என்றார்.
நடிகர் ஆர்யா, ‘‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் நடிக்கும்போது எனக்கும் சந்தானத்திற்கும் ஒரே கேரவன் தான். அப்போது கேரவனுக்குள்ளேயே சந்தானத்தைப் பார்க்க ரசிகர் ஒருவர் வந்துவிட்டார். அந்த அளவுக்கு சந்தானம் மீது ரசிகர்கள் அன்பாக இருக்கிறார்கள். நிச்சயம் இந்த படம் ஹிட்டாகும்.
நானும் சந்தானமும் இணைந்து அட்வென்ச்சர் ஃபேண்டஸி கதையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க இருக்கிறோம்” என்றார்.
நடிகை மேகா ஆகாஷ், இயக்குநரும் நடிகருமான தமிழ், நடிகர்கள் ரவி மரியா, எம்.எஸ். பாஸ்கர், நடிகர் சேஷூ, கூல் சுரேஷ், இட்ஸ் பிரஷாந்த், அல்லு சிரீஷ், அஸ்வின், நடிகை ஜாக்குலின், டான்ஸ் மாஸ்டர் ஷெரிஃப், இயக்குநர்கள் மடோன் அஸ்வின், ஸ்ரீகணேஷ், ராம், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.