நான் ஹீரோ இல்லை; உங்கள் வீட்டுப் பையன்! -அமீகோ கேரேஜ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேச்சு

மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, பிரசாந்த் நாகராஜன் இயக்கிய திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்.’

அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 15-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

 

நிகழ்வில் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசியபோது, ”இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். ஒரு நல்ல படமாக உருவாக்கியிருக்கிறோம்.

கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது. இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம். ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். ஜி எம் சுந்தர் அண்ணா மிக முக்கியமான பாத்திரம் செய்துள்ளார். கமல் சார் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் அவர். ஷூட்டிங்கில் அவரிடம் எனக்குத் தேவையானதை எப்படி வாங்குவது என்ற தயக்கம் இருந்தது, ஆனால் என்னிடம் மிக எளிமையாகப் பழகி, படத்திற்கு தேவையானதைத் தந்தார்.

நடிகர் தாசரதி என் முதல் ஷார்ட் ஃபிலிமிலிருந்து இருக்கிறார், நல்ல நண்பர் நல்ல ரோல் செய்துள்ளார். நாயகி ஆதிரா நன்றாக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரிய பலம் பாலமுரளி அண்ணாவின் இசை தான். பாடல்களுக்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. பாடலாசிரியர் கு கார்த்திக், ஒளிப்பதிவாளர் விஜய குமார், ஸ்டண்ட் மாஸ்டர் டான் அசோக் அண்ணா எல்லோருமே எனக்காகக் கடுமையான உழைப்பைத் தந்துள்ளனர். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

நடிகர் மகேந்திரன் பேசியபோது, ”நான் என்றும் ஹீரோ இல்லை; உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள், அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கணும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் யாருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here