விதார்த், சினிமாவில் கமர்ஷியல் வெற்றியை நோக்கி பல கதாநாயகர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கதைகளை தேர்வு செய்யும் விதத்திலும் நடிப்பிலும் தனக்கென ஒரு தனி பாணியை பின்பற்றி வெற்றிப் பட நாயகனாக வலம் வருகிறார்.

படம் வெற்றி பெறுமா, கமர்ஷியல் அம்சங்கள் இந்தப்படத்தில் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்காமல், இந்த கதையும் கதாபாத்திரமும் நம் நடிப்புக்கு தீனி போடும் விதமாகவும், மக்களுக்கு நெருக்கமான கதாபாத்திரங்களில் தன்னை பிரதிபலிப்பது போன்று தான் அவரது கதை தேர்வுகள் இருக்கின்றன.

அப்படி கடந்த வருடம் வெளியான ‘இறுகப்பற்று’ படத்தின் மூலம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய விதார்த், வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகவுள்ள ‘அஞ்சாமை’ படத்திலும் நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அறிமுக இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன் இயக்கியுள்ள இந்தப்படத்தை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு தந்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப்படத்தை வெளியிடுவதால் படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. விதார்த்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். நீட் தேர்வை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.

படம் குறித்து நாயகன் விதார்த் பேசியபோது, “நான் படங்களை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணமாக கதையை மட்டும் தான் பார்க்கிறேன். அந்தவகையில் ‘அஞ்சாமை’ படம் சிலர் சொல்லுவது போல வைரலாக ஒரு சர்ச்சையை உருவாக்கும் கதையா என்றால் சர்ச்சையை உருவாக்குவது எங்கள் நோக்கம் அல்ல.. படம் வெளியாகும்போது அது உங்களுக்கே தெரியும். எந்த ஒரு விஷயத்தையும் ஜோடனையாகவோ அல்லது அதிகப்படுத்தியோ சொல்லாமல் இந்த படம் உண்மையை பேசி உள்ளது என்று நம்புகிறேன். நீட் தேர்வுக்கு ஆதரவா, எதிர்ப்பா என்கிற விஷயத்திற்குள்ளேயே நாங்கள் போகவில்லை.

படபிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் நடைபெற்ற சமயத்தில் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கே சென்று விடுவேன். அந்தவகையில் கிட்டத்தட்ட 25 தடவைக்கு மேல் இந்த படத்தை பார்த்துவிட்டேன். மக்களுடைய மனநிலையை, மக்களின் வலியை சொல்லும் விதமாக இந்தப்படம் உண்மையை பேசி இருக்கிறது என்று தான் நான் புரிந்து கொண்டேன். சும்மா சொல்லக்கூடது, நடிகை வாணி போஜனை இந்த படம் வேற லெவலுக்கு கொண்டு செல்லும். இதற்குப் பிறகு அவர் என்ன பண்ணப் போகிறார் என எதிர்பார்க்க வைக்கும் விதமாக இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

என்னுடைய மகள் ஏழாவது படிக்கிறாள். புத்தகத்தை மட்டும் தலையில் வைத்துக்கொள் என்று அவளை கட்டாயப்படுத்துவதில்லை. நடனமோ, இசையோ எது பிடித்திருக்கிறதோ அதற்கு அவள் விரும்பியபடி செல்கிறாள். இன்று இருக்கும் குழந்தைகள் ரொம்பவே தெளிவாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தான் நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. அவர்களை ஆதரித்தால் மட்டும் போதும் என நான் நினைக்கிறேன். நான் நடிகனாக விரும்பியதை எனது பெற்றோர் ஆதரித்ததால் தானே இந்த இடத்தில் நான் இருக்கிறேன் ?. ஒவ்வொரு நாளும் என் பெண் பேசும் விஷயங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். என் பெண்ணிடம் நான் ஏதாவது சொல்வதை விட இன்றுவரை அவளிடம் இருந்து ஏதாவது கற்றுக் கொள்ள முடியுமா என்று தான் பார்க்கிறேன்.

குழந்தைகள் அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை படிக்கிறார்கள். நாம் தான் அவர்களின் ரிசல்ட்டை நோக்கி மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறோம். அவர்களது கல்வி குறித்து இப்படி முடிவு எடுத்திருக்கலாமோ, அப்படி முடிவு எடுத்திருக்கலாமோ என்றெல்லாம் குழப்பிக் கொள்ள தேவையில்லை. சந்தோசமாக வாழ்க்கையை அனுபவித்து போய்க்கொண்டே இருக்க வேண்டும். என்னுடைய வேலை நடிப்பது மட்டும்தான். என் படங்களும், எல்லா படங்களும் ஓட வேண்டும் என்று ஆசைப்படுவேன். அப்படி ஓடினால் தான் என்னை இயக்க இருக்கும் அத்தனை பேருக்கும் தங்களது கதையை படமாக்க வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here