நானும் ஒரு அழகி சினிமா விமர்சனம்

ஒலகம் அதுல முன்னேறிடுச்சு, இதுல முன்னேறிடுச்சுன்னு பெருமை பீத்திக்கிறீங்களே? ஆனா, இப்போவும் புருஷங்கிட்டே கொறயிருந்தாலும் பொண்டாட்டிதாம்யா மலடின்னு பேர் வாங்குறா… ஒசந்தது தாழ்ந்ததுன்னு சாதி பாத்து பழகுற குணம் இன்னமும் நம்ம ஊர்ல முழுசா ஒழியலையே… இப்படி ஏகப்பட்ட கொறைகளோட வாழ்ந்துக்கிட்டு, இந்த லட்சணத்துல பெருமையாம், புண்ணாக்காம், வெளக்குமாறு… எல்லாத்தையும் தூக்கி குப்பைல போட்டுக் கொளுத்துங்கய்யா…

-இப்படி தனக்குள் பொங்கியெழுந்த ஆவேசத்தோடு ‘நானும் ஒரு அழகி’யை படைத்திருக்கிறார் பொழிக்கரையான்.

சரியாக படிப்பு வராத கிருஷ்ணம்மா, தாய்மாமன் கரிசனமாக பாடம் சொல்லிக் கொடுத்ததால் கல்லூரிப் படிப்பில் சாதனை மாணவியாகிறாள். அதே தாய்மாமன் அவள் மீதான காதலைச் சொல்ல தாமதப்படுத்தியதால் வேறொருவனுக்கு மனைவியாகிறாள். அந்த வாழ்க்கை அவளுக்கு மலடி என்ற பட்டத்தை தூக்கிக் கொடுத்து, நரக அவஸ்தையை போனஸாக தருகிறது. நரகத்திலிருந்து தப்பித்து வந்தவள் மீண்டும் தாய்மாமனோடு கலந்து பழகி, ஒட்டி உரசுகிறாள். அதன்மூலம் அவள் ‘மலடி’யல்ல என்பது ஊருக்குத் தெரிகிறது. தெரிந்து கொண்ட ஊர் அதை எப்படி எடுத்துக் கொண்டது என்பதே கதையின் மீதி…

கதைச் சுருக்கத்தைப் பார்க்கும்போதே, கதைநாயகியின் பாத்திரம் எத்தனை கனமானது புரிந்து கொள்ள முடியும். அதற்கேற்றபடி உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சிப் பெருக்கோடும் கிருஷ்ணம்மாவாக நடித்திருக்கிறார் மேக்னா.

நாயகியின் தாய்மாமன் என்ற பிரதான பாத்திரத்தை படத்தின் இயக்குநரே ஏற்றிருக்கிறார். முறைப் பெண் இன்னொருவனின் மனைவியாக இருந்தபடியே தன்னுடன் பழகுவதை தயக்கமின்றி ஏற்பது, அவள் கர்ப்பத்துக்கு காரணமாகி அதனால் அவள் பிரச்சனைகளை சந்திக்கும் தருணங்களில் மூச்சுப் பேச்சு காட்டாமல் ஒதுங்கிக் கொள்வது என தனக்கான காட்சிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அந்த பாத்திரம் மூலம் அவர் எடுத்துக் காட்டியிருப்பது ஆண்கள் சந்தர்ப்பவாதிகள், சுயநலம் பிடித்தவர்கள்.

உன்னோட பழைய காதலை விட்டுத்தள்ளு; இனி எனக்கு உண்மையா இரு’ என்று சொல்லி நாயகியை கல்யாணம் செய்துகொள்கிறபோது கனிவான பார்வையும், குழந்தையின்மை பிரச்சனையை காரணம் காட்டி அவளை கொடுமைப் படுத்துகிறபோது வில்லத்தனமும் காட்டியிருக்கிறார். அந்த பாத்திரத்தின் மூலமும் இயக்குநர் சொல்லியிருக்கிற விஷயம் சந்தர்ப்பவாதிகள், சுயநலம் பிடித்தவர்கள்.’

இன்னபிற நடிகர், நடிகைகள் அத்தனைப் பேரும் புதுமுகங்கள். அது அவர்களின் நடிப்பில் தெரிகிறது.

கதைக்களத்துக்குப் பொருந்துகிற வளமான வரிகளில் பாடல்களை எழுதி, அதற்கு இதமான இசையூட்டி அழகு பார்த்திருக்கிறார் பொழிக்கரையான்.

இந்த படத்தில் நடக்கும் சம்பவங்களைப் போல் இந்தக் காலத்திலும் நடக்கிறதா? என்றால், பரவலாக இல்லாவிட்டாலும் எங்காவது ஒன்றிரண்டு இடங்களில் நடக்கவே செய்கிறது என்பதே உண்மை. அப்படியான சம்பவங்கள் முடிவுக்கு வராதவரை இப்படியான படைப்புகளின் வருகையும் நிற்கப் போவதில்லை.

நானும் ஒரு அழகி, சமூக அவலத்தின் சாட்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here