எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக படம் எடுத்தவர்களும், எடுப்பவர்களும் நம்மிடையே உண்டு. ஆதி காலத்து சங்கதிகளை அள்ளிப் போட்டு பழமை மாறாமல் கொடுப்பவர்களுக்கும் பஞ்சமில்லை. இயக்குநர் ஹாரூன் பழமை விரும்பியாக இருப்பார் போலிருக்கிறது. அதனாலென்ன இருந்துவிட்டுப் போகட்டும்…
வர்ஷா தன் கணவனுடனும், குட்டிப் பையனுடனும் ஒரு அபார்ட்மெண்டில் குடியேறுகிறார். அந்த வீட்டில், பேய் நடமாட்டமுள்ள இடத்தில் என்னென்ன அமானுஷ்ய சம்பவங்கள் நடக்குமோ அத்தனையும் நடக்கிறது. வர்ஷாவின் குடும்ப நிம்மதி பறிபோகிறது.
அந்த பேயின் பின்னணி என்ன? அது ஏன் வர்ஷாவின் குடும்பத்தை குறிவைத்து தாக்குகிறது? இந்த எளிமையான கேள்விகளுக்கு பதில்கள் பிளாஷ்பேக்கில்…
‘7 ஜி ரெயின்போ காலனி’ படத்தின் கதாநாயகி சோனியா அகர்வாலை இந்த ‘7 ஜி தி டார்க் ஸ்டோரி’ கதை நாயகியாக்கியிருக்கிறது. சொத்து விவகாரத்தில் சொந்த சகோதரனே எமனாகிவிட, அவனை பழிவாங்கும் பேயாக கொஞ்சமாய் மிரட்டியிருக்கிறார். கொலை செய்யப்படும் தருணங்களில் சற்றே கண் கலங்கவும் செய்திருக்கிறார்.
வர்ஷாவாக ஸ்ம்ருதி வெங்கட். பேயிடம் சிக்கிக் கொண்டு பயம் சூழ்ந்து பதற்றம் நிறைந்து அவதிப்படும்போது அதற்கேற்ற துடிப்பான நடிப்பை சரியாகத் தர அவரது உருண்டு திரண்ட பெரிய விழிகள் ‘முன்வந்து’ உதவியிருக்கின்றன. காட்சிக்கு காட்சி அம்மணி அணியும் விதவிதமான உடைகள், அவரது செழுமையான தேகத்தின் வளைவு நெளிவுகளை கவ்விப் பிடிக்க, ததும்புகிறது மெல்லிய கவர்ச்சி.
ஒருசில படங்களில் காமெடியான பார்த்துப் பழகிய இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்தில் பிரதான வில்லன். ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தைத் தொலைத்து விட்டு, கடன் நெருக்கடியால் சகோதரியையே கொலை செய்கிற அளவுக்கு நிலைமையை மோசமாக்கிக் கொள்ளும் அவரது நடிப்புக்கு, போனால் போகிறதென்று பாஸ்மார்க் போடலாம். ஹாரர் சப்ஜெட்டுக்கு பொருந்தும்படி தடதடப்பும் படபடப்புமான பின்னணி இசை தந்திருப்பதற்காக கூடுதலாய் மதிப்பெண் தட்டி விடலாம்.
வர்ஷாவின் கணவனாக வருகிற ரோஷன் பஷீரின் நடிப்பு நேர்த்தியாக இருக்க, அவரை அடைவதற்காக செய்வினை அது இதுவென இறங்குகிற சினேகா குப்தாவின் வில்லத்தனம் பரவாயில்லை ரகமாக டெலிவரி ஆகியிருக்கிறது.
பக்கத்து வீட்டுக்காரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, செக்யூரிட்டியாக கல்கி ராஜா, காவல்துறை அதிகாரியாக திரைப்பட மக்கள் தொடர்பாளர் கே.எஸ்.கே. செல்வா என இன்னபிற நடிகர்களின் பங்களிப்பில் குறையில்லை.
கண்ணாவின் ஒளிப்பதிவு கச்சிதம். தன் பெயரைப் போலவே படமும் நீளமாக இருக்கட்டும் என அனுமதித்திருக்கிறார் எடிட்டர் பிஜு வி டான் பாஸ்கோ.
எது எப்படியோ போகட்டும்… ‘பேய்ப் படமாக இருந்தால் போதும்; புதிய அனுபவம் எதுவும் தேவையில்லை’ என்பவர்கள் தியேட்டருக்கு கிளம்பலாம்.
7 ஜி, டிரீட்மெண்ட் பத்தாது ஜி!
-சு.கணேஷ்குமார்