‘800′ சினிமா விமர்சனம்

காலம் முழுக்க வலிகளைச் சுமந்தாலும், கால் வைத்த துறையில், காலத்துக்கும் பேசும்படியான சாதனைகளைப் படைத்த இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறே ‘800.’ அவரது சாதனையின் உச்சமே படத்தின் தலைப்பு!

குழந்தைப் பருவத்தில் கிரிக்கெட் மீதான ஆர்வம் பிறந்த தருணத்திலிருந்து உலகளவிலான சாதனைகளைப் படைத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது வரை முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை முடிந்தவரை முழுமையான காட்சித் தொகுப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீபதி.

ஆரம்பகாலத்தில் மைதானம் கிடைத்தாலும் மட்டையை பிடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் விளையாடுபவர்களுக்கு வாட்டர் பாட்டில் சப்ளை செய்கிற பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது,

சின்னச் சின்ன போட்டிகளில் கலந்துகொண்டு திறமை காட்டுவது,

தங்கள் சொந்தத் தொழிலை பொறுப்பேற்று நடத்தச் சொல்லும் அப்பாவின் வார்த்தைக்கு மதிப்பளிக்கத் தோன்றினாலும் அதைத்தாண்டி தன் மனதிலிருக்கும் இலக்கை குறிவைத்து நகர்வது,

வெளிநாட்டில் நடக்கும் போட்டிக்கு போனாலும் பங்கேற்காமல் ஏமாற்றம் சுமந்து திரும்புவது.

புறக்கணிப்பும் அவமானங்களும் தரும் வேதனைகளைப் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்த போட்டிகளுக்குத் தயாராவது,

வளைந்த கையால் பந்தெறிவது சர்ச்சைக்குள்ளாகி, அந்த குறைபாடே அவரை குற்றவாளியாக்கும்போது மனம் கலங்கினாலும் கடினமான உறையை கையில் பொருத்திக் கொண்டு பந்தெறிந்து தன்னை நிரூபிப்பது,

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்கும்போது ‘ஆயுதத்தை எதிர்க்க ஆயுதமேந்துவது சரியா?’ என தன் மனதிலிருக்கும் கேள்வியை துணிச்சலாக கேட்பது, தன் நிலைப்பாட்டை அவரிடம் தெளிவாக எடுத்துச் சொல்வது,

குறிப்பிட்ட சாதனைகளை எட்டி உலகளவில் பிரபலமானபின்னும் கர்வம் தலைக்கேறாமல் வலம் வருவது,

எல்லாம் போதும் என முடிவெடுத்து ஓய்வை அறிவித்து ஒதுங்குவது என காட்சிக்கு காட்சி தனது முயற்சிகளின் வீரியத்தையும், அது தரும் வலிகளையும், வெற்றி கிடைக்கும்போது பெறுகிற உற்சாகத்தையும் அதனதன் தன்மை குறையாமல் ரசிகனுக்கு கடத்தியிருக்கிறார் முத்தையா முரளிதரனாக நடித்துள்ள மிதுர் மிட்டல். கதாபாத்திரத்தின் கனம் உணர்ந்த அவரது தரமான நடிப்புக்கு எழுந்து நின்று கைதட்டி மரியாதை தரலாம்!

முத்தையா முரளியின் அப்பாவாக வேல ராமமூர்த்தி, அம்மாவாக ஜானகி சுரேஷ், சிறுவயது முத்தையா முரளியாக சிறுவன் ரித்விக், இளவயது முத்தையா முரளியாக பிரித்வி, பயிற்சியாளராக சரத் லோகிதஸ்வா, பாட்டியாக வடிவுக்கரசி,  பிரபாகரனாக நரேன், கிரிக்கெட் வீரர் மலிங்காவாக சத்யா என்ஜெ என முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்கள் அந்தந்த பாத்திரங்களாகவே மாறியிருப்பது படத்தின் பலம். இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவாக நடித்திருப்பவரிலிருந்து மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள், அம்பயர்கள் என நடித்திருக்கும் அத்தனைப் பேரும் கதையோட்டத்தின் தூண்களாக அவதாரமெடுத்திருப்பதை பாராட்டாமல் விட முடியாது.

முத்தையா முரளிக்கு மனைவியாக மிகச்சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டினாலும் தமிழ்ப் பெண்ணான தாங்கள் யார் பக்கம் என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும்போது கவனிக்க வைக்கிறார் மஹிமா நம்பியார்.

பத்திரிகையாளர்கள் நாசர், மெட்ராஸ் ஹரி இருவரின் உரையாடல்களை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமென்பதால் கிரிக்கெட் போட்டிகளையே காட்டிக் கொண்டிருக்காமல் கதைக்கு சம்பந்தப்பட்ட சம்பவங்களுக்கு திரைக்கதையில் உயிர் கொடுத்திருப்பதால் கிரிக்கெட் விளையாட்டு பற்றி தெரியாதவர்கள்கூட படத்தை சலிப்பின்றி பார்க்க முடியுமென்பது தனித்துவம்!

இலங்கையில் நடக்கும் தமிழர்களுக்கெதிரான சர்வாதிகார கொடூரங்கள், பாகிஸ்தானில் நடக்கும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட காட்சிகள் சற்றே மனதைப் பதறவைக்கும்!

ஜிப்ரானின் பின்னணி இசை படம் முழுக்க உணர்வோட்டத்துடன் பயணித்திருக்கிறது!

பல வருடங்கள் முன் நடக்கும் சம்பவங்களை காட்சிப்படுத்துகிறபோது கதை நிகழ்விடங்களின் உண்மைத் தன்மைக்காக கலை இயக்குநரின் குழு பெரிதும் உழைத்திருக்கிறது!

ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு நேர்த்தி!

இந்த படத்தின் காட்சிகள் கிரிக்கெட்டை ரசிப்பவர்களுக்கு மனதைத் தொடும். கிரிக்கெட்டில் ஈடுபாடுள்ள இளைய தலைமுறைக்கு உற்சாகமூட்டும். கிரிக்கெட்டில் நாமும் சாதிக்க வேண்டும் என முயற்சித்துக் கொண்டிருப்போருக்கு நம்மாலும் முடியும் என்ற தன்னம்பிக்கை சிறகு முளைக்க வைத்து புது ரத்தம் பாய்ச்சும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here