‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுனுக்கு வரும் ஏப்ரல் 8-ம் தேதி பிறந்தநாள். அதையொட்டி அவரது நடிப்பில், கிரியேட்டிவ் ஜீனியஸ் சுகுமார் இயக்கத்தில் உருவான ‘புஷ்பா 2′ படத்தின் முதல் க்ளிம்ப்ஸாக கான்செப்ட் டீசர் வெளியாகிறது. முன்னதாக சிறிய க்ளிம்ப்ஸ் ஒன்று கடந்த புதன்கிழமை வெளியானது. இதில் புஷ்பாராஜின் வருகையை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும்படி ‘புஷ்பா எங்கே?’ (Where is Pushpa?) என தலைப்பிடப்பட்டிருந்தது. அது கான்செப்ட் டீசருக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘புஷ்பா 2’ படத்தில் பகத் பாசில் நடித்துள்ள காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இதன் முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராகவும் செம்மரக் கடத்தல் செய்பவராகவும் நடித்திருந்தார். உலகம் முழுவதும் இதன் முதல் பாகம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானபோது, அங்கு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை வசூலித்தது.
’புஷ்பா 2’ என்பது ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். இது ‘புஷ்பா: தி ரூல்’ என வெளிவரவுள்ளது. தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணம் முதல் பாகமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் மாபெரும் வெற்றி. அல்லு அர்ஜூனின் கதாபாத்திரம், வசனங்கள் போன்றவை பல பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் பல ரசிகர்களையும் கவர்ந்தது. தற்போது, இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.