தெறிக்கவிடும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளோடு தொடங்கி உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோடு அருண் விஜய் நடிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வெளியான 24 மணி நேரத்திலேயே கிட்டத்தட்ட மில்லியன் பார்வைகளை நெருங்கி யூடியூப் டிரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு எமி ஜாக்சன் இந்த படத்தில் நடிக்கிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் நடிக்கிறார். இவர்களுடன் அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தை எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரித்துள்ளனர். வம்சி, பிரசாத் கோதா மற்றும் ஜீவன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இயக்குநர் விஜய் 70 நாட்களில் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார்.
படத்தைப் பார்த்த லைகா புரொடக்ஷன்ஸ் தரப்பினர் படம் அனைத்துத் தரப்பிலான பார்வையாளர்களையும் கவரும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்தார்கள். மொழிகளைத் தாண்டி, அனைத்து தரப்பினருக்கும் போய் சேரும் வகையிலான கதையம்சத்தைக் கொண்டுள்ளதால், நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்து விவரங்கள் விரைவில் தெரியவரும்.