‘மெரினா புரட்சி’, ‘முத்துநகர் படுகொலை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எம்.எஸ். ராஜ் இயக்கும் புதிய படம் ‘அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார்.’
இந்த படத்தின் தலைப்பை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட வேங்கைவயல் பட்டியல் இனத்து மக்கள் மற்றும் ஜாதி சான்றிதழ் கிடைக்காததால் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போராடி வரும் திருப்பத்தூர் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் சாதிய வன்கொடுமையால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட உடன்குடியை சேர்ந்த தூய்மை பணியாளர் திரு சுடலை மாடனின் குடும்பத்தினர் இன்று வெளியிட்டனர். புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் இந்த படம் பற்றி இயக்குநர் எம்.எஸ். ராஜ் பேசும்போது, ”இந்த படம் அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75-ம் ஆண்டு நெருங்கும் சூழலிலும் அட்டவணை சாதி மக்கள் சந்திக்கும் வன்கொடுமைகளையும் அரசாங்கங்களின் தோல்விகளையும் துணிச்சலுடன் அலசும் விதத்தில் இருக்கும்.
முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கிறார்கள். படத்தின் காட்சிகள் தஞ்சாவூர்,ஏர்வாடி, மதுரை மற்றும் மும்பையில் படமாக்க பட்டுள்ளது.நான் இதற்கு முன்பு இயக்கிய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணி அரசியலை சொல்லும் ‘மெரினா புரட்சி’ என்ற ஆவணப்படம் , ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் நடத்திய படுகொலையின் பின்னணியை சொல்லும் ‘முத்துநகர் படுகொலை’ ஆவண படத்திற்கும் பேராதரவு கிடைத்தது.
‘மெரினா புரட்சி’ நார்வே திரைப்பட விழா விருது, மற்றும் கொரிய தமிழ்ச் சங்க விருதுகளையும் வென்றது.
முத்துநகர் படுகொலை டெல்லி தாதா சாகிப் திரைப்பட விழா விருது, வேர்ல்ட் கார்னிவல் சிங்கப்பூர் விருது, நார்வே தமிழ் திரைப்பட விழா விருது மற்றும் பங்காளதேஸ் சினிமா கிங் சர்வதேச திரைப்பட விழா விருது என நான்கு விருதுகளை வென்றது” என்றார்.
படக்குழு:-
இசை- ராம் பிரபு
பாடல்கள் – பாரதிக்கனல்
ஒளிப்பதிவு – அன்பு சரத்
படத்தொகுப்பு – ஜாவேத் அஷ்ரப்
இணைத் தயாரிப்பு – சாவண்ணா மகேந்திரன் மற்றும் ஆதிமூலப் பெருமாள்