காதல் சார்ந்த கதைக்களம், எளிமையான பட்ஜெட்டில் திரைக்களம் ‘1982 அன்பரசின் காதல்.’
அந்த இளைஞன், தான் ஒருதலையாய் காதலிக்கும் பெண் யாரையோ தேடி வெளியூர் செல்ல அவளோடு துணைக்குப் போகிறான். அப்போது இருவரும் எதிர்பாராத பிரச்சனையில் சிக்கிக் கொள்ள, அங்கு ஒரு முரட்டு ஆசாமி அவர்களைப் பாதுகாக்க முன்வருகிறான்.
அவனை நம்பிப் போன அந்த ஜோடி, அவனால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரப்போவதை அறிந்து தப்பித்து ஓட முயற்சிக்கிறார்கள். காடு மேடு, மலை முகடு, சேறு சகதி என பல வழிகளில் புகுந்து ஓடுகிறார்கள். அவன் விடுவதாயில்லை. வெறி பிடித்தவன் போல் அவர்களைத் துரத்துகிறான்.
கதையின் போக்கு இப்படியிருக்க அவனிடமிருந்து அந்த ஜோடி தப்பித்தார்களா? அவர்களை துரத்துகிற ஆசாமியின் பின்னணி என்ன? என்பதெல்லாம் மிச்ச மீதி திரைக்கதை. இயக்கம் உல்லாஷ் சங்கர்
சிலும்பிப் பறக்கும் தலைமுடி, நீள்வட்ட முகத்துக்கு அழகு சேர்க்கும் கண்ணாடி என மனதில் நிற்கும் எளிமையான தோற்றத்துடன் வருகிறார் அஷிக் மெர்லின். காதலி அழைத்ததும் துணைக்குச் செல்வது, இருவரும் ஆபத்தில் சிக்கியதும் பயத்தை ஓரங்கட்டி, தன் காதலியை காப்பாற்ற துடிப்பது, பாடல் காட்சியில் பெரிதாய் அலட்டிக் கொள்ளாத அசைவுகள் என தனக்கான பங்களிப்பில் நிறைவு.
அஷிக்கின் காதலியாக வருகிற சந்தனாவுக்கு சத்தான கேரளத்து தேகம். அவரது மெல்லிய புன்னகையும் இயல்பான நடிப்பும் கவர்கிறது.
பஞ்சு மெத்தைக்கு காற்றடைத்தது போலிருக்கிறார் கதையின் இன்னொரு நாயகியாக வருகிற அருணிமா ராஜ். அவரது திமிறும் முன்னழகும் மலர்ந்த சிரிப்பும் இளைஞர்களின் ஹார்மோனை உசுப்பேற்றாமல் விடாது. அம்மணிக்கு காதலனுடன் நெருக்கமான, இறுக்கமான காட்சியும் உண்டு. அப்பா மீது பயம், உணர்ச்சி கொப்பளிக்கும் காதல் என நடிப்பிலும் அந்த மலையாள தேசத்து மல்கோவாவின் பங்களிப்பு பக்கா!காதல் காட்சிகளில் வெளிப்படுத்தும் அசட்டுத் துணிச்சலால் கவனிக்க வைக்கிறார் அருணிமாவின் காதலனாக வருகிற அமல் ரவீந்திரன்.
இரண்டாவது நாயகியின் அப்பாவாக, துப்பாக்கி தயாரிப்பதில் தேர்ந்தவராக இயக்குநர் உல்லாஷ் சங்கர். படத்தின் முன்பாதியில் வில்லத்தனம் காட்டுகிற அவர், அப்படி மாறியதற்கான காரணங்கள் பிளாஷ்பேக் காட்சிகளாக விரியும்போது பரிதாபப்பட வைக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் வருகிற ஹரிஷ் சிவப்பிரகாசம், செல்வா, சுமதி தாஸ், தமிழன் உள்ளிட்டோரும் கதைக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
சிந்தாமணி இசையில் ‘வெள்ளிநிலவே தோன்றி மறைந்தாய்’ பாடல் இதம்.
அனு மோட் சிவராம், பென்னி இருவரது உழைப்பில் பின்னணி இசை நேர்த்தி.
தமிழக கேரள எல்லைப் பகுதிகளின் செழிப்பான பசுமையை அதன் அழகு குறையாமல் படமாக்கியிருக்கிறது செபாஸ்டியனின் கேமரா.
மகள் காதல்வயப்பட்டதை அறிந்த அப்பா, நின்று நிதானிக்காமல் அவசர கதியில் எதையோ செய்யப் போக அவை விபரீத முடிவைத் தருகிற விதத்தில் அமைந்த இந்த படத்தின் கதையோட்டம், பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோருக்கு நல்லதொரு பாடம்!