வசந்த் ரவி கதாநாயகனாக நடித்து, வரும் ஜூன் 23-ம் தேதி வெளிவரவிருக்கும் படம் ‘அஸ்வின்ஸ்.’ அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கியிருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 18.6. 2023 அன்று நடந்தது.
நிகழ்வில் வசந்த் ரவி பேசியபோது, “இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது. ‘தரமணி’, ‘ராக்கி’ ஆகிய படங்களை முடித்துவிட்டு என்ன மாதிரியான படங்களில் நடிக்கலாம் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. அப்படி தருண் மூலமாக என்னைத் தேடி வந்த படம்தான் இது. ஹாரர் படத்தில் நடிக்க வேண்டாம் என்றிருந்த என்னை இந்த கதை கேட்டதுமே நடிக்கலாம் என்று தோன்ற வைத்தது. படத்தின் இறுதியில் முக்கியமான மெசேஜ் உள்ளது. படத்தின் ரியல் ஹீரோ இசையமைப்பாளர் விஜய்தான்” என்றார்.
இயக்குநர் தருண் தேஜா பேசியபோது, “கொரோனா சமயத்தில் ஒரு ஷார்ட்ஃபிலிம் எடுத்திருந்தோம். அதை நடிகை விமலா ராமன் பார்த்துவிட்டு தயாரிப்பு தரப்பிடம் காண்பித்தார். பின்பு தயாரிப்பாளர் பாபி சாரிடம் வீடியோ காலில் கதை சொல்லி சம்மதம் வாங்கினேன். இந்த கதைக்கு எல்லாவிதமான உணர்ச்சிகளும் தரக்கூடிய ஒரு நடிகர் தேவை என நினைத்திருந்தபோது, வசந்த் ரவி உள்ளே வந்தார். சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். அதேபோல, படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளனர். கடின உழைப்பிற்காகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
படத்தின் நாயகி சரஸ்வதி மேனன் பேசியபோது, “இந்தக் கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. ஹாரர் படங்கள் கூட பார்க்காத நான் அதுபோன்ற ஜானரில் படங்கள் நடிப்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள விமலா ராமன் பேசியபோது, “இந்த படத்தை ஷார்ட்ஃபிலிமாக பார்த்தபோதே பிடித்தது. இந்த படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது மகிழ்ச்சி. படத்தின் இசை எனக்கு பிடித்திருந்தது. லண்டனில் மைனஸ் 4 டிகிரி குளிரில் படமாக்கினோம். தமிழ் சினிமாவுக்கு வேறு விதமான மேக்கிங்கை காட்ட வேண்டும் என்ற எண்ணம் எங்கள் அனைவருக்குமே இருந்தது. அதை செய்திருக்கிறோம். உங்கள் ஆதரவை எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.