திரைக்கதை வசனகர்த்தா அஜயன் பாலா இயக்கும் முதல் திரைப்பட பூஜையில் நடிகர் சிவகுமார் பங்கேற்று வாழ்த்து!

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ்த் திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வருபவர் அஜயன் பாலா. அவர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்குகிறார்.

‘கன்னிமாடம்’ படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ‘கோலிசோடா 2’ புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடிக்கிறார். யோகி பாபு மற்றும் முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்ட அழகான காதல் கதையான இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. செப்டம்பர் 1 அன்று படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

படம் பற்றி அஜயன் பாலா பேசியபோது, “மனதைத் தொடும் காதல் கதை ஒன்றை மலைப்பகுதியின் பின்னணியில் மக்களுக்கு சொல்ல உள்ளோம். கதையை மட்டுமே நம்பி என்னுடன் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் இப்படத்தை தயாரிக்கும் மருத்துவர் அர்ஜுன் அவர்களுக்கும் நன்றி. திரைப்படத்தின் தலைப்பு மற்றும் இதர தகவல்கள் விரைவில் தெரிவிக்கிறோம்” என்றார்.

அஜயன் பாலா, ‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’, உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

2017-ல் வெளிவந்த ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ள அஜயன் பாலா, தற்போது முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்குகிறார்.

நல்ல கதையின் மீது பெரும் நம்பிக்கை வைத்து தமிழ் சினிமாவின் தரமான கலைஞர்களை கொண்ட கூட்டணி இப்படத்திற்காக கைகோர்த்துள்ளது. செழியன் ஒளிப்பதிவை கவனிக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கையாள, சித்து குமார் இசையமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here