என்னால் இந்த படத்தின் கதையை போல் ஒரு கோணத்தில் சிந்திக்க முடியாது! -‘அடியே’ பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேச்சு

ஜீ. வி. பிரகாஷ், கௌரி கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர்ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘அடியே.’

‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக், மல்டிவெர்ஸ் என்ற எண்ணத்தை மையப்படுத்தி ரொமான்டிக் ஜானரில் இயக்கியிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு தேவன், வசந்த பாலன், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், ” அடியே எனக்கு மிகவும் ஒரு ஸ்பெஷலான படம். ஏற்கனவே நான் இயக்கிய ‘திட்டம் இரண்டு’ என்ற படத்தை திரையரங்க வெளியீட்டிற்காக இயக்கினேன். ஆனால் கொரோனா காரணமாக அந்த திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியானது. அடியே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஜீ. வி பிரகாஷ் அற்புதமான மனிதர். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். அவரை பார்க்கும் போது சற்று பொறாமை ஏற்படும். அவரை நான் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சந்தித்திருந்தால் என்னுடைய ஆக சிறந்த நண்பராக இருந்திருப்பார். அவருக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியான தினத்தன்று தான் இப்படத்தில் ஒரு வசனத்தை படமாக்கினோம். அது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, அதனை எளிதாக எடுத்துக்கொண்டு பயன்படுத்த அனுமதி கொடுத்தார்.

இந்த படத்திற்காக நிறைய நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதியில் கௌரி கிஷன் பொருத்தமாக இருந்ததால் அவரை தேர்வு செய்தோம். அவருக்குள் ஒரு ஃபெமினிஸ்ட் இருக்கிறார். இந்தப் படத்தில் நாயகன், ‘டி’ போட்டு பேசினால் பிடிக்கும் என்பார். கௌரி என்னிடம் இந்த ‘டி’ என்பது அவசியமா? என கேட்டார். பிறகு அவருக்கு எந்த சூழலில் இந்த வார்த்தை இடம் பெறுகிறது என்று விளக்கம் அளித்த பிறகு ஒப்புக்கொண்டார். நல்ல நடிகை. இந்த திரைப்படத்தில் முழு திறமையை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள்.

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்டோம். முதலில் அவர் பிஸியாக இருப்பதாக சொன்னார். பிறகு வேறு ஒரு நடிகரிடம் கதையை சொல்லி நடிக்க சம்மதம் பெற்றோம். இருப்பினும் இறுதியாக அவரிடம் ஒரு முறை கேட்கலாம் என்று கூறி, தொடர்பு கொண்டு கேட்டபோது சம்மதித்தார். அவரை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறோம். திரையரங்கத்திற்கு வந்து பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

நாயகன் ஜீ. வி. பிரகாஷ் பேசுகையில்,” அடியே மிகவும் வித்தியாசமான படம். வழக்கமான படம் கிடையாது. ஃப்யூச்சர்ஸ்டிக் சயின்ஸ் ஃபிக்சன் லவ் ஸ்டோரி. இதுவே மிகப்பெரிய சவாலாக இருந்தது. சென்னையில் பனிமழை பொழியும் என்பார். ஆனால் அதனை படக்குழு திரையில் நேர்த்தியாக செய்து காட்டியது.

படப்பிடிப்பு தளத்தில் வெங்கட் பிரபுவுடன் இசை தொடர்பாக விவாதிப்போம்.

நான் அண்மைக்காலமாக பணியாற்றியதில் சிறந்த பட தயாரிப்பு நிறுவனம் இதுதான் என்று உறுதியாக சொல்வேன். இந்த நாளில் இந்த தளத்தில் படப்பிடிப்பு நடக்கும் என்றால் அது உறுதியாக நடக்கும். அவர்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். நம் நேரத்தையும் வீணடிக்க மாட்டார்கள். நேரத்திற்கு மதிப்பளிப்பவர்கள். இதனால் இந்த நிறுவனத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என உறுதியாக நம்புகிறேன்.

நடிப்பை பொறுத்தவரை கௌரி கிஷன், மதும்கேஷ் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் குறித்து இயக்குநருக்கு ஒரு கற்பனையான காட்சி அமைப்பு இருந்தது. ஃபியூச்சரஸ்டிக்.. மல்டிவெர்ஸ்.. இதையெல்லாம் எழுதுவதற்கு எளிதாக இருக்கும். எப்படி காட்சிப்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்டேன். ஆனால் அதை எல்லாம் அவர்கள் நேர்த்தியாக காட்சிப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரன் அருமையான இசை ஆல்பத்தை வழங்கி இருக்கிறார். இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்றார்.

நாயகி கௌரி கிஷன் பேசுகையில், ‘இந்த படம் என்னுடைய திரையுலக பயணத்தில் முக்கியமான படம். என்னுடைய வாழ்க்கையில் ’96’ படத்தில் எப்படி நடிக்க சம்மதித்தேனோ அதேபோன்று ஒரு சூழல் இந்த படத்திலும் ஏற்பட்டது. 96 படத்திற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஏராளமான கதைகளைக் கேட்டேன். ஆனால், சில கதைகள் மட்டும் தான் மனதிற்கு நிறைவாக இருந்தது. இந்த படத்தின் கதையைக் கேட்டவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.

இந்த படத்தில் செந்தாழினி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அவள் உறுதி மிக்கவள். அன்பானவள். பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரம். இந்த படத்தின் இயக்குநரின் அடுத்த படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என்றார்.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில்,”இந்த படத்தில் நான் விஞ்ஞானியாகவும், கெளதம் வாசுதேவ் மேனனாகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இரண்டுமே சிரமமான கதாபாத்திரங்கள் தான்.இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கதை சொல்லும் போதே மிகவும் பிடித்திருந்தது. வித்தியாசமாகவும் இருந்தது. கௌதம் வாசுதேவ் மேனனாக நடித்திருக்கிறேன் என்று இன்னும் அவருக்கு தெரியாது. அவர் கோபித்துக் கொள்ள மாட்டார் என்பதால் அவராக நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுத்தது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தான். அவர் ஒரு பல குரல் வித்தகர்.

இந்த திரைப்படத்தில் நான் விஜய் சார் படத்தை இயக்கி விட்டதாக கதையில் வரும். இந்த விளம்பரம் வெளியான பிறகு தான் எனக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது” என்றார்.

தயாரிப்பாளர் பிரேம்குமார் பேசுகையில், ” கொரோனா காலகட்டத்தில் வீட்டில் அமர்ந்து ‘திட்டம் இரண்டு’ எனும் படத்தை பார்த்தேன். வித்தியாசமாக இருந்தது. என் மகனிடம், இந்த படத்தின் இயக்குநர் யார்? என்று கேட்டேன். அவர் விக்னேஷ் கார்த்திக் என்று பதிலளித்தார். அவரை சந்திக்கலாம் என்று என்னுடைய விருப்பத்தை தெரிவித்தேன். சில நாட்களில் வித்தியாசமான கதை ஒன்று இருக்கிறது. தயாரிக்கிறீர்களா? என்று என் நண்பர் கேட்டபோது, சரி என்று சொன்னேன். அப்போது என்னிடம் கதை சொல்ல வந்தவர் விக்னேஷ் கார்த்திக். கதையைக் கேட்டதும் தயாரிக்க சம்மதித்தேன்.

நாங்கள் இதுவரை 23 தொழில்களில் ஈடுபட்டிருக்கிறோம். அனைத்தும் ஆண்டவன் அருளால் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு படம் தயாரித்திருக்கிறேன் என்பதை விட, ஒரு நல்ல படத்தை இந்த சமுதாயத்திற்கு கொடுத்திருக்கிறேன் என்ற மன நிறைவு இருக்கிறது. இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு தேவன் இயக்கத்தில் ‘போட்’ எனும் திரைப்படமும் தயாராகி இருக்கிறது. திறமையுள்ள இயக்குநர்களை வாய்ப்பளிப்பதற்காக ஆண்டவன் வசதியையும், வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், ”ஜீ. வி. பிரகாஷ் வெரி ஸ்வீட் பாய். மியூசிக், பெர்ஃபாமன்ஸ் என இரண்டிலும் கலக்கும் பெக்யூலியரான கேரக்டர். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து இன்று தமிழில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்திருக்கிறார். எல்லோரிடமும். எல்லா தருணத்திலும் இனிமையாகவே பேசக் கூடியவர்.

இன்றைய இளைய தலைமுறை படைப்பாளிகளை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. சயின்ஸ் ஃபிக்சன் படத்தை தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக சொல்ல முடியுமா? என்ற கேள்வி இருக்கிறது. இதுபோன்ற படங்களில் எல்லாம் ஹாலிவுட்டில் தான் தயாரிப்பார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் இது எப்படி சாத்தியம்? அதுவும் சயின்ஸ் பிக்சன் விசயத்தை காதலுடன் கலந்து கொடுப்பது என்பது ஆச்சரியமான ஒன்று.

இந்த முன்னோட்டத்தை பார்க்கும் போது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. என்னால் இது போன்ற ஒரு கோணத்தில் சிந்திக்க முடியாது. இந்த விசயத்தில் நம்பிக்கையுடன் செயல்பட்ட விக்னேஷ் கார்த்திக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற சயின்ஸ் ஃபிக்சன் கதையை முதலில் கேட்டு, தயாரிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘நிழல்கள்’ படத்தின் பாடல்களை நான் முதன் முதலாக கேட்டபோது ஏகாந்தமாக உணர்ந்தேன். அந்த உணர்வு ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இந்த படத்தின் பாடல்களை கேட்கும் போதும் ஏற்பட்டது” என்றார்.

இயக்குநர் சிம்பு தேவன் பேசுகையில், ”மல்டிவெர்ஸ் என்பதனை நாம் அவெஞ்சர்ஸ் போன்ற ஹாலிவுட் படத்தில் தான் பார்த்திருக்கிறோம். அதனை தமிழில் வேறு ஒரு வடிவத்தில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜீ.வி. பிரகாஷ் நாளாக நாளாக இளமையாகத் தெரிகிறார். அவரை இந்த படத்தில் ஸ்கூல் ஸ்டுடன்ட்டாகப் பார்க்கும் போது எந்த வித்தியாசமும் தோணவில்லை. ரசிக்க தோன்றுகிறது. வாழ்த்துக்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here