பயில்வான் ரங்கநாதனுக்கு இரண்டு ஆஸ்கர் விருது, சென்னையில் பனி மழை, நடிகர் கூல் சுரேஷ் பேசும் திறனற்றவர்… வித்தியாசமான அனுபவத்திற்கு ‘அடியே’ படத்தை தியேட்டரில் பாருங்கள்! சொல்கிறார் ஜீ வி பிரகாஷ்

ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடிக்க, விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே.’

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பேரலல் யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.‌ அப்போது படத்தின் தயாரிப்பாளர் பிரேம்குமார், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார், நடிகை கௌரி ஜி. கிஷன், ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பாளர் முத்தையன், நடிகர் மதும்கேஷ் பிரேம் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், ”மாலி & மான்வி பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு வேறு தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றும்போது சற்று கடினமாக இருக்கும். ஏனெனில் இங்கு அனைவரையும் சௌகரியமான சூழலில் பணியாற்ற அனுமதிப்பார்கள். படத்தின் தயாரிப்பாளரை முதன்முதலாக சந்தித்தபோது.. வெள்ளை வேட்டி, தாடி.. ஆகியவற்றுடன் ஒரு டான் ஃபீலில் இருப்பார். அதன் பிறகு அவருடன் பழகப் பழக.. அவர் வில்லன் இல்லை ஹீரோ என்று தெரிந்து கொண்டேன். அவருடன் ஓராண்டுக்கு மேலாக பழகி வருகிறோம். ஒரு முறை கூட அவர் முகம் சுழித்தோ… கோபப்பட்டோ.. பார்த்ததில்லை. எப்போதும் அவருடைய முகத்தில் ஒரு புன்சிரிப்பு இருந்து கொண்டே இருக்கும். எங்களை நம்பி முதலீடு செய்திருக்கிறார். நாங்கள் கடினமாக உழைத்து சிறந்த படைப்பை வழங்கி இருக்கிறோம் என நம்புகிறோம்.

நானும், படத்தொகுப்பாளர் முத்தையனும் அலுவலகத்திலேயே இருப்போம். கிட்டத்தட்ட பத்து மாதத்திற்கு மேலாக அலுவலகத்திலேயே தங்கி படத்தொகுப்புப் பணிகளை கவனித்தோம். இரவு 12 மணி அளவில் கூட ஏதேனும் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என விரும்பினால், அவரிடம் சொல்வேன். அவரும் சிரமம் பார்க்காமல் அந்தப் பணிகளை செய்து கொடுப்பார். தொடர்ந்து பத்து மாதத்திற்கு மேலாக பணியாற்றியதால் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு சென்று விட்டது. அதன் பிறகு மருத்துவமனையில் இருந்து கொண்டே இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நிறைவு செய்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய்யுடன் இணைந்து ஏற்கனவே ‘திட்டம் இரண்டு’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இதனைத் தொடர்ந்து ஆந்தாலஜி படைப்பு ஒன்றிலும் இணைந்து பணியாற்றினோம். அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அவர் ஒரு சிறந்த தொழில் முறையிலான ஒளிப்பதிவாளர். தயாரிப்பாளர்களுக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நட்புடன் பணியாற்றக் கூடியவர். படப்பிடிப்பு தளத்தில் நான் அடுத்த காட்சியும் கோணமும் இப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதற்கான பணிகளை அவர் அங்கு நிறைவேற்றுவார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் பதிவரங்கத்திற்கு சென்று விட்டால்… அது ஒரு நேர்நிலையான அதிர்வலைகளை வெளிப்படுத்தும் இடம் என்பதை உணரலாம். அது ஒரு போதை போல் இருக்கும். போதை என்றவுடன் தவறாக நினைத்து விட வேண்டாம். ஒருவித இணக்கமான சூழலாக கருதிக் கொள்ளுங்கள்.
அது ஒரு பாய்ஸ் ஹாஸ்டல் போல் இருக்கும். ஏராளமான நண்பர்கள் அங்கு தான் எனக்கு கிடைத்தார்கள். ஜஸ்டின் பிரபாகரனை எனக்கு ஏற்கனவே பிடிக்கும். இந்த படத்தில் பணியாற்றும்போது அவரை நிறைய பிடித்து விட்டது. எப்போதும் அமைதியாகவே இருப்பார். தொடக்கத்தில் அவர் ஒரு இன்ட்ரோவர்ட் போலத்தான் இருப்பார். ஆனால் அவருக்குள் ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வாளர் இருக்கிறார். அவருடைய இசையமைப்பு.. இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.

இந்தப் படத்திற்கு முதலில் வேறு ஒரு நாயகியை தான் ஒப்பந்தம் செய்திருந்தோம். படப்பிடிப்பிற்கு பத்து நாள் முன்னதாக இந்த நாயகிக்கு பதிலாக வேறு ஒரு நாயகியை தேர்வு செய்யலாம் என நான்தான் தயாரிப்பாளிடம் சொன்னேன். தயாரிப்பாளர் எதுவும் பேசாமல் உங்களின் முடிவு எதுவோ.. அதையே பின் தொடருங்கள் என்றார்.

இந்த கதைக்கு பொருத்தமான ஒரு நடிகை தேவைப்பட்டது. அதனால் கௌரி கிஷனை போனில் தொடர்பு கொண்டு படத்தின் முதல் பாதி கதையை சொன்னேன். சொல்லும் போதே இவர்கள் என் கதையை கேட்டு நடிக்க சம்மதிக்க வேண்டும் என்று மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டேன். இரண்டாம் பாதியை அவரது வீட்டிற்கு சென்று சொன்னேன். பிறகு நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜீ. வி. பிரகாஷ் குமார். எப்போதுமே சந்தோஷமாக இருப்பவர். அவரை பார்த்தவுடன் அவருடன் நட்பு கொள்ள வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அவரிடமும் ஒரு நகைச்சுவை உணர்வு பொதிந்திருக்கிறது. அவர் மனதில் பட்டதை உடனே தெரிவித்து விடுவார். நன்றாக இருப்பதை நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவார். நன்றாக இல்லை என்பதையும் நன்றாக இல்லை என்றும் சுட்டிக்காட்டுவார். அவருடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க இயலாத அனுபவம்.

‘அடியே’ அடிப்படையில் ஒரு அழகான காதல் கதை. குறும்பும், வேடிக்கைகளும் நிறைந்த கதை. பேரலல் யுனிவர்ஸ் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஆகியவற்றுடன் கலந்த ஒரு கதை. ஒரு வித்தியாசமான திரைப்படம். நம்பிக்கையுடன் கடினமாக உழைத்திருக்கிறோம். ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசுகையில், ” இந்த திரைப்படம் வழக்கமான திரைப்படம் அல்ல. வித்தியாசமான படைப்பு. புது அனுபவம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த படத்தை தாராளமாக திரையரங்கிற்கு சென்று கண்டு ரசிக்கலாம்.
பயில்வான் இரண்டு ஆஸ்கார் விருது வாங்கியிருப்பார்.. சென்னையில் பனி மழை.. நடிகர் கூல் சுரேஷ் பேசும் திறனற்றவர்.. என இயக்குநர் ஒவ்வொரு நாளும் எனக்கு அதிர்ச்சிகளை கொடுத்துக் கொண்டே இருப்பார். வித்தியாசமான படைப்பாளியாக இருக்கிறாரே..! என நினைக்க வைப்பார்.

தயாரிப்பாளர் பிரேம்குமாருக்கு நன்றி. படத்தை தெளிவாக திட்டமிட்டு நிறைவு செய்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தமிழ்த் திரையுலகில் வலிமையான பட தயாரிப்பு நிறுவனமாக உயர்வார்கள்.

படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான முதல் படம் டிஜிட்டல் தளத்தில் வெளியானது. அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘அடியே’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டம் வெளியான பிறகு அவருக்கு திரையுலகிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. விரைவில் அவரும் முன்னணி இயக்குநராக உயர்வார்” என்றார்.

தயாரிப்பாளர் பிரேம்குமார் பேசுகையில், ”எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படமான ‘அடியே’ திரைப்படம் மிகப்பெரியளவில் வெற்றியடையும். ஏனெனில் வித்தியாசமான திரைப்படமாக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தலைமையிலான குழுவினர் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் நடித்த அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில், ” அடியே என்னுடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம். இந்த வாய்ப்பை அளித்ததற்காக மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது வித்தியாசமான படம். பேரலல்யுனிவெர்ஸ், ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் இந்தியாவில் இதுவரை இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில்லை. இந்தப் படத்தின் கதை சிக்கலானது. ஆனால் பட தயாரிப்பு நிறுவனத்தின் முழுமையான ஒத்துழைப்பால், இப்படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறோம். இதற்காக அனைவருக்கும் நன்றி.

என் வாழ்க்கையில் எப்போதும் எதிர்பாராமல் தான் அனைத்தும் நடந்திருக்கிறது. 96 படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை போல்.. இந்த திரைப்படத்திலும் ஒரே ஒரு போன் கால் மூலம் கதையைக் கேட்டு, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். பொதுவாக கதைகளை கேட்டு பொறுமையாக தான் தேர்வு செய்து நடிப்பேன். ஆனால் அடியே படத்தின் கதையை முழுமையாக கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். அதற்கு மற்றொரு காரணம் ஜீ. வி. பிரகாஷ் குமார். அவருடைய இசைக்கு நான் ரசிகை. அவருடைய இசைக்கு அனைவரும் ரசிகர்கள் என்றாலும், இந்த படத்தில் அவருடைய நடிப்பு நன்றாக இருக்கும். அவருடன் இணைந்து நடித்தது மறக்க இயலாத வித்தியாசமான அனுபவம். இந்த படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயரில் பாடல் ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் என்னுடைய திரையுலக பயணத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். ஆகஸ்ட் 25ஆம் தேதி இப்படம் வெளியான பிறகு ரசிகர்களிடத்தில் என்னுடைய கதாபாத்திரம் பேசப்படும் என நம்புகிறேன்.

இந்த திரைப்படத்தில் வெங்கட் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நான் அவருடைய ரசிகையும் கூட அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறோம். இது வித்தியாசமாக இருந்தது.‌

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கோகுல், மிகவும் சிக்கலான இந்த கதையை எளிமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் மதும்கேஷ் பிரேம் புதுமுக நடிகராக இருந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார். ஐந்தாண்டுகளுக்கு முன் நான் புது முகமாக நடிக்கும் போது சந்தித்த அனைத்து சவால்களையும் அவரும் எதிர்கொண்டார்.

கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு மக்கள் திரையரங்கிற்கு வருகை தருவது அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தை காண திரையரங்கத்திற்கு வருகை தந்தால், ஒரு புதிய படைப்பை கண்டு ரசிக்கும் அனுபவம் கிடைக்கும். ” என்றார் ‌

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசுகையில், ” இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பது மிகவும் நிறைவாக இருந்தது. வித்தியாசமான ஒளியமைப்புகளின் மூலம் புரியும்படி காட்சிக்கோணங்களை அமைத்திருக்கிறார். இரு வேறு உலகங்களையும் நீங்கள் நன்றாக ரசிப்பீர்கள்.
படத்தொகுப்பாளர் முத்தையனின் கடின உழைப்பு இப்படத்தில் தெரியும். இது அவரின் சிறந்த படைப்பு என சொல்லலாம். அவரின் படத்தொகுப்பு தான்.. நான் இசையமைப்பதற்கு தூண்டுதலாக இருந்தது.
ஜீ. வி. பிரகாஷ் குமார் நேர்நிலையான அதிர்வலைகளை உண்டாக்கக்கூடியவர். இவர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here