மனிதர்களின் சுயநலத்துக்காக மனிதர்களின் உயிரைப் பறிக்கிற ‘நரபலி’ என்கிற குற்றச் செயலை மையப்படுத்தி சுற்றிச்சுழலும் ‘அந்த நாள்.’
திரைப்பட இயக்குநர் ஸ்ரீ தனது படத்திற்கான கதை விவாதத்திற்காக சென்னை ஈ சி ஆர் பகுதியிலுள்ள ஒரு தங்குமிடத்துக்கு தன் குழுவுடன் செல்கிறார். அங்கு அவர்கள் கையில் கேமரா ஒன்று கிடைக்கிறது. அதில் பதிவான வீடியோக்களில் அந்த இடத்துக்கு அவர்களுக்கு முன்பு வந்த சிலர் ஏதோவொரு அமானுஷ்ய சக்தியால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்திருக்கிற விஷயம் தெரிய வருகிறது. மிரண்டு போகும் அவர்கள், அங்கிருப்பது ஆபத்து என உணர்ந்து வெளியேறும் முடிவுக்கு வருகிறார்கள். அந்த நேரத்தில் அமானுஷ்ய சக்தியின் ஆட்டம் ஆரம்பாகி, அவர்களை வெளியேற விடாமல் தடுக்கிறது. ஒருவர்கூட அங்கிருந்து உயிருடன் தப்பிக்க முடியாது என்ற சூழ்நிலை உருவாகிறது.
இப்படி பரபரக்கும் கதையில், அடுத்தடுத்து நடப்பவையெல்லாம் பயங்கரமான சம்பவங்கள், எக்குத்தப்பான எபிசோடுகள். அவர்கள் உயிர் பிழைக்க முடிந்ததா இல்லையா என்பது நிறைவுக் காட்சி…
ஸ்ரீயாக ‘ஏவி எம்’ குடும்பத்தின் கலையுலக வாரிசான ஆர்யன் ஷியாம். இளவயது, அழகான தோற்றம் என ஹீரோ மெட்டீரியலாய் களமிறங்கியிருப்பவர் காட்சிகளின் பரபரப்பை உள்வாங்கி, பயத்தையும் பதட்டத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் விதம் கச்சிதம். கிளைமாக்ஸில் டெரரான முகபாவம் காட்டுகிற வாய்ப்பு. அதையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அழுத்தமான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிற பட்சத்தில், எதிர்காலம் ஆர்யன் ஷாம் மீது பெரியளவிலான புகழ் வெளிச்சத்தை பாய்ச்சாமல் விடாது!
மலையாளத்தில் அறிமுகமான படத்திலேயே கவனம் ஈர்த்த ஆத்யா பிரசாத்தை தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அவர், உயிர் பயத்தில் தவிக்கும் காட்சிகளில் தனது படபடக்கும் விழிகள் வழியாக பயத்தின் சதவிகிதத்தை அதிகரித்துக் காட்டியிருப்பதும், செழுமையான இளமையும் அழகும் மனதைக் கவர்கிறது.
சமையல்காரராக வருகிற இமான் அண்ணாச்சிக்கு போதையில் மிதக்கிற வேலை. தன்னைச் சுற்றி நடக்கும் ஆபத்துக்களை உணராமல், நடப்பதெல்லாம் ஷூட்டிங் நடக்கிறது என்கிற நினைப்பில் அவர் செய்யும் கிறுக்குத்தனங்கள் லேசாக சிரிக்க வைக்கின்றன.
‘ந.கொ.ப.கா’ ராஜ்குமார் அளவுக்கதிகமாக கத்திக் கொண்டிருக்க,
தன்னுடன் இருப்பவர்கள் உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருக்கும்போது மர்ம மனிதனால் வெட்டப்பட்டு வலியால் துடிக்கிற கிஷோர், நரபலி களத்துக்கு கொண்டு போகப்படுகிற லீமா, சாமியாராக வருகிறவர், போலீஸ் அதிகாரியாக வருகிறவர் என மற்றவர்களின் நடிப்பு நேர்த்தி.
திகிலும் திரில்லுமாய் வேகமெடுக்கும் திரைக்கதைக்கு சுறுசுறுப்பு தந்திருக்கிறது ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை. கதைக்களத்தை தரம் உயர்த்தியதில் சதீஷ் கதிர்ப்வேலின் ஒளிப்பதிவுக்கு பெரும் பங்கிருக்கிறது.
மனிதர்களை பலி கொடுக்கும் இடத்தை மிரட்டலாக கட்டமைத்திருக்கிறது கலை இயக்குநர் மகேந்திரனின் உழைப்பு.
ஹாலிவுட் படங்களைப்போல் நரபலி அது இதுவென நடுங்க வைக்கும் கதைச்சூழலை உருவாக்கியிருக்கும் இயக்குநர் வீவீ கதிரேசன், ஹீரோயின்கள் இருவர் இருந்தாலும் காதல், டூயட் என வழக்கமான கமர்ஷியல் மசாலாவை தொடாமல், கதையின் போக்கை கண்டபடி திசைமாற்றாமல், நடக்கும் சம்பவங்களின் பின்னணியிலுள்ள சஸ்பென்ஸை கிளைமாக்ஸ் வரை தக்க வைத்திருப்பது படத்தின் பலம்.
அந்த நாள், கதையம்சத்தால் வெகுநாள் கழித்தும் பேசப்படும்!