ஆரம்பத்திலிருந்து கிளைமாக்ஸ் வரை பரபரப்பாக நகர்கிற இன்ஸ்வெஸ்டிகேசன் திரில்லர்.
கொடைக்கானலில் ஒரு பார்க். அதில் இளைஞன் ஒருவன் தன்னைத்தானே கத்தியால் குத்தி வயிறைக் கிழித்துகொண்டு இறந்துபோகிறான்.
இறந்து யார், என்ன காரணம் என விசாரிக்கிற பொறுப்பு மெடிக்கல் லீலில் இருக்கிற காவல்துறை அதிகாரி அகிலன் வசம் ஒப்படைக்கப்படுகிறது. விசாரணையில் இறங்கியபின் பார்க்கில் நடந்தது போல முன்பே சிலர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டது தெரியவருகிறது.
அப்படி யாரெல்லாம் இறந்தார்களோ அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, என்ன நடந்தது, ஏது நடந்தது என்பதையெல்லாம் விசாரிக்கிறார் அகிலன். அதிலிருந்து, இறந்தவர்களுக்கிடையில் ஒரு ஒற்றுமை இருப்பதை தெரிந்துகொள்ளும் அகிலன், அடுத்தகட்ட விசாரணைகளில் சில அதிர்ச்சி தரும் உண்மைகளைக் கண்டுபிடிக்கிறார்; நடக்கும் தற்கொலைகளுக்கு காரணமான நபரை நெருங்குகிறார்.
அந்த நபர் யார்? தற்கொலைகள் ஒரே விதமாக நடப்பதற்கு என்ன காரணம்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்தபடி நகர்கிறது இடைவேளைக்கு பிறகான காடசிகள்…
தனக்கு கிடைத்த பாதி எரிந்த புத்தகத்தைப் படித்து நடக்கும் தற்கொலைகளின் ஆணிவேரை கண்டறிவதில் காட்டும் சுறுசுறுப்பு, தற்கொலை செய்து கொள்கிறவர்கள் எதில் ஒத்துப்போகிறார்கள் என்பதை கண்டறிவதில் காட்டும் புத்திசாலித்தனம், தன் எதிரிலேயே தற்கொலை நடப்பதை பார்த்தும் தடுக்க முடியாதபோது முகபாவங்களில் வெளிப்படும் இயலாமை… இப்படி அகிலாக வருகிற ஷாமின் நடிப்பில் இருக்கிறது குறிப்பிட்டுப் பாராட்டும்படி பல அம்சங்கள்.
கணவனின் உற்சாகங்களில் பங்கெடுத்துக் கொண்டு, அவன் தளரும்போது தாங்கிப்பிடிக்கிற மனுஷியாக அன்பையும் அரவணைப்பையும் தன் நடிப்பில் சரியானபடி தந்திருக்கிறார் ஷாமுக்கு மனைவியாக வருகிற நிரா.
ஷாமுடன் இணைந்து துப்பறிகிற அதிகாரி தன் இள வயதுக்கேற்ற துடிப்பை ஒவ்வொரு காட்சியிலும் கொண்டு வந்திருக்கிறார்.
குற்றவாளி என்ற சந்தேக வட்டத்துக்குள் வந்து, பின்னர் தற்கொலைகள் நடப்பதன் பின்னணியை விவரித்து, சம்பந்தப்பட்ட குற்றவாளி பற்றி எடுத்துச் சொல்கிற நிழல்கள் ரவியின் அனுபவ நடிப்பு,
கொலைகாரனாகி நிற்கிற மகனை எப்படியாவது திருத்திவிடலாம் என நினைத்து புதிய யுக்தியைக் கையாள்கிற ஜீவா ரவியின் உணர்ச்சி ததும்பும் பங்களிப்பு,
தோல்விகளைத் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலைக்கு ஆளாகி, சைக்கோ’வாக மாறுகிற கனமான கேரக்டரை ஏற்று தேவையான வெறித்தனத்தை தெளிவாகப் பரிமாறியிருக்கிற விதேஷ்…
காவல்துறை உயரதிகாரியாக அருள்ஜோதி, முக்கியமான கேரக்டரில் வந்துபோகிற இந்த படத்தின் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால்… அத்தனைப் பேரின் ஈடுபாட்டையும் சரியாக உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறது படத்தின் ஸ்கிரீன்பிளே
கே எஸ் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையிலிருக்கிற மிரட்டல் படத்தின் பெரும்பலம். அதற்காக அவரை தனியாக பாராட்ட வேண்டும்.
கச்சிதமான ஒளிப்பதிவு, அப்படியும் இப்படியுமாய் பிய்த்துப்போட்டு பின்னர் ஒரு நேர்க்கோட்டில் இணைக்கும்படியான காட்சிகளை குழப்பமின்றி அடுக்கியிருக்கிற எடிட்டிங் உள்ளிட்டவை படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன் ஜப்பானில் நடைமுறையிலிருந்த தண்டனை முறையை மையப்படுத்தி வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்கி அதிரடி நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால்.
அஸ்திரம் _ அசத்தலான அனுபவம்!
-சு.கணேஷ்குமார்