விஜய் சேதுபதி நடிப்பில், மலேசியா நாட்டின் பின்னணியில் பிரமாண்டமான பொருட்செலவில், அட்டகாசமான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்.’ ஆறுமுக குமார் இயக்கியுள்ள இந்த படம் வரும் மே மாதம் 23-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய விஜய் சேதுபதி, ”நான் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் என்னை நம்பி, என் திறமையை நம்பி என்னைப் படத்தில் சிபாரிசு செய்தவர் ஆறுமுகம். இருக்கும்போது வரும் உதவிகள் வேறு, ஆனால் நம்மை யாரென்றே தெரியாத காலத்தில், நம் மீது யாரோ ஒருத்தர் வைக்கிற நம்பிக்கைதான் மிகப்பெரியது. அதற்காக ஆறுமுகத்திற்கு நன்றி.
இசையமைப்பாளர் ஜஸ்டின், எனக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். ஏனென்று தெரியாது. அவர் மியூசிக் டைரக்டர், நன்றாக இசையமைப்பாளர் என்பதால் இல்லை. அவரைச் சந்தித்த முதல் நாளிலிருந்தே அவரை எனக்குப் பிடிக்கும். ஒரு முறை கீரவாணி அவரைப் பத்தி பேசியதாவது கேட்டேன். அவர் கூட பிறந்திருந்தால், அவர் வீட்டு ஆட்கள், எவ்வளவு சந்தோஷப்படுவாங்களோ எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது. நம்ம வீட்டு பிள்ளையைப் பத்தி இன்னொருத்தர் பேசுறது ஒரு மிகப்பெரிய ஆளுமை பேசுறதுங்கறது, எனக்கு பெரிய சந்தோஷமா இருந்தது. ஜஸ்டினோட ஒர்க் இந்த படத்துல மிகப் பிரமாதம், ரொம்ப அழகா செய்து தந்துள்ளார்.
அவினாஷ் சார் பார்க்க தான் கரடு முரடு, ஆனால் மனதில் ரொம்ப ஸ்வீட்டான ஆள். க்யூட். ருக்மணி மிகத் திறமையான நடிகை. மலேசியாவில் ஒரு இடத்தில் ஷூட் செய்தோம், அந்த இடத்தை பற்றிய வரலாறே சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி எனக்கேட்டேன், இங்கே வருவதால், இந்த இடம் பற்றி படித்து விட்டு வந்தேன் என்றார். இதிலிருந்தே உங்களுக்கு தெரியும் படத்திற்காக அவர் எவ்வளவு தயாராகியிருப்பார் என்று, மிக அற்புதமாக நடித்துள்ளார்.
பப்லு இவர் நல்லவரா? கெட்டவரா? என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் மிக நல்ல ரோல் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் கிரண் நான் காந்தி டாக்கீஸ் படம் செய்யும் போது பழக்கம், அவர் இப்படத்தில் அருமையாகச் செய்துள்ளார். கலை இயக்குநர் மிக அப்பாவியான மனிதர், இப்படி ஒரு மனிதருடன் தான் இருக்க வேண்டும் அந்தளவு நல்லவர். இப்படத்தில் சூப்பராக செய்துள்ளார்.
யோகிபாபு இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோ. அவரைப்பற்றி சமீபத்தில் தவறான செய்திகள் வருகிறது. அது உண்மையில்லை, அவர் நல்ல மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் அவரை எல்லோரும் ரசிப்பார்கள். இந்த படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.
இயக்குநர் ஆறுமுக குமார், ”எனக்காக விஜய் சேதுபதி, எவ்வளவு பெரிய உதவி செய்துள்ளார் என் மீது எவ்வளவு அக்கரை எடுத்துக் கொண்டுள்ளார் என வார்த்தைகளால் சொல்ல முடியாது. எனக்கு அது மிகவும் பர்ஸனல்.
ருக்மணி அவர் நடிப்புத் திறமை பற்றி சொல்லத் தேவையில்லை. இப்படத்தில் அவரை நடிக்க கேட்ட போது, எனக்குத் தமிழ் வராதே எனத் தயங்கினார். பரவாயில்லை இங்கு எல்லோருமே தமிழ் தெரியாமல் தான் நடிக்கிறார்கள் என சமாதனப்படுத்தினேன். ஷூட்டிங்கில் டயலாக் பற்றி ஆர்வமாக கேட்டுக்கொண்டே இருப்பார், அவர் பியூட்டிபுல் மட்டும் கிடையாது அருமையான நடிகையும் தான்.
யோகிபாபு மிகப்பெரிய பாத்திரம் செய்துள்ளார். அவரது பாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும். அவினாஷ் சாரோட லுக் ஒன்னே போதும். அவர் வந்தால் பயங்கர மாஸாக இருக்கும். பப்லு சார் மிக வித்தியாசமான ரோல் செய்துள்ளார். காஸ்ட்யூமர் சப்னா, யோகி பாபுக்கு ஒரு காஸ்டியூம் கொடுத்தார். அதுக்கு அவார்டே கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
ஆர்ட் டைரக்டர் முத்து சார் என் முதல் படத்திலிருந்து பணியாற்றி வருகிறார். அவருக்கு நன்றி. ஜஸ்டின் என் நெருக்கமான நண்பர், அவருடன் பணியாற்றுவது ஈஸி. இப்படத்தில் சாம் சி எஸ் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் கமர்ஷியல் படமாக இருக்கும்” என்றார்.
நடிகை ருக்மணி வசந்த் ”’ஏஸ்’ என் முதல் தமிழ்ப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் படம். விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடித்தது மிகுந்த மகிழ்ச்சி. நான் இதுவரை மிக அழுத்தமான கதாபாத்திரங்கள்தான் அதிகம் செய்துள்ளேன், ஆனால் இதில் கொஞ்சம் காமெடி கலந்த கேரக்டர்; இது அழகான மூவி. படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
நடிகர் கேஜிஎஃப் அவினாஷ், நடிகர் பப்லு பிரிதிவிராஜ், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டர் பென்னி ஆலிவர், உடை வடிவமைப்பாளர் சப்னா கால்ரா ஆகியோரும் நிகழ்வில் படம் குறித்து பேசினார்கள்.