புதுமுகத்தை வைத்து மித்ரன் ஜவஹர் எடுத்துள்ள இந்த படத்தில் கண்டிப்பாக நல்ல கதை இருக்கும்! -‘அரியவன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் நம்பிக்கை

மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், கமர்ஷியல் திரில்லர் சப்ஜெக்டில் உருவாகியுள்ள படம் ‘அரியவன்.’

இந்த படத்தை எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனம்  தயாரித்து வழங்குகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, காவ்யா,சூப்பர் குட் சுப்பிரமணி, ரவி வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

மார்ச் 3-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா பிப்ரவரி 22; 2023 அன்று சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நாயகன் ஈஷான், “இப்படிப்பட்ட பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததே ஆசீர்வாதம் தான். பொதுவாக இயக்குநர் மித்ரன் ஜவஹர் படங்கள் கருத்துச் சொன்னாலும், குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருக்கும். இந்தப்படம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை, அவர்கள் எப்படித் தவிர்க்கலாம் என்பதைச் சொல்கிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு வரும்போது ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். எல்லோரும் இந்தப்படத்திற்கு ஆதரவு தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நாயகி ப்ரணாலி, ”தமிழில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் சேர்ந்து வேலை பார்க்கும் படத்தில் நான் நாயகியாக நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்.விழாவின் சிறப்பு விருந்தினர் இயக்குநர் பாக்யராஜ், “அரியவன் டிரெய்லர் நன்றாக உள்ளது. எப்போதும் நம் மனதில் சில பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் பல காலமாக ஒலித்த பாடல் கண்கள் இரண்டால் பாடல். ஜேம்ஸ் வசந்தனின் அந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த படத்திலும் அருமையான பாடல் தந்துள்ளார். இயக்குநர் மித்ரனுடன் உத்தம புத்திரன் படத்தில் நடித்துள்ளேன். மிக நல்ல மனிதர் சாந்தமானவர். அவர் புது முகத்தை வைத்து எடுக்கிறார் என்றால் கண்டிப்பாக மிக நல்ல கதையாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. நாயகனுடைய கண் உயிரோட்டமாக இருக்கிறது. அவர் நல்ல படங்கள் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள். படத்தில் உழைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

படத்தின் கதாசிரியர் மாரிச்செல்வன்.சு., “எந்த கருத்தும் சொல்லக்கூடாது, அட்வைஸ் பண்ணக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதியது தான் இந்தக்கதை. ஆனால், இந்த கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டது என்பது தான் உண்மை. உலகம் தோன்றிய காலத்திலிருந்தே பெண்கள் மீதான வன்முறை இருந்து கொண்டே தான் இருக்கிறது அதை மாற்ற நம் மனங்கள் மாற வேண்டும். இந்த படம் அதைப்பற்றிப் பேசும். படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள்” என்றார்.இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், “இந்த படத்தின் ஒரு பாடலுக்கு நான் இசையமைத்துள்ளேன். அந்த பாடல் உருவானதே ஆச்சரியம் தான். நான் இருவரைப் பாட வைத்து ஒரு ரஃப் வெர்ஷனாக ஒரு பாடலை உருவாக்கி வைத்தேன். அது நண்பரிடத்தில் இருந்தது. அவர் அந்த பாடலை ஒரு நல்ல படத்தில் பயன்படுத்தக் கேட்கிறார்கள் என்றார். யாரெனக் கேட்டேன். இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் என்றவுடன் உடனே ஓகே சொல்லிவிட்டேன். அவர் மிகப்பெரிய இயக்குநர். மிக நன்றாகப் பாடலை உருவாக்கியுள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்” என்றார்.

சூப்பர் குட்’ சுப்பிரமணி, “திரையுலகைப் பொறுத்தவரை ஆக்சன் ஹீரோவுக்கு பெரிய மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் ஈஷான் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகிறார். உயராமான நடிகர் என்ற வகையில் தமிழில் அமிதாப்பச்சன் இல்லாத குறையை ஈஷான் நிறைவேற்றுவார்” என்றார்.

படக் குழு:
இயக்குநர்: மித்ரன் R. ஜவஹர்
கதை: மாரிசெல்வன் சு
வசனம்: ஜெகஜீவன் / மாரிசெல்வன் சு
பாடல், இசை: ஜேம்ஸ் வசந்தன் / வேத் சங்கர் / கிரி நந்த்
தயாரிப்பு நிறுவனம்: எம்ஜிபி மாஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
எடிட்டர்: எம். தியாகராஜன்
ஒளிப்பதிவு: கே.எஸ் விஷ்ணு ஸ்ரீ
பின்னணி இசை: VV & குழு
மக்கள் தொடர்பு: சதீஷ் குமார் – சிவா (AIM)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here