ஆல்கஹாலை ஆலகால விஷம் என அழுத்தந்திருத்தமாய் எடுத்துச் சொல்ல முயற்சித்திருக்கிற படைப்பு; ‘படிக்கிற வயதில் படிக்கிற வேலையை மட்டும் செய்யுங்கப்பா’ என பாடம் நடத்தியிருக்கிற பாடம்.
குடிப் பழக்கத்தால் கணவனின் உயிர் பறிபோக, மகனை ஒழுக்கமாக வளர்த்து, நன்றாகப் படிக்க வைத்து ஆளாக்க விரும்புகிறார் அந்த அம்மா. அம்மாவின் விருப்பப்படி மகன் நன்றாகப் படிக்கிறான். ஒரு கட்டத்தில் குடிக்கிறான். அந்த குடி அவன் குடியை எப்படியெல்லாம் கெடுத்தது, எந்த எல்லையில் கொண்டு நிறுத்தியது என்பதே படத்தின் கதை…
படத்தை தயாரித்து, இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கிற ஜெயகிருஷ்ணா ஆரம்பக் காட்சிகளில் கல்லூரி மாணவன் பாத்திரத்துக்கு பொருந்தாவிட்டாலும்… படிக்கிற வயதில் காதலில் விழுந்து, படுக்கையில் கலந்து, மண வாழ்க்கையில் நுழைந்து, படிப்பைத் தொலைத்து, குடிநோயாளியாகி, மனைவியின் மகிழ்ச்சியை ஒட்டுமொத்தமாக பறித்து, காலை இழந்து, குப்பையோடு குப்பையாக உருண்டு புரண்டு, குடிப்பதற்காக பிச்சையெடுத்து என நீள்கிற, வாழ்வின் அத்தனை சந்தோஷங்களுக்கும் ஆப்பு வைத்துக் கொள்கிற காட்சிகளில் தோற்றத்தால் கச்சிதமாகப் பொருந்தி, உடல்மொழியால் உரிய நடிப்பை தந்து ஏற்ற பாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்.
கதாநாயகியாக சாந்தினி. பணக்கார வீட்டுப் பெண்ணான அவருக்கு வறுமைச் சூழலில் வாழ்கிற நாயகன் வருகிற காதல் வழக்கமானதாக இருந்தாலும், அவனுக்கு மனைவியாகி அவர் படும் அவஸ்தைகளில் நாடு முழுக்க குடிநோயாளிகளின் மனைவிகள் அனுபவிக்கிற வலியை சமூகத்துக்கு உணர்த்தியிருக்கிறார்.
மகன் நன்றாக படித்துக் கொண்டிக்கிறான் என நம்பிக் கொண்டிருந்த நிலையில், அவன் நாள் முழுக்க குடித்துக் கொண்டிருந்தான் என தெரியவரும்போது அதிர்வதாகட்டும், அவனுக்கு தானே மது வாங்கிக் கொடுக்கும் நிலை வரும்போது கதறுவதாகட்டும், நிறைவுக் காட்சியில் ‘டாஸ்மாக்’ மீது ஆவேசமாய் பாய்வதாகட்டும் ஈஸ்வரி ராவின் நடிப்பு நேர்த்தி.
கதாநாயகி துயரப்படும்போதெல்லாம் தோள் கொடுக்கிற தீபாசங்கர் , உழைத்துப் பிழைக்க வந்தவனுக்கு போதையின் பாதையைக் காட்டுகிற தங்கதுரை, தொழிலாளிகளை மதிக்கிற கட்டட மேஸ்திரியாக சிசர் மனோகர் என இன்னபிற நடிகர், நடிகைகளின் பங்களிப்பும், கதைக்களத்தின் நீள அகலத்துக்கேற்ற கா.சத்தியராஜின் ஒளிப்பதிவும் நிறைவு.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாபா பாஸ்கர் ஆட்டம் போட்டிருக்கும் ‘குடி குடி குடி’ பாடலில் உற்சாகம் தெறிக்கிறது; பின்னணி இசையில் காட்சிகளின் தன்மைக்கேற்ப உழைத்திருப்பது தெரிகிறது.
ஆலகாலம் – உருவாக்கத்தில் குறைகள் இருந்தாலும் சொல்ல வந்த கருத்திலிருக்கிறது ஆழம்!