இறைப் பணியில் ஈடுபட விரும்புகிறவனை காலச்சூழல் இல்லற வாழ்க்கையில் இழுத்துத் தள்ளுகிற கதை.
சித்தப்பாக்களின் சதியால் தனது அப்பா, அம்மாவை இழந்த சிறுவன் தியாகு, காசிக்குப் போய் ஆன்மிக குரு ஒருவரின் அரவணைப்பில் வளர்ந்து பெரியவனாகி, சாமியாராகிறான். ஒரு கட்டத்தில் அவனிடமுள்ள எழுத்துத் திறமையை தெரிந்துகொள்ளும் குரு, அவனை எழுத்தில் முழுமையாக கவனம் செலுத்த சொல்கிறார். அதையடுத்து சென்னை வரும் தியாகு, வெளிநாட்டு இளம்பெண் ஒருவரை சந்திக்கிறான். அவள் தியாகு மீது காதல் வயப்படுகிறாள்; தியாகுவை சாமியார் கோலத்திலிருந்து விடுவித்து ஸ்மார்ட் லுக்குக்கு மாற்றுகிறாள். ஆனால், காலம் அவளை தியாகுவிடமிருந்து பிரிக்கிறது; தியாகு மீண்டும் சாமியாராகி ரிஷிகேஷ் சென்று நாட்களைக் கடத்துகிறான். எழுத்தில் கவனம் செலுத்துகிறான். எழுதிய படைப்புகள் புத்தகமாகி, அவனுக்கே தெரியாமல் அவன் எழுத்துக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கிறது. அதன் மூலம் அவனது சிறுவயது காதலியையும் சந்திக்கிற வாய்ப்பும் உருவாகிறது. அந்த சந்திப்பு அவனது வாழ்க்கைப் பாதையை தடம் மாற்றியதா, தடுமாற வைத்ததா என்பது கதையின் மிச்சசொச்சம்… இயக்கம் சிவா.ஆர்
தியாகுவாக வெற்றி. சாமியார் தோற்றத்தில் வலம் வரும்போது தோற்ற மாற்றம் தவிர நடிப்பில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதையும் செய்யாதவர், அயல்நாட்டுப் பெண்ணின் அன்பில் சிக்கியபின் காதல் உணர்வுகளை ஒருவித வெள்ளந்தித் தனத்துடன் வெளிப்படுத்தியிருப்பது, ஹேர் ஸ்டைலுடன் உடையிலும் மாற்றங்களுடன் தோன்றும்போது வெட்கத்தில் நெளிவது என சற்றே கவனம் ஈர்க்கிறார்.
ஜெர்மனிலிருந்து தமிழ்நாட்டில் கலை கலாச்சாரங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காக வந்தவராக மதுரா. எங்கிருந்து வந்தாலென்ன, தமிழ் சினிமா என்றால் கதாநாயகனை உருகு உருகி காதலிப்பதிலிருந்து தப்பிக்க முடியாது என்ற விதியிலிருந்து அவரும் தப்பவில்லை. பளீர் புன்னகையாலும், கதையின் தேவையை மிகச்சரியாக உணர்ந்த இயல்பான நடிப்பாலும் மனதில் நிறைகிறார்.
தியாகுவின் முறைப்பெண், பள்ளிப்பருவ காதலி என்ற பின்னணியுடன் வருகிற அனு சித்தாராவின் குடும்பப் பாங்கான அழகும், கதாபாத்திரத்தின் தன்மையுணர்ந்த பங்களிப்பும் அத்தனை கச்சிதம்.
கருணாகரன், விவேக் பிரசன்னா, அருவி மதன் என இன்னபிற நடிகர்களின் நடிப்பும்,
காசி, ராமேஸ்வரம், ரிஷிகேஷ் என இந்து மதத்தினர் அதிகம் நேசிக்கும் இடங்களை சுற்றிக் காண்பித்திருக்கும் விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவும்,
காட்சிகளுக்கு உயிரூட்டும்படி மனோஜ் கிருஷ்ணா வழங்கியிருக்கும் பின்னணி இசையும் கதைக்களத்தை முடிந்தவரை மெருகேற்றியிருக்கின்றன.
குறிக்கோள் எதுவுமில்லாத கதாநாயகனின் பாத்திரப் படைப்பு, வெளிநாட்டினருக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை என்று சொல்லும்படியான காட்சியமைப்பு, மனம்போன போக்கில் நகரும் திரைக்கதை என படத்தில் சலிப்பு தருகிற, வெறுப்பூட்டுகிற அம்சங்கள் எக்கச்சக்கம்.
ஆலன், கேப்டனில்லாத கப்பல்!