ஆராய்ச்சி சினிமா விமர்சனம்

மக்களைக் காக்கும் மருத்துவத் துறைக்கு மகுடம் சூடியிருக்கும் படம்.

எய்ட்ஸ் நோய்க்கு காரணமாக இருக்கிற எச்.ஐ.வி. என்கிற கொடிய கிருமியை முழுமையாக ஒழிப்பதற்கான மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுகிற, அந்த ஆராய்ச்சிக்காக தன்னையே அர்ப்பணிக்கிற இளைஞன் சந்தோஷ். அவனுடன் இணைந்து பணியாற்றுகிற மருத்துவர் சந்தோஷினி.

கிராமம் ஒன்றில் மருத்துவ முகாம் நடத்தப்பட சந்தோஷும் சந்தோஷினியும் அங்கேயும் இணைந்து மக்களின் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பது, எச் ஐ வி பாதித்தவர்களை கண்டறிவது என களப்பணியில் ஈடுபடுகிறார்கள். ஒரு கட்டத்தில் சந்தோஷி தன் ரத்தத்திலேயே எச் ஐ வி தொற்றியிருப்பது தெரிந்து அதிர்கிறாள்; மனம் உடைகிறாள்.

அவள் எச் ஐ வி பாதிப்புக்கு ஆளானது எப்படி? யார் காரணம்? என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கிறது திரைக்கதை. திட்டமிட்டபடி எச் ஐ வி கிருமியை ஒழிக்கும் மருந்தை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பது கிளைமாக்ஸ்.

கதையை தாங்கிப் பிடிக்கும் கதாபாத்திரத்தை சுமந்திருக்கிறார் மனிஷாஜித். நோய்களைப் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் பெரிதாய் எதுவும் தெரியாத மக்களிடம் கனிவாகப் பேசி சிகிச்சையளிப்பது, தான் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளான விவரம் தெரிந்தபின் மனமுடைந்து கலங்குவது, தனக்கு எச் ஐ வி தொற்ற காரணமாக இருந்தது தன் காதலன்தான் என உணர்ந்தாலும் உணர்ச்சிவசப்படாமல் நாட்களைக் கடத்துவது என கச்சிதமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார். தன்னை ஒருதலையாய் காதலிக்கும் இளைஞனுடனான டூயட் பாடலில் வெளிப்படும் இளமைத் துள்ளல் கவர்கிறது.

ஊர்த் தலைவரின் மகனாக வருகிற முத்து பாரதி பிரியன் கதாநாயகியை ஒருதலையாய் காதலிப்பது கலகலப்பூட்டுகிறது. அவர் வரும்போதெல்லாம் பாடல் வரிகளும் வந்துகொண்டேயிருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியதோடு, காட்சிகளின் உண்மைத் தன்மைக்காக மருத்துவ திறனாய்வும் செய்துள்ள வெடிமுத்து, ஆராய்ச்சியாளராக முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் நெருங்கும்போது அவர் கலங்கி நிற்கும் காட்சி நெகிழ்ச்சி.

மருத்துவ ஆராய்ச்சிக்காக தன்னையே தியாகம் செய்யத் தயாராகிற அனிஷின் அமைதியான நடிப்பும் கவர்கிறது.

ஊர்த் தலைவராக வருபவர் குரலில் கம்பீரம் காட்டுகிறார்.

பாதுகாப்பு பாண்டியாக வருகிற சிசர் மனோகர் உட்பட இன்னபிற நடிகர், நடிகைகளின் பங்களிப்பு கச்சிதம்.

‘ஐ லவ் யூ ஐ லவ் யூ சந்தோஷினி’, ‘எங்கே எங்கே ஒளிஞ்சிருக்கே’, ‘தேனோடு கறும்புச் சாறு ஊட்டுவேன்டி நிலாச்சோறு’ என கடந்தோடும் பாடல்கள் காதல் உணர்வுகளை சுமந்திருக்க, ‘புதிதாய் உலகம் படைத்திடுவோம்’, ‘உனக்கும் உனக்கும் வந்தது’ என்ற பாடல்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக அர்ப்பணிப்புடன் எழுதப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பில் குறையில்லை.

உலகம் கொரோனாவோடு போராடி மீண்டு வந்திருக்கும் சூழலில் இந்த படம் தியேட்டர்களில் எட்டிப் பார்க்கிறது. எய்ட்ஸ் பிரச்சனை பற்றியெறிந்த காலகட்டத்தில் வந்திருந்தால் அதிக கவனம் ஈர்த்திருக்கும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here