டைம் டிராவல் சப்ஜெக்டில் காதலின் உயிரோட்டத்தைக் கலந்து, சரிவிகித காமெடி மசாலா தூவிப் பரிமாறிய ‘அடியே.’
விபத்தொன்றில் சிக்கிய அந்த இளைஞன், சந்திரயான் நிலவின் தென் துருவத்தில் இறங்கியதுபோல் வேறு ஒரு உலகத்தில் லேண்டிங் ஆகிறான். பள்ளிப் பருவத்தில் அவன் காதலித்த பெண், அந்த உலகத்தில் அவனுக்கு மனைவியாக, பிரபலமான பாடகியாக இருக்கிறாள். அவன் மீது அத்தனை பிரியத்தைக் கொட்டுகிறாள்.
அந்த உலகத்தில் அவனுடைய பெயர் வேறாக இருக்கிறது. அங்கு அவன் உயரிய விருதுகள் பெற்ற மிகப்பெரிய இசையமைப்பாளராக இருக்கிறான். தான் எங்கிருக்கிறோம், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என குழம்பித் தவிக்கிறான். ஒரு கட்டத்தில் அவனுடைய குழப்பங்களாலும், செயல்பாடுகளாலும் பலராலும் மனநோயாளி போல் பார்க்கப்படுகிறான்.
சில நாட்கள் அப்படியே கழிய மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறான். பள்ளிப் பருவத்து காதலியைச் சந்திக்கிறான். அப்போது அவள் அவனுடைய நண்பனின் காதலியாக இருக்கிறாள். அது மட்டுமல்ல, அவனுடன் திருமணத்துக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறாள்.
அவள் தன் காதலி, தன் மனைவி என்பதை அவளிடமும் அவனைச் சுற்றியிருக்கும் நண்பர்களிடமும் எடுத்துச் சொல்ல முயற்சிக்கிறான். அந்த முயற்சிகள் என்னென்ன, அவை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதே கதையோட்டம். அவன் தன் காதலியோடு மணவாழ்க்கையில் இணைய முடிந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ். இயக்கம் விக்னேஷ் கார்த்திக்
இந்த உலகத்திலிருந்து அந்த உலகத்துக்கு அடிக்கடி போய் வருவது, எக்குத்தப்பான மனக்குழப்பத்தில் சிக்கித் தவித்து சூழ்நிலைக்குப் பொருந்திப் போக முடியாமல் ஏடாகூடமாக நடந்து கொள்வது, மனதுக்குப் பிடித்த பெண்ணிடம் தான் அவளை பள்ளிக்கூட நாட்களில் ஒருதலையாய் காதலித்த விஷயத்தை நிரூபிக்கப் போராடுவது என கிட்டத்தட்ட இரட்டை வேடமேற்றதுபோல் நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கிறார் ஜீவி பிரகாஷ்! தன் நண்பன் தன் பெயரை ‘வக்கார்’ என்று சொல்ல, உக்கார் என புரிந்துகொண்டு ஜீவி உட்காரும் காட்சி ரகளை!
கதாநாயகியாக கெளரி கிஷன். அம்மணி எந்த கோணத்தில் பார்த்தாலும் அழகாக இருக்கிறார். அந்த கன்னக்குழி சிரிப்பில் வோல்டேஜ் எகிறுகிறது. உணர்வுபூர்வமான காட்சியொன்றில் அழுகை வெடித்து துடிக்கும்போது தேர்ந்த நடிப்பு வெளிப்படுகிறது. இயக்குநர்கள் கனமான கதாபாத்திரங்களை அவரை நம்பி கொடுக்கலாம். பெர்பாமென்ஸ் அள்ளும்; விருதுகள் வெல்லும்!
இன்றைய தேதியில் நடுத்தர வயது ஹீரோக்களுக்கு நண்பனாக நடிக்கவைக்க பெட்டர் சாய்ஸ், பெஸ்ட் சாய்ஸ் ஆர்ஜே விஜய். ‘நான் வேறொரு உலகத்தில் இருக்கிறேன்’ என கதைநாயகன் ஜீவி போனில் சொல்லும்போது, சரக்கடித்துக் கொண்டிருக்கும் விஜய், ‘கொஞ்ச நேரத்துல நானும் அங்கே வர்றேன்’ என்பதுபோல் சலம்புமிடம் கலகலப்புக்கு 100% கேரண்டி.
படத்தில் காட்டப்படும் வேற்று உலகத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குநர் கெளதம் மேனனாக வருவது, வசனங்கள் மூலம் நடிகர் பயில்வான் ரங்கநாதனை ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளராக, ஏ ஆர் ரஹ்மான் நடனக் கலைஞராக, கூல் சுரேஷை பேசும் திறனற்றவராக காட்டுவதையெல்லாம் ரசிக்காமல் கடக்க முடியாது.
மதும்கேஷ், ஸ்வேதா வேணுகோபால் என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களும் கதைக்களத்துக்குத் தேவையான நடிப்புப் பங்களிப்பை குறையின்றிச் செய்திருக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ‘செந்தாழினியே’ பாடல் தாலாட்டுகிறது.
அந்த உலகம், இந்த உலகம் என முன்னும் பின்னுமாக கடந்தோடும் காட்சிகளை குழப்பமின்றி கத்தரித்துத் தொகுத்திருப்பதில் இயக்குநரின் எண்ணத்தை சரியாகப் பிரதிபலித்திருக்கிறார் எடிட்டர் முத்தையன்!
கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் காட்சிகள் பலவும் கலர்ஃபுல்!
‘டைம் டிராவல்’, ‘பேரலல் யுனிவர்ஸ்’ என குழப்பியடிக்கும் கதைக்களத்தை முடிந்தவரை தெளிவாக, சுவாரஸ்யமாக பந்திவைத்த விதத்தில் ‘அட’ போட வைக்கிறது ‘அடியே.’