‘அகோரி’ சினிமா விமர்சனம்

மக்கள் நடமாட்டமில்லாத ஏரியாவில் ஒரு பங்களா; அதற்குள் சென்று ஆவி, பேய், பிசாசு என அமானுஷ்ய சக்திகளிடம் சிக்கி உயிர் தப்பிக்கப் போராடும் சிலர் என்ற பேய்ப் படங்களுக்காக வழக்கமான கதைக்களத்தில் இன்னொரு படம்.

திரைப்படம் எடுக்கும் முயற்சியிலிருக்கும் மூன்று இளைஞர்களும் ஒரு இளம் பெண்ணும் காட்டுப் பகுதியில் இருக்கிற ஒரு பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு நான்கு பேருக்கும் ஒரே நேரத்தில் ரத்தம் சிந்துகிற அளவுக்கு அடிபடுகிறது. அடுத்தடுத்த நாட்களில் இன்னுமொரு இளைஞன் வந்து அவர்களுடன் இணைகிறான். அந்த ஐந்து பேரின் நிம்மதியைக் கெடுக்கும் சம்பவங்கள் அடுக்கடுக்காய் நடக்கின்றன. பேய் நடமாட்டத்தையும் உணர்கிறார்கள். அந்த பேயிடமிருந்து தப்பிக்க வேண்டுமானால் ஓருவர் இன்னொருவரை கொலை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகிறது.

யார், யாரை கொலை செய்தார்கள்? யார், யார் உயிருடன் தப்பித்தார்கள்? என்பதே கதையோட்டம்… பங்களாவுக்குள் திரியும் பேய்க்கு முன்கதை, பின்கதை, சொந்தக் கதை, சோகக் கதை இல்லாமலா? அதுவும் இருக்கிறது.

கதாநாயகனாக சின்னத்திரை தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்த சித்து. படம் இயக்கும் ஆசையிலிருக்கும் இளைஞனாக வருகிற அவர் பேய் பங்களாவுக்குள் சிக்கியதும் தன்னைச் சுற்றி நடக்கும் சித்து விளையாட்டுக்களை கண்டு பயம், பதற்றம், கோபம், இயலாமை என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில் பொருத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன். அழகாக இருக்கும் அவருக்கு கதாநாயகனுடன் கலந்து பழகும் வாய்ப்பு அதிகமில்லாத கதாபாத்திரம். ஆனாலும் செல்லச் சண்டை, பின் சமாதானம் என வருகிற சில காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

கதாநாயகனின் இயக்குநர் குழுவில் ஒருவராக நெகுநெகு உயரமும் பளபள தேகமும் காம்போவாக அமைந்த ரியாமிகா. அம்மணி சில காட்சிகளில் காட்டியிருக்கும் கவர்ச்சி ஆஹா!

பேய் விரட்டுகிற ஆசாமியாக வருகிற மைம் கோபியின் உறுமலும் உருட்டலும் அவர் வந்துபோகிற சில நிமிடங்களை கனமாக்கியிருக்கிறது.

அண்ணாந்து பார்க்க வைக்கிற, படத்தின் ஆரம்பக் காட்சியில் வருகிற கார்த்திக் கெளதம் இயக்குநராக தடம் பதிக்க நினைக்கும் தன் விருப்பத்துக்கு தடைபோடுகிறவரை பதம் பார்க்கும்போதும், விபரீத முடிவுக்கு போகும்போதும் நடிப்பில் தனித்து தெரிகிறார்.

கதையோட்டத்தின் பிளாஷ்பேக்கில் வரும் அஹோரி சாமியார்கள், அமானுஷ்ய சக்தியின் ஆவேச ஆக்கிரமிப்பு என கடந்தோடும் காட்சிகளில் தேர்ந்த நடிகர் ஷயாஜி ஷின்டேவின் பங்களிப்பு நேர்த்தி.

‘கலக்கப்போவது யாரு’ சரத் காமெடி என்ற பெயரில் சிலபல கோணங்கிச் சேட்டைகள் செய்கிறார். கஷ்டப்பட்டு சிரிக்க வேண்டியிருக்கிறது.

ஜக்குல்லா பாபு, டார்லிங் மதனகோபால், மாதவி, வெற்றி, கார்த்தி, டிசைனர் பவன் என இன்னும் சிலரது நடிப்புக்கும் திரைக்கதை இடம் கொடுத்திருக்கிறது.

‘அக்ஷயா ஸ்டுடியோஸ்’ அசோக் குமாரின் சிஜி காட்சிகளும், ‘4 மியூஸிக்’ குழுவினரின் பின்னணி இசையும், வசந்த்தின் கச்சிதமான ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு பலம்!

அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமாருக்கு பேய்ப்படம் எடுக்க வருகிறது. அதற்காக பாராட்டலாம். திரைக்கதைக்காக இன்னும் கொஞ்சம் சிந்தித்திருந்தால்அகோரியை வெற்றிப் பட வரிசையிலும் சேர்த்திருக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here