‘ஃ’ சினிமா விமர்சனம்

கிரைம் திரில்லர் சப்ஜெக்டில்,  ஹாரர் மசாலா சேர்த்த ‘ஃ.’

தன் காதலி பரிதாபமான முறையில் கொலைசெய்யப்பட, மனம் நொறுங்கிப் போகிறார் கதைநாயகன் பிரஜின். கொலையாளி யாராக இருக்கும் என்பதை கண்டறிய முயற்சிக்கிறார்.

இது ஒருபக்கமிருக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர், கழுத்தில் காயத்துடன் ரத்தம் வழிந்து இறந்து கிடப்பதுபோல் ஒருவரை ஓவியமாக வரைகிறார். அச்சு அசலாய் அவர் வரைந்த நபர் போலவே இருக்கிற ஒருவர் கழுத்தில் குத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

கொலையானவர் யார் என விசாரித்தால், அது பிரபல திரைப்பட இயக்குநர் ஒருவரின் உதவியாளர் என்பது தெரியவருகிறது.

ஒரு கொலையோடு நிற்காமல், மனநலம் பாதிக்கப்பட்டவர் ஓவியம் வரைய வரைய ஒரே முறையில் கொலைகள் தொடர்கிறது.

அப்படி கொலை செய்யப்படுபவர்கள் அந்த பிரபல இயக்குநரின் உதவி இயக்குநர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் பிரஜினின் நட்புவட்டத்தில் இருப்பதால் கொலைப்பழி மொத்தமும் அவர் மீது விழுகிறது.

‘நடக்கும் கொலைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை’ என்பதை பிரஜின் எடுத்துச் சொன்னாலும் போலீஸ் தரப்பில் நம்ப மறுப்பதால், ஓடி ஒளிய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்.

நடக்கும் கொலைகளுக்கு காரணம் என்ன? கொலைகளை செய்வது யார்? ஓவியருக்கும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு? பிரஜனின் காதலியின் மரணத்துக்கு யார் காரணம்? மரணம் எப்படி நடந்தது? இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாய் நகரும் திரைக்கதையில், கொலைப்பழியிலிருந்து பிரஜின் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள், சந்திக்கும் சவால்களும் இணைந்து கொள்ள விறுவிறுப்பு கூடுகிறது. இயக்கம் வெ.ஸ்டாலின்

திரைப்பட எடிட்டராக வருகிற பிரஜன் காதலியைப் பிரிந்த துக்கத்தை முகபாவங்களில் பிரதிபலிப்பது, நண்பர்கள் கொலை செய்யப்படும்போது கலங்கித் துடிப்பது, கொலையாளியை கண்டுபிடிப்பதில் துடிப்பாக செயல்படுவது என தனக்கான வேலையை சரியாகச் செய்திருக்கிறார்.

படத்தை இயக்கிய வெ.ஸ்டாலின் படத்தில் இயக்குநராக முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பணியில் பரபரப்பு காட்டுவது, உதவியாளர்களிடம் கறாராக நடந்துகொள்வது, ஆடிசனுக்கு வந்த பெண்ணிடம் அந்தரங்க ஆசையைத் தீர்த்துக் கொள்ள வெறித்தனமாய் பாய்வது என முடிந்தவரை மிரட்டியிருக்கிறார்.

உதவி இயக்குநர்களாக வருபவர்களில் ஒருவருக்கு, சக உதவி இயக்குநரான காதலியோடு படுக்கையில் உருண்டு புரள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அந்த காட்சிகள் கொஞ்சமே கொஞ்சம் கிளிகிளுப்புக்கு உதவுகிறது.

இன்னொரு உதவி இயக்குநராக வருகிற ‘கலக்கப் போவது யாரு’ சரத் பதற்றப்பட வேண்டிய காட்சிகளில் கச்சிதமாக வெளிப்படுகிறார்.

காவல்துறை உயரதிகாரிகளாக வருபவர்களின் நடிப்பு பரவாயில்லை ரகம். மனநல நிபுணராக வருகிற ராமநாதன், ஓவியராக வருகிற வடக்குவாசல் ரமேஷ் என படத்தின் மற்ற நடிகர்களின் பங்களிப்பில் குறையில்லை.

காயத்ரி ரெமா பிரஜனுடனான டூயட்டில் உற்சாகத்தில் மிதக்கிறார். மற்றபடி சொல்லும்படி ஏதுமில்லை. அவர் நடிக்க ஆசைப்பட்டு பரிதாபமான முடிவைச் சந்திக்கும் காட்சிகள் திரைத்துறையிலிருக்கும் ஆபத்தை எடுத்துச் சொல்கிறது.

கதை கிரைம் திரில்லராக நகர்ந்து கிளைமாக்ஸ் நெருங்கும்போது ஹாரருக்கு தடம்மாறுவது எதிர்பாராதது.

கதையோட்டத்துக்கு தேவையான பின்னணி இசையை தந்திருக்கிறார் சதீஷ் செல்வம்.

இருள் சூழலில் கடந்தோடும் காட்சிகளை தெளிவாக காண்பித்திருக்கிறது தேவசூர்யாவின் ஒளிப்பதிவு.

‘கர்மா ஒருபோதும் மன்னிக்காது’ என்பதை அழுத்தந்திருத்தமாய் சொல்ல முயற்சித்த இயக்குநர், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here