அமரன் சினிமா விமர்சனம்

நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள் மீதான மரியாதையை பல மடங்கு உயர்த்துகிற படம். மேஜர் முகுந்த் வரதராஜனின் ‘பயோ பிக்’ படைப்பாக ‘அமரன்.’

முகுந்த் மனதில் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலேயே தொற்றிக்கொள்கிறது. அப்போதிருந்தே அதற்கான முறையான பயிற்சிகளில் ஈடுபட, ஒரு கட்டத்தில் ஆசைப்பட்டபடியே ராணுவத்தில் சேர்ந்து, படிப்படியாக தகுதி உயர்ந்து மேஜராகிறார். பயங்கரவாதிகளுடனான மோதலில் உயிரிழக்கிறார்.

இந்த பலருக்கும் தெரிந்த விஷயங்களோடு முகுந்தின் கல்லூரிப் பருவம், காதல், காதலுக்கு எதிர்ப்பு, அதைக் கடந்து திருமணம், ஒரு பெண் குழந்தை என அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடுக்கியிருக்கிறது ராஜ்குமார் பெரியசாமியின் சிக்கனமாய் சினிமா மசாலா தூவிய திரைக்கதை.

முகுந்தாக சிவகார்த்திகேயன். கல்லூரிப் பருவத்தில் சக மாணவி மீதான மீதான காதல், மணவாழ்க்கை, குழந்தை மீதான பிரியம் என நீளும் அழகான தருணங்களையும் அளவு மீறாத நடிப்பால் நிரப்பியிருப்பவர், ராணுவ வீரராக தோற்றத்திலும் நடை உடையிலும் வெளிப்படுத்தியிருக்கிற கம்பீரம் கச்சிதம். எல்லைப் பகுதியில் எதிரிகளுடன் மோதும் காட்சிகளில் கடுமையான உடலுழைப்பு தெரிகிறது.

‘ஏ முகுந்து, ஏ முகுந்து’ என்றழைத்து சிவகார்த்தியிடம் நேசப் பரிமாற்றம் செய்யும் சாய் பல்லவியின், மலையாளத்தில் புரட்டியெடுத்த தமிழ் அத்தனை இனிமை. உணர்வு வழியும் விழிகள், உணர்ச்சி பொங்கும் புன்னகை என காதல் காட்சிகளை கவிதைகளாக்கியிருப்பவர், கணவனை இழந்த சோகத்தை அழுகையின்றி கடக்கும்போது காதுகளை உரசுகிறது தியேட்டரில் பலரது மெல்லிய விசும்பல் சத்தம்.

இவர், அவர் என குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லாதபடி அனைவருமே அவரவர் ஏற்ற பாத்திரமாகவே மாறியிருக்க, பாடல்களில் உயிரோட்டம் தந்திருக்கும் ஜீ வி பிரகாஷ், கதையின் நகர்வோடு ஒன்றிப்போய் தந்திருக்கும் பின்னணி இசையின் ஏற்ற இறக்கங்களால் படத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களில் ஒன்றாகியிருக்கிறார்.

காஷ்மீர் உள்ளிட்ட அண்டை நாட்டு எதிரிகளோடு இந்திய ராணுவத்தினர் மோதும் கரடு முரடான எல்லைப் பகுதிகளை, அவர்களின் விறுவிறுப்பான மோதல்களை, வெடித்துச் சிதறும் உடல்களை, கொடூரமான உயிர் பறிப்புகளை என இதயத்தின் தடதடபை அதிகரிக்கும் சம்பவங்களை அதனதன் தன்மை துளியும் குறையாமல் படமாக்கியிருக்கிற  ஒளிப்பதிவாளருக்கு ஸ்பெஷல் பாராட்டு.

ராணுவ வீரர்களின் பணிச்சூழலை, உழைப்பை, உயிர்த் தியாகத்தை முன்பே பல படங்களில் பார்த்திருந்தாலும், காதலும் தேசப்பற்றும் பின்னிப் பிணைந்திருப்பது அமரனின் தனித்துவம்.

அமரன் _ அளவில்லா விருதுகளை குவிக்கப் போகிறவன்; தமிழ் சினிமாவின் பொக்கிஷப் படைப்புகளில் இணையும் தகுதிகள் நிறைந்தவன்!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here