‘அம்புநாடு ஒம்பது குப்பம்’ சினிமா விமர்சனம்

‘இப்போல்லாம் யாருங்க சாதி பாக்குறா?’ என பேசுவதில் எழுதுவதில் உண்மை இருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், சாதிப் பாகுபாடு முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை. மேல் சாதிக்காரர்களால் கீழ் சாதிக்காரர்கள் அடிமையாக நடத்தப்படுவது, விதவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது இன்றும் தொடர்கிறது என வலிமிகுந்த காட்சிகளோடு எடுத்துச் சொல்லியிருக்கும் படம்.

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலிருக்கும் ஒரு கிராமம் கதைக்களமாகியிருக்கிறது. அந்த கிராமத்தில் மேல் சாதிப் பண்ணையார்கள் இருவர் கீழ் சாதிக்காரர்களை அடிமையாக வைத்திருக்கிறார்கள். அந்த சூழ்நிலையிலும் கீழ் சாதியைச் சேர்ந்த சன்னாசியின் மகன் நன்றாகப் படிக்கிறான். படிப்பை முடித்து, நல்ல வேலைக்குப் போய் தன் குடும்பத்தை முன்னேற்ற நினைக்கிறான். தன் மூலம் அடிமைச் சிறையிலிருக்கும் தன் கிராமத்து மக்களின் நிலையிலும் மாற்றம் வரும் என நம்புகிறான். அப்படியான மனநிலையில் இருக்கும் அவன் ஒருநாள் கோயிலின் கற்பூர ஆரத்தித் தட்டைத் தொட்டு விபூதி எடுத்துவிட, கீழ் சாதிக்காரன் பூஜைத் தட்டை தொட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத பூசாரி கோபப்பட்டு அவனைத் தாக்குகிறார். அத்தோடு விடவில்லை. அவனுக்கு அதைவிட பெரிய அவமானத்தை, தண்டனையைத் தர பண்ணையார்களும் அவரது அடிவருடிகளும் திட்டம் தீட்டுகிறார்கள். அந்த திட்டம் என்ன, அதன் விளைவுகள் என்ன என்பதே மிச்ச சொச்ச கதை.

தான் பிறந்த மண்ணில், தான் வாழும் காலத்தில் நடந்த கொடுமைகளை, பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலத்தினை பதிவு செய்யும் விதத்தில் துரை குணா எழுதிய ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற படைப்புக்கு இயக்குநர் ராஜாஜி கொடுத்திருக்கும் திரை வடிவமே ‘அம்புநாடு ஒம்பது குப்பம்.’

சாதி வெறியில் ஊறிய பண்ணையார்கள், அடிமைப் பட்டுக் கிடக்கும் கீழ்சாதி மனிதர்கள் என படத்தில் நடித்துள்ள அத்தனைப் பேரும் புதுமுகங்கள் என்பது அவர்களின் நடிப்பில் அது தெரிந்தாலும் தோற்றத்தால் கதைக்களத்துக்கு மிகச் சரியாய் பொருந்திப் போயிருப்பது படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.

அவர்களில் கீழ் சாதிக்காரராக சன்னாசி என்ற பெயர் சுமந்து வருகிற பெரியவர், ‘வெங்காயம்’ என்ற படத்தை இயக்கி கவனம் ஈர்த்த சங்ககிரி ராஜ்குமாரின் தந்தையாம். பெயர் சங்ககிரி மாணிக்கம். அவரது நடிப்பு மட்டும் தனித்து தெரிகிறது.

தங்களைப் போல் தங்கள் மகன் அடிமையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக அவனை படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துவது, மகனை தண்டிக்க பண்ணையார் முடிவெடுக்கும்போது அவனை மன்னிக்கச் சொல்லி கெஞ்சுவது என மனதைக் கலங்கடிக்கும் நடிப்பால் கவர்கிறார் அந்தப் பெரியவர்.

‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்வதன் பின்னணியை, பண்ணையார்கள் தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு பண்டிகை நாட்களில் சட்டை எடுத்துக் கொடுக்காமல் வேட்டு துண்டு மட்டும் கொடுப்பதன் காரணத்தை போகிற போக்கில் எடுத்துச் சொல்லியிருப்பது கவனிக்க வைக்கிறது.

கருப்பானாலும் களையாக இருக்கிற, வெள்ளந்திச் சிரிப்போடு எட்டிப் பார்க்கிற அந்த இளம்பெண்ணை கண்டதும், ‘கதை இனி காதல் அதுஇதுவென வேறோரு ரூட்டில் போகும்போலிருக்கிறது’ என நினைத்தால் அப்படி எதுவும் நடக்காமலிருந்தது திருப்தி.

பண்ணையார்களின் அராஜகம், அடிமை மக்களின் துயரம் என மன இறுக்கம் தரும் காட்சிகள் கடந்தோடும்போது, பக்கத்தில் என்ன நடந்தாலும் எது நடந்தாலும் கவலைப் படாமல் டிக்டாக்கில் போட வீடியோ எடுக்கும் அந்த குண்டு இளைஞர் சற்றே கலகலப்பூட்டுகிறார்.

அந்தோணி தாசன் இசையில் கிராமிய மணம் வீசும் ‘ஊரு எங்க ஊரு பேரு பெத்த பேரு’ பாடலும் பாடலின் காட்சியும் உற்சாகத்தை தூண்டுகிறது. ‘எங்க தலமுறை இதுக்கு மேல போதும், இனி உங்க தலமுறை நூறு காலம் வாழும்’ என்ற பாடல் பாவப்பட்ட மனிதர்களின் வலியை அதன் தன்மை மாறாமல் பரிமாறியிருக்கிறது.

கீழ் சாதி இளைஞனுக்கெதிராக மேல் சாதிக்காரர்கள் சதித் திட்டமிடும் காட்சியில் ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசை லேசான மிரட்சியைத் தருகிறது.

சமூக விடுதலை இயக்கம், புரட்சி, புண்ணாக்கு என எது நடந்தாலும் சிலரது அடாவடி அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது என்கிற உண்மையை அதன் வலி குறையாமல் பதிவு செய்திருப்பதற்காக படக்குழுவை பாராட்டலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here