கடுகளவு பிரச்சனையில் உணர்ச்சிவசப்படும் இளைஞன் ஒருவன் கடலளவு பிரச்சனையை சந்திக்கும் கதை.
கதையின் நாயகன் ருத்ராவுக்கு பள்ளிப் பருவத்திலேயே போதைப் பொருள் வியாபாரம் செய்கிற, கேரேஜ் வைத்திருக்கிற ரவுடிப் பேர்வழி ஒருவருடன் தொடர்பு ஏற்படுகிறது. அந்த தொடர்பு தந்த துணிச்சலால், வழிகாட்டலால் அடிதடி, கொலை என தொடர்ச்சியாக அதிரடியான சம்பவங்கள் செய்து தாதாவாகிறான். அதனால் அவனுக்கு பெரியளவில் எதிரிகள் உருவாகிறார்கள். அவர்கள் ருத்ராவை தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார்கள். அந்த திட்டத்திலிருந்து அவனால் தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பதே கதையோட்டம்.
அந்த எதிரிகள் யார்? அவர்கள் எந்த விதத்தில் அவனுக்கு எதிரியானார்கள்? அவனை தீர்த்துக்கட்ட அவர்கள் வகுத்த திட்டம் என்ன என்பதெல்லாம் திரைக்கதையில்… இயக்கம் பிரசாந்த் நாகராஜன்
ருத்ராவாக மாஸ்டர் மகேந்திரன். ஆக்சனில் தெறிக்க விடுவது, அசால்ட்டாக கொலைகள் செய்வது, அவ்வப்போது மனதுக்கு பிடித்த பெண் மீது காதல் பார்வை வீசுவது என தனக்கான காட்சிகளில் தன்னால் முடிந்த நடிப்புப் பங்களிப்பை பொருத்தமாக தந்திருக்கிறார்.
கதாநாயகி ஆதிரா ராஜ் சில காட்சிகளில் வழக்கமான காதலியாக வந்துபோவதோடு சரி.
வில்லனாக வருகிற தாசரதி ஓரளவு மிரட்டலான நடிப்பைத் தர, கேரேஜ் முதலாளியாக வருகிற ஜி எம் சுந்தரின் அடாவடித் தனங்களில் அலட்டல் அதிகமாய் வெளிப்பட்டிருக்கிறது.
மற்ற பாத்திரங்களை ஏற்றிருப்பவர்களின் நடிப்பில் குறையில்லை.
பாலமுரளி பாலுவின் பின்னணி இசையும் பாடல்களும்
பின்னணி இசை மூலம் காட்சிகளை மெருகேற்றியிருக்கும் பாலமுரளி பாலு, பாடல்களுக்கான இசையில் உற்சாகமூட்ட முயற்சித்திருக்கிறார்.
விஜயகுமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
‘கத்தியெடுத்தவனுக்கு கத்தியாலேயேதான் சாவு’ என்ற வழக்கமான கதைக்களத்தை கையிலெடுத்த இயக்குநர், திரைக்கதையில் வித்தியாசம் காட்டாதது பலவீனம்.
அமீகோ கேரேஜ், பிலோ ஆவரேஜ்!