அந்தகன் சினிமா விமர்சனம்

அந்தாதுன் ஹிந்திப் படம், டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில், பிரசாந்தின் அப்பா தியாகராஜனின் தமிழ் ரீ மேக்கில்…

பியானோ இசைக் கலைஞரான பிரசாந்த் பார்வையற்றவராக நடித்து, அதன் மூலம் பியானோ வாசிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்று உற்சாகமாக நாட்களை கடத்தி வருகிறார். ஒரு நாள், பிரபலமான நடிகர் ஒருவரின் வீட்டுக்கு பியானோ வாசிக்கப் போகிறார். போன இடத்தில் நடிகருடைய மனைவியின் தகாத உறவையும், அவரால் நடந்த ஒரு கொலை பற்றியும் தெரிந்து கொள்கிறார். பின்னர் துரதிஷ்டவசமாக அவர் செய்கிற இன்னொரு கொலையையும் பார்த்து தொலைக்கிறார். அதன்பின் அவரை சிலபல பிரச்சனைகள் துரத்தூகிறது. பார்வையற்றவராக நடித்துக் கொண்டிருந்தவருக்கு நிஜமாகவே பார்வை பறிபோகிறது… அவரை துரத்துகிற பிரச்சனைகளில் இருந்து அவரால் மீள முடிந்ததா? பறிபோன பார்வை திரும்ப கிடைத்ததா? நடந்த கொலைகளுக்காந பின்னணி என்ன? திரைக்கதை பதில் தருகிறது…

வெகு நாள் கழித்து வந்தாலும் பிரசாந்திடம் இளமைத் துடிப்பு அப்படியே இருக்கிறது. பார்வையற்றவராக நடிப்பது, நிஜமாகவே பார்வையற்றவராவது என நடிப்பில் ரசிக்கத்தக்க வெரைட்டி காட்டியிருக்கிறார்.

சந்தர்ப்பவசத்தால் ஒரு கொலைக்கு காரணமாகி, மீண்டும் மீண்டும் கொலை செய்கிற அளவுக்கு நிலைமையை சிக்கலாக்கிக் கொள்கிற சிம்ரனின் வில்லத்தனம் கவனம் ஈர்க்கிறது.

நவரச நாயகன் கார்த்திக், நவரச நாயகன் கார்த்திக்காகவே வருகிறார். தோற்றத்தில் முதுமை எட்டிப் பார்த்தாலும் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் பரபரப்புக்கு குறைவில்லை.

பிரியா ஆனந்த் வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயினாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

கே எஸ் ரவிக்குமார், யோகிபாபு, ஊர்வசி கூட்டணியின் நடிப்பில் கிட்னி திருட்டு காட்சிகள் சிரித்து மகிழ உதவியிருக்கின்றன.

சமுத்திரகனி, பூவையார் உள்ளிட்ட இன்னபிற நடிகர்களின் பங்களிப்பு நேர்த்தி.

வனிதா விஜயகுமார், ஆதேஷ்பாலா, பெசண்ட் ரவி உள்ளிட்டோர் வந்துபோகிறார்கள்.

சந்தோஷ் நாராயணனின் இதமான பின்னணி இசை, காட்சிகளுக்குப் பொருத்தமான பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம், ரவி யாதவின் தரமான ஒளிப்பதிவு படத்தின் பலம்.

ஒருசில காட்சிகளில் மிகச்சில மாற்றங்கள் செய்தது தவிர, அந்தாதுன் படத்தின் நகலாகவே அந்தகனை ரீ மேக் செய்திருக்கிற இயக்குநர் தியாகராஜன், பிரசாந்துக்கு கம்பேக் அந்தஸ்து கிடைப்பதற்கு பாதை அமைத்திருக்கிறார்.

அந்தகன் – தந்தை மகனுக்காற்றிய உதவி…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here