‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை’ என்ற திருக்குறளை மையப்படுத்தி ஒரு படம்.
அப்பு அம்மாவை இழந்தவன்; அப்பாவின் அரவணைப்பில் வளர்பவன். அப்பா உடலுழைப்புத் தொழிலாளியாக இருந்தாலும் மகனை இங்லீஷ் மீடியத்தில் படிக்க வைக்கிறார். அவன் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது அப்பா இறந்துவிட, அதை பயன்படுத்தி ஒருசிலர் அவனுக்கு துரோகம் செய்ய, அவனால் படிப்பைத் தொடர முடியாமல் போகிறது.
சபா நன்றாகப் படித்து, நல்ல வேலை கிடைத்து நன்றாக சம்பாதிப்பவன். அவன், தான் காதலித்த பெண்ணை மனைவியாக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக மண வாழ்க்கையை துவங்கிய சமயத்தில் அவன் தாழ்ந்த சாதியாகவும் அவனது மனைவி உயர்சாதியாகவும் இருப்பதால் இனிமையாக துவங்கிய மணவாழ்க்கை முடிவுக்கு வருகிறது. அதனால் அவன் தொடர்ச்சியாக சமூக விரோத காரியங்களைச் செய்து, போலீஸ் என்கவுண்டரில் போட்டுத் தள்ள திட்டமிட்டிருக்கும் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்கிறான்.
இப்படி துரோகிகளால் படிப்பைத் தொலைத்த அப்புவும், சாதி ஏற்றத்தாழ்வால் வாழ்க்கையைத் தொலைத்த சபாவும் ஒரு கட்டத்தில் இணைகிறார்கள். இணைந்த அவர்கள் தாங்கள் தொலைத்ததை மீட்டெடுக்க முடிந்ததா இல்லையா என்பதே கதையின் தொடர்ச்சி… இயக்கம் வசீகரன் பாலாஜி
கஷ்டப்பட்டு தன்னை ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்து விட்டிருக்கும் அப்பாவை சந்தோஷப்படுத்த ஆங்கிலத்தில் பேசி அசத்துவதாகட்டும், அப்பா இறந்தபின் சொந்தவீட்டை ஒருவன் சூழ்ச்சி செய்து அபகரித்தபின் ஆதரவற்ற நிலையில் கலங்கித் தவிப்பதாகட்டும், திருடி முன்னேறலாம் வா என கூப்பிட்டவன் பின்னால் போகாமல் பாட்டில் பொறுக்கி பிழைத்துக் கொள்வேன் என களமிறங்குவதாகட்டும், படிப்பதற்காக சிறைக்கு செல்லவும் தயார் என முன்வருவதாகட்டும் அப்புவாக நடித்துள்ள ஜீவன் பிரபாகரின் நடிப்பில் கதாபாத்திரத்துக்கேற்ற ஜீவன் நிரம்பியிருக்கிறது.
சபாவாக கல்லூரி வினோத். சந்தர்ப்ப சூழலால் குற்றங்கள் செய்து செய்து தன்னைக் கண்டு ஊரே பயப்படும் அளவுக்கு வளர்வது, வளர்ந்தபின் என் கவுண்டருக்கு குறிவைக்கப்பட்ட நிலையில் போலீஸிடம் உன்னால் முடிஞ்சத பாத்துக்கோ என்கிற ரேஞ்சில் கெத்து காட்டுவது, ஒரு கட்டத்தில் மனம் வருந்தி திருந்துவது என கதைநாயகனாய் தனது கனமான கதாபாத்திரத்தை பெரிதாய் அலட்டிக் கொள்ளாத நடிப்பால் தூக்கிப் பிடித்திருக்கிறார்.
வினோத்துக்கு ஜோடியாக வருகிற பிரியதர்ஷினிக்கு களையான முகம். வருவது கொஞ்ச நேரம்தான் என்றாலும் அவர் தருவது அளவான, அழகான நடிப்பு. அந்த முதலிரவுப் பாடலில் வினோத்துடன் மயங்கிக் கிறங்கும்போது, அவரது உடற்கட்டின் இளமையும் செழுமையும் மெல்லிய கவர்ச்சி விருந்து படைக்கிறது.
போலீஸுக்காகவும் அரசியல்வாதிக்காகவும் அடுக்கடுக்காய் கொலைகள் செய்து, பின்னர் அதே போலீஸால் என்கவுன்டர் செய்யப்பட அழைத்துப் போகப்படும் நபராக, தர்மா என்ற பெயரில் வருகிறவரின் அதட்டலும் உருட்டலுமான நடிப்புப் பங்களிப்பு கதாபாத்திரத்துக்கேற்ற கச்சிதம்.
பிரியங்கா ரோபோசங்கர் ஒரேயொரு காட்சியில் வந்தாலும், சூழ்நிலையைப் பயன்படுத்தி ஏலச்சீட்டு மோசடியில் ஈடுபடுவது மிரட்டல்.
தாழ்ந்த சாதிக்காரன் வீட்டில் ஒரு வாய் தண்ணீர் கூட குடித்துவிடக் கூடாதென பிடிவாதமாக இருந்து, கதைநாயகனான சபாவின் அஸ்திவாரத்தை ஆட்டம் கானச் செய்யும் விஜய் சத்யாவின் வில்லத்தனம் கெத்து.
அரசியல்வாதிக்கு உடந்தையாக இருந்து அயோக்கியததனம் செய்யும் போலீஸ் கமிஷனராக பி எல் தேனப்பன், கதையில் முதன்மை கதாபாத்திரங்கள் ஏற்றவர்களுக்கு பாடம் போதித்த ஆசிரியராக வேலு பிரபாகரன், அவரது மகளாக செயல்திறன் குறைந்த கால்களுடன் வருகிற சித்ரா, நண்பனாக டார்லிங் மதன் என இன்னபிற பாத்திரங்களை ஏற்றிருக்கிற அத்தனைப் பேரின் நடிப்பிலும் இயல்புத் தன்மை கெட்டியாக ஒட்டிக் கொண்டிருக்கிறது.
ஆலன் விஜய் இசையில் பாடல்கள் கதையோடு பின்னிப் பிணைந்திருந்தாலும் மனதில் பதிய மறுக்கிறது. பின்னணி இசையில் குறையில்லை.
எளிய மனிதர்களின் வாழ்க்கையை சூழ்நிலைச் சூறாவளி எப்படியெல்லாம் சின்னாபின்னமாக்குகிறது என்பதையும், சமுகத்தில் எப்படியான கேடு கெட்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதையும் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கும் இந்த படம்,
‘படிப்பதற்காக பிச்சைகூட எடுக்கலாம், தவறில்லை’ என கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, எளிய பட்ஜெட் படங்களில் எடுத்துக்காட்டான படைப்பாகியிருக்கிறது!
-சு.கணேஷ்குமார்