ஹாரர் சப்ஜெக்டில் கதையம்சமும் காமெடியும் கலந்துகட்டி வெற்றியடைந்த அரண்மனை 1, 2, 3-ம் பாகங்களைத் தொடர்ந்து அதே பாணியில் அரங்கேறியிருக்கிறது ‘அரண்மனை 4.’
தன் தங்கை தமன்னாவை கொடூரமாக கொன்ற மர்ம சக்தி, தங்கையின் மகளைக் கொல்லும் நோக்கத்துடன் சுற்றிவர, அந்த சக்தியிடமிருந்து அந்த மகளை தமன்னாவின் அண்ணன் சுந்தர் சி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. அந்த சக்தியின் பின்னணியும் நோக்கமும் என்ன என்பதெல்லாம் திரைக்கதையில்… இயக்கம் சுந்தர் சி
தங்கை கொலை செய்யப்பட்ட விவரம் தெரிந்தபின் மனம் கலங்குவது, துஷ்ட சக்தியின் பின்னணியை அலசி ஆராய்ந்து அதை அழிக்கத் திட்டமிடுவது, தங்கையின் மகளைக் காப்பாற்றப் போராடுவது என நீளும் காட்சிகளில் இயல்பான நடிப்பைத் தந்திருக்கும் சுந்தர் சி ஆக்சன் காட்சிகளில் சூறாவளியாய் பாய்ந்திருக்கிறார்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இளமை குறையாத தமன்னா. கணவன் குழந்தை என உற்சாகமாக வாழ்வது, துஷ்டசக்தி தன்னை கொடூரமாக தாக்கும் சூழ்நிலையில் அது பிள்ளைகளுக்குத் தெரியாதபடி விளையாட்டு காட்டிக்கொண்டே தப்பிக்க வைப்பது என கடந்தோடும் காட்சிகளில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நல்லவரா கெட்டவரா என குழப்பும்படியான வேடத்தில் ராமச்சந்திர ராஜு. சாமியாராக வரும் அவர் தன்னைச் சுற்றியே நடக்கிறது என்பதையுணர்ந்து அதற்கேற்ற கம்பீரமான நடிப்பைத் தந்திருக்கிறார்.
அரண்மனைப் பணியாளர்களாக வருகிற யோகிபாபுவும் விடிவி கணேஷும் அடிக்கும் லூட்டியும் பேயிடம் மாட்டிக்கொண்டு படும் அவதிகளும் கலகலப்பூட்டுகின்றன. அரண்மனைக்கு சொந்தக்காரராக வருகிற டெல்லி கணேஷ், முத்த டார்ச்சர் தருகிற யோகிபாபுவிடமிருந்து எஸ்கேப்பாக ஐடியா கண்டுபிடித்து அப்ளை செய்வது ரகளை.
கோவை சரளாவுக்கு ஹாரர் படத்தில் நடிப்பது, அஷ்டகோணல் முகபாவம் காட்டுவதெல்லாம் பழகிப்போன விஷயம். அந்த பெர்ஃபாமென்ஸை அப்படியே இதிலும் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்.
கோவை சரளாவிடம் சரச சல்லாபத்தை எதிர்பார்க்கும் சேஷுவின் சேட்டையும் சிரிப்பூட்டுகிறது.
டெல்லி கணேஷின் பேத்தியாக, டாக்டராக, அரண்மனையை விற்று மருத்துமனை கட்டும் நல்ல லட்சியத்தோடு வலம் வருகிற ராஷி கண்ணா, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். அவருக்கு ஹீரோவுடன் டூயட் அதுஇதுவென மசாலா சங்கதிகளில் உருண்டு புரளும் வேலையில்லை என்பது விசேஷ செய்தி.
தமன்னாவின் காதல் கணவராக மிகச்சில காட்சிகளில் மட்டுமே வருகிற சந்தோஷ் பிரதாப் தொடங்கி, கே.எஸ்.ரவிக்குமார், சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ் என நிரம்பியிருக்கும் இன்னபிற நடிகர், நடிகைகள் அவரவர் பங்களிப்பை குறையின்றிச் செய்திருக்க, தமன்னாவுக்கு மகளாக வருகிற சிறுமியின் துறுதுறுப்பான நடிப்பு கூடுதலாய் கவர்கிறது.
நிறைவுக் காட்சியில் குஷ்பூ சிம்ரனுடன் சேர்ந்தாடும் ஆட்டமும் அந்த பக்திப் பாடலும் சிலிர்ப்பூட்டுகிறது. படம் முடிந்து சீட்டைவிட்டு எழுந்தபின், இழுத்து உட்கார வைக்கிறது ‘அச்சம் மச்சம்’ பாட்டு. அதில் தமன்னாவும், ராஷி கண்ணாவும் காட்டும் கவர்ச்சியில் இளையதலைமுறைக்கு ஹை வோல்டேஜ் மின்சாரம் பாயக்கூடும். இசை ஹிப்ஹாப் ஆதி.
பின்னணி இசை பல காட்சிகளில் கதைக்குp பொருத்தம். சில காட்சிகளில் பரவாயில்லை ரகம்.
கலை இயக்குநரின் பங்களிப்பில் அடர்ந்த காடு அசத்தலாய் அட்டனன்ஸ் போட, அந்த அம்மன் சிலையும் அரக்கன் சிலையும் அண்ணாந்து பார்க்க வைக்கிறது. அரண்மனையை இன்னும் பிரமாண்டமாக அமைத்திருக்கலாம்.
கடைசி 20 நிமிடக் காட்சியில் இருக்கிற பிரமாண்டமும் அது தருகிற அதிர்வலையும் வெகுநாட்கள் மனதில் நிற்கும்.
திரைக்கதையில், உருவாக்கத்தில் குறைகள் இல்லாமலில்லை. அதையெல்லாம் தாண்டி குடும்பத்துடன் பார்த்து ரசிக்க அநேக விஷயங்கள் அரண்மனையில் கொட்டிக் கிடக்கிறது.
அரண்மனை 4, உற்சாகமூட்டும் கோடை மழை!