‘ஆர் யூ ஓகே பேபி’ சினிமா விமர்சனம்

வாழ்க்கைப் பயண அனுபவங்கள் படைப்பாக உருவாகும்போது அதில் உயிரோட்டம் அதிகமிருக்கும். அப்படி, தொலைக்காட்சியில் தான் நடத்திய குடும்பப் பஞ்சாயத்து நிகழ்ச்சி தந்த அனுபவத்தை திரைப்படத்திற்கான கருவாக்கியிருக்கிறார் லெஷ்மி ராமகிருஷ்ணன்.

ஷோபா,  தியாகி திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்கிற தம்பதி. தியாகி உழைத்துப் பிழைக்க தயாராக இல்லாதவன்; குடிகாரன். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. அவர்களின் வறுமைச் சூழலை பயன்படுத்தி, குழந்தை தேவைப்படுகிற வித்யா ,  பாலன் தம்பதிக்கு தத்துகொடுக்க நர்ஸ் ஒருவர் இடைத்தரகராக இருந்து ஏற்பாடு செய்கிறார். பணம் கைமாற குழந்தையும் இடம்மாறுகிறது. தத்தெடுத்தவர்கள் குழந்தையை உயிருக்கு உயிராக வளர்க்கிறார்கள்.

ஒருவருடம் கழிந்த நிலையில் ஷோபா தன் குழந்தை தனக்கு வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். அந்த விவகாரம் லெஷ்மி ராமகிருஷ்ணன் டி.வி.யில் நடத்தும் சொல்லாததும் உண்மை நிகழ்ச்சி மூலம் வெளியுலகுக்கு தெரியவந்து பரபரப்பாகிறது.

குழந்தை நல கமிட்டியும் சிபிசிஐடி.யும் குழந்தை கைமாறியதில் தத்தெடுப்பதற்கான சட்ட விதிகள் பின்பற்றப்பட்டதா என்ற விசாரணையில் இறங்குகின்றன. ஒரு கட்டத்தில் இருதரப்பும் நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகிறது. தீர்ப்பு யார் பக்கம் சாதகம் என்பதே கதையோட்டம்.

கதைக்குப் பொருத்தமான, நடிப்பில் தேர்ந்த நடிகர், நடிகைகளைத் தேர்ந்தெடுத்ததற்காக இயக்குநர் லெஷ்மி ராமகிருஷ்ணனுக்கு முதல் பாராட்டு!

வில்லங்கமான விஷயத்தை கையிலெடுத்து, அதற்கு உணர்வுபூர்வமாக திரைக்கதை அமைத்திருப்பதற்காக, கண்கலங்க வைக்கும் காட்சிகளை உருவாக்கியிருப்பதற்காக இரண்டாவது பாராட்டு!

குழந்தை தத்தெடுப்பில் கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்களை விரிவாக விவரித்து, சமூகத்துக்கு விழிப்புணர்வு பாடம் நடத்தியிருப்பதற்காக மூன்றாம் பாராட்டு!

ஷோபாவாக முல்லையரசி. சூழ்நிலை தந்த நெருக்கடிக்கு ஆளாகி, பணத்துக்கு ஆசைப்பட்டு குழந்தையை தத்துக் கொடுப்பது, குழந்தையை திரும்பக் கேட்டு கலங்கி நிற்பது, கதறியழுவது என பாத்திரத்தின் கனம் உணர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தியாகியாக அசோக். தன் சுயநலத்துக்காக, சுகத்துக்காக மட்டுமே வாழ்கிற தறுதலை கதாபாத்திரத்துக்கு தெனாவட்டான நடிப்பால் பலம் சேர்த்திருக்கிறார்.

திருமணமாகி பல வருடங்களாக குழந்தையில்லாமல் போகவே, முறையாக தத்தெடுக்க காத்திருந்தால் பல வருடங்கள் கடந்துவிடும் என்ற நிலையில், சற்றே சட்ட விரோதமாக குழந்தையை தத்தெடுக்கிற தம்பதியாக சமுத்திர கனி, அபிராமி. குழந்தைக்காக அவர்கள் நடத்தும் பாசப் போராட்டம் நெகிழ்ச்சி.

‘சொல்லாததும் உண்மை’ நிகழ்ச்சி நடத்துபவராக லெஷ்மி ராமகிருஷ்ணன். சொல்வதெல்லாம் உண்மை’ என சின்னத்திரைக்காக செய்த வேலையை அதேபோல், பரபரப்புக்கு பஞ்சமில்லாதபடி பெரிய திரைக்காக செய்திருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னாலிருந்த டிஆர்பி.க்கான அரசியலையும் பந்தி வைத்திருக்கிறார்.

சொல்லாததும் உண்மை’ நிகழ்ச்சி இயக்குநராக பாவெல் நவகீதன். ஈகோ பேர்வழியாக அவர் காட்டும் சீற்றம் கதாபாத்திரத்தின் ஏற்றம்.

குழந்தை நல மைய உயரதிகாரியாக இயக்குநர் மிஸ்கின், நீதிபதியாக ஆடுகளம் நரேன், வழக்கறிஞர்களாக அனுபமா குமார், உதயபானு மகேஷ்வரன், வில்லங்க நர்ஸாக வினோதினி என முக்கிய பாத்திரமேற்றிருப்பவர்கள் அதற்கேற்ற நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு 1000 யானை பலம். ‘தந்தை தாய்’ பாடல் மனதிற்கு வெகுகாலம் நிற்கும்!

கிருஷ்ணசேகரின் ஒளிப்பதிவும், பிரேம்குமாரின் படத்தொகுப்பும் கச்சிதம்.

ஆர் யூ ஒகே பேபி’ சாமி சத்தியமாய் ஃபில் குட் முவீ!

 

 

 

 

 

 

 

REVIEW OVERVIEW
‘ஆர் யூ ஓகே பேபி' சினிமா விமர்சனம்
Previous article‘டீமன்’ சினிமா விமர்சனம்
Next articleஅதிக திரையரங்குகளில் வெளியான ‘டீமன்.’ இயக்குநர் ரமேஷ் பழனிவேல் மகிழ்ச்சி!
are-you-ok-baby-movie-reviewவாழ்க்கைப் பயண அனுபவங்கள் படைப்பாக உருவாகும்போது அதில் உயிரோட்டம் அதிகமிருக்கும். அப்படி, தொலைக்காட்சியில் தான் நடத்திய குடும்பப் பஞ்சாயத்து நிகழ்ச்சி தந்த அனுபவத்தை திரைப்படத்திற்கான கருவாக்கியிருக்கிறார் லெஷ்மி ராமகிருஷ்ணன். ஷோபா,  தியாகி திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்கிற தம்பதி. தியாகி உழைத்துப் பிழைக்க தயாராக இல்லாதவன்; குடிகாரன். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. அவர்களின் வறுமைச் சூழலை பயன்படுத்தி, குழந்தை தேவைப்படுகிற வித்யா , ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here