காதலோடு காமெடியை கலந்துகட்டி ஹிட் கொடுக்கும் இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர், ஆக்சன் ஏரியாவில் அட்டனன்ஸ் போட்டிருக்கும் படம்!
நாளுக்கு நாள் பெருகிவரும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையை கதைக்களமாக்கி வெளிவரும் படங்களின் வரிசையில் அடுத்த வரவாக ‘அரியவன்.’இளைஞர்கள் சிலர் இளம்பெண்களிடம் பழகி, அவர்களை காதலிப்பதாக நம்ப வைத்து, பாலியல் உறவுக்குத் தூண்டியும், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியும் வீடியோ எடுத்து மிரட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அந்த இழிபிறவிகள் குழுவின் அரசியல் பலமிக்க தலைவன் டேனியல்பாலாஜி. அந்த கும்பலிடம் சிக்கிய ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார் நாயகன் இஷான்.
இப்படியான கதையோட்டத்தில் அடுத்தடுத்த காட்சிகளில் வழக்கமாக என்ன நடக்குமோ அதுதான் நடக்கிறது. அத்தனையும் பரபரப்பாக விறுவிறுப்பாக…
ஆரம்பக் காட்சியில் கபடி வீரராக வந்து, பின்னர் அநியாயத்துக்கெதிராக கொதித்துக் கொந்தளிக்கும் ஆக்சன் ஹீரோவாகி அதகளப்படுத்தும் பாத்திரத்தில் அறிமுக நாயகன் இஷான். ஒருபக்கம் விழிகளில் ஆவேசம் கொப்பளிக்கச் செய்வதும், இன்னொரு பக்கம் அதே விழிகளில் காதல் வயப்படுவதுமாய் அளவான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
எடுப்பான இளமை, துடிப்பான நடிப்பு, குடும்பப்பாங்கான தோற்றம் என கச்சித காம்போவாக மனம் நிறைக்கிறார் நாயகி பிரணாலி.
பல படங்களில் பார்த்துப் பழகிய அதே வில்லத்தனத்துடன் டேனியல் பாலாஜி.
மற்ற பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு நேர்த்தி.
ஆக்சன் காட்சிகளை முறுக்கேற்ற பயன்பட்டிருக்கிறது விவியின் பின்னணி இசை.
ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரிநந்த் இசையில் உருவான பாடல்களுக்கான காட்சிகளை அழகாக்கி, சண்டைக் காட்சிகளை சுறுசுறுப்பாக்கியிருக்கிறது விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவு.
வழக்கமான ரூட்டில் பயணிக்கும் திரைக்கதை கிளைமாக்ஸில், ‘உங்களோட பயம்தான் அவனுக்கு ஆயுதம். எதுக்கு பயந்து பயந்து ஓடுறீங்க?’ என்று கேட்டு, ‘உங்களுக்கான பிரச்னையிலிருந்து உங்களை நீங்கள்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்’ என அறிவுரை சொல்லி டாப் கியரில் யூ டர்ன் போடுவது தனித்துவம்.
‘அயிகிரி நந்தினி’ பாடலை சேர்த்திருப்பது நிறைவுக் காட்சிக்கு அனல் மூட்டுகிறது!
அரியவன் ஏற்கத்தக்க அறிவுரை சொல்பவனாக இருப்பதால் ஆதரிக்கலாம்!