ஹாலிவுட் ஹாரர் படங்களைப் போல் தமிழில் ஒரு படைப்பைத் தருகிற முயற்சி.
பாழடைந்த பங்களா; அதில் அமானுஷ்ய சக்திகளின் அட்டகாசம், அந்த பங்களாவில் சிக்கிச் சின்னாபின்னமாகும் ஹீரோ, ஹீரோயின், நண்பர்கள் என வழக்கமான பேய்ப்பட டெம்ப்ளேட்டில் ‘அஸ்வின்ஸ்.’
தொல்லியல் துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் லண்டனிலுள்ள அந்த பெரிய மாளிகைக்குள் ஆராய்ச்சிக்காக செல்கிறார். ஒரு கட்டத்தில் தன் குழுவினரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார். போலீஸ் மற்றவர்களின் சடலத்தைக் கைப்பற்ற ஆராய்ச்சியாளரின் சடலம் மட்டும் எப்படியோ எஸ்கேப். அதன்பின் தொடர்ந்து மர்ம சம்பவங்கள் நடக்க, மாளிகை யாராலும் பயன்படுத்தப்படாமல் பாழடைந்து கிடக்கிறது.
அந்த மாளிகைக்குள் என்ன நடக்கிறது என்பதை யூ டியூப் சேனலுக்காக வீடியோ எடுக்க இளைஞர்கள் இளம்பெண் என சிலர் நுழைகிறார்கள். அங்கிருக்கும் அமானுஷ்ய சக்தி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துகிறது. ‘இனி நம் உயிர் நமக்கில்லை’ என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தப்பிக்கப் போராடுகிறார்கள்.
அந்த போராட்டத்தின் முடிவு என்ன என்பதும், மாளிகைக்குள் நடந்தது என்ன, நடப்பது என்ன என்பதும் அஸ்வின்ஸ் தருகிற அசத்தலான திரை அனுபவம். இயக்கம் தருண் தேஜா
வசந்த் ரவி, அவருக்கு ஜோடியாக சரஸ்வதி மேனன், நண்பர்களாக முரளிதரன், உதயதீப்… அத்தனைப் பேரும் கதையின் தேவைக்கேற்ப பயப்படுகிறார்கள், பதறுகிறார்கள், கத்துகிறார்கள் கதறுகிறார்கள்.
பிளாஷ்பேக் காட்சியில் ஆராய்ச்சியாளராக வருகிற விமலா ராமனின் ஆவேசமான நடிப்பு மிரட்டுகிறது.
சுற்றிலும் கடல் பரப்பாக தண்ணீர் சூழ்ந்து ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்தில் கொஞ்சமே கொஞ்ச நேரம் மட்டுமே மாளிகைக்கு செல்ல தண்ணீர் விலகி வழி கிடைக்கும் என சித்தரிக்கப்பட்ட அந்த காட்சி அத்தனை பிரமாண்டம்.
விஜய் சித்தார்த்தின் பின்னணி இசை விறுவிறுப்பூட்ட, சச்சின் – ஹரியின் சவுண்ட் எபெக்ட் உயிருக்குள் ஊடுருவி உதறவைக்க, இருளில் நகரும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் எட்வின் சகாயின் மெனக்கெடல் தெரிகிறது.
வழக்கமான பேய்ப் படங்களில் வருவதுபோன்ற வேகமெடுக்கும் காட்சிகளோடு வேதத்தை இணைத்து திரைக்கதை அமைத்திருப்பது கவனம் ஈர்க்கிறது.
நொடிக்கு நொடி அலற வைக்கும் படங்களை விரும்புவோருக்கு அஸ்வின்ஸ் அசத்தல் சாய்ஸ்!