திருப்பங்களுக்குப் பஞ்சமில்லாத கிரைம் திரில்லர். அதிரிபுதிரி வேகமெடுக்கும் திரைக்கதையில் ‘அதோமுகம்.’
இளைஞன் மார்ட்டீன், பிரியமான தன் மனைவிக்கு வித்தியாசமான முறையில் பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி (Surprise) தர நினைக்கிறான். அப்படி ஒரு முறை அவன் செய்த முயற்சி சுவாரஸ்யமான தோல்வியில் முடிகிறது. அடுத்ததாக அவளை அவளுக்குத் தெரியாமலேயே கண்காணித்து, சந்தர்ப்பம் பார்த்து ஏதையாவது புதிதாய் செய்து, அவளை இன்ப அதிர்ச்சியில் மிதக்க விட தீர்மானிக்கிறான். அதற்காக அவளது மொபைல் போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் (App Download) செய்கிறான். அதன்மூலம் அவள் என்ன செய்தாலும், எதை செய்தாலும், எதை பேசினாலும், யாருடன் பேசினாலும் அத்தனை விஷயங்களையும் அவனால் லைவாக பார்க்க, கேட்க முடிகிறது.
அப்படி பார்க்கப் பார்க்க, கேட்கக் கேட்க அவளுடைய பேச்சு, நடவடிக்கை, தான் இல்லாத நேரத்தில் வந்து போகும் நபர் அவளுடன் நடந்துகொள்ளும் விதம், அவள் போகிற இடம், சந்திக்கிற நபர், அவருடன் சேர்ந்து ஒரு கொலைக்கான திட்டமிடுதல் என எல்லாமே விபரீதமாக இருப்பதை அறிந்து கொள்கிறான். இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தவனுக்கு கிடைப்பதெல்லாம் நிஜமான அதிர்ச்சி…
உண்மையில் அவனுடைய மனைவி யார்? அவள் அப்படியெல்லாம் விவகாரமான விஷயங்களில் ஈடுபட காரணம் என்ன? காரணமானவர்கள் யார்? ஒவ்வொரு கேள்விக்கும் அவன் தேடித் தேடி பதில்களைக் கண்டுபிடிக்கும்போது தூக்கி வாரிப்போடுகிறது அவனுக்கு அதிகமாக, நமக்கு கொஞ்சமாக…
மார்ட்டீனாக (நடிகர் அருண் பாண்டியனுடைய சகோதரியின் மகன்) எஸ் பி சித்தார்த். ஒவ்வொரு நிமிடமும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல், யார் நல்லவர் யார் கெட்டவர் என்பது புரியாமல் மனக் குழப்பத்துக்கு ஆளாகித் தவிக்கிற உணர்வை வெளிப்படுத்தியிருக்கும் விதம் கச்சிதம்.
வந்தோம் போனோம், ஒன்றிரண்டு பாடல் காட்சிகளில் ஹீரோவின் கைப்பிடித்து நடந்தோம் என்றில்லாமல் அப்பாவித்தனம், நயவஞ்சகம் இரண்டையும் கலந்துகட்டி வெளிப்படுத்துகிற சற்றே கனமான கதாபாத்திரத்தில் சைதன்யா. கணவனை சுட்டுத்தள்ள துப்பாக்கியை கையிலெடுத்து சட்டென கோணத்தை மாற்றிக் கொல்வதாகட்டும், கணவனுக்கு தெரியக் கூடாததெல்லாம் தெரிகிறபோது பயமும் பதட்டமும் காட்டுவதாகட்டும் நடிப்பில் நல்ல தேர்ச்சி. கிளைமாக்ஸில் கணவனிடம் கால் நூற்றாண்டு காலம் நடந்தது என்ன என்பதை விவரிக்கும்போது வெளிப்படுத்தும் தெனாவட்டு ஈர்க்கிறது.
சிறைவாசியாக சில நிமிடங்கள் மட்டுமே வருகிற அருண்பாண்டியன் நிறைவுக் காட்சியை தனது கெத்தான நடிப்பால் தாங்கிப் பிடித்திருக்கிறார்.
அனந்த் நாக், சரித்திரன், நக்கலைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் என இன்னபிற நடிகர்களின் பங்களிப்பு நேர்த்தி.
அருண் விஜய்குமாரின் ஒளிப்பதிவில் திரும்பிய பக்கமெல்லாம் பசுமை, பனிப் பொழிவு என்றிருக்கும் ஊட்டி, குன்னூர் பகுதிகளின் அழகை கண்குளிர அனுபவிக்க முடிகிறது.
சரண் ராகவனின் எளிமையான பின்னணி இசை, கிரைம் திரில்லர் கதைக்களத்துக்குப் பொருந்திப் போக, நிகழ்காலம் பிளாஷ்பேக் என முன்னும் பின்னுமாய் நகரும் கதையோட்டத்தை விறுவிறுப்பு குறையாமல் தொகுத்திருக்கிறார் விஷ்ணு விஜயன்.
கதையிலிருக்கும் சில திருப்பங்கள் வலிந்து திணித்தது போலிருக்க, சில காட்சிகள் இதெல்லாம் சத்தியமா சாத்தியமேயில்லை என்ற உணர்வைத் தருகின்றன.
மொபைல் போனை வைத்து யாரை வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம் என அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லியிருக்கும் இயக்குநர் சுனில் தேவ், திரைக்கதையின் விறுவிறுப்புக்காக இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்திருக்கலாம்.
அதோமுகம் – அலெர்ட்!