‘அழகிய கண்ணே’ சினிமா விமர்சனம்

காதலர்களை காவு வாங்கும் சாதிவெறி என்ற அரதப்பழசான சப்ஜெக்டில் ‘அழகிய கண்ணே.’

திண்டுக்கல்லில் கருவாட்டு வாசனையில் உருண்டு புரளும் குடும்பத்து இளைஞன் மீது, எதிர் வீட்டு பிராமணப் பெண்ணுக்கு காதல் வருகிறது. சின்னச் சின்ன எதிர்ப்புகளைச் சமாளித்து மணவாழ்க்கையில் இணையும் அவர்களுக்கு நல்லபடியாய் ஒரு மகளும் பிறக்கிறாள்.

அதுவரை கொஞ்சமே கொஞ்சம் ‘ஃபீல் குட் மூவி’ பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிற கதைக்களத்தில் புயல் வீசத் தொடங்குகிறது. அதன் தாக்கம் எப்படிப்பட்டது என்பது கிளைமாக்ஸ்.

ஸ்மார்ட்டான இளைஞன், தப்பு தண்டாவுக்கு போகாதவன், சினிமா இயக்கும் லட்சியத்தை மனதில் வைத்து அதற்கான முயற்சியிலிருப்பவன், முயற்சியில் ஜெயிப்பவன், அன்பான காதலன், அரவணைப்பான கணவன் என அலட்டலற்ற நடிப்போடு சுற்றிச் சுழன்றிருக்கிறார் (பட்டிமன்றப் பேச்சாளரும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவருமான திண்டுக்கல் ஐ லியோனியின் மகன்) லியோ சிவகுமார். நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் தந்திருக்கும் பங்களிப்பு பக்கா. நல்ல கதைகளில் தடம் பதித்தால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கலாம்.

எந்நேரமும் முகத்தில் மெல்லிய புன்னகை தவழும் ஐய்யராத்துப் பெண், படிய வாரிய தலைக்கேசம், நடை உடையில் அடக்க ஒடுக்கம், பேச்சில் கனிவு, செயல்பாடுகளில் துணிவு என மனதில் நிறைகிறார் சஞ்சிதா ஷெட்டி.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்குநர் பிரபு சாலமனாகவே வருகிறார். தன்னிடம் உதவியாளராக இருக்கும் இளைஞனின் திறமையை, லட்சியத்தை புரிந்து ஊக்குவித்து வழிகாட்டும் பாத்திரத்தை ஏற்று சரியாகச் செய்திருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் விஜய் சேதுபதியாக ஒருசில நிமிடங்கள் எட்டிப் பார்க்கிறார்; அவரது, கதைக்குத் தேவையான நடிப்புப் பங்களிப்பு நேர்த்தி.

சிங்கம் புலி இருக்கிறார். அவர் சிரிக்க வைப்பதற்குத்தான் அவ்வளவாக சீன்கள் இல்லை.

திடுதிப்பென வில்லனாக என்ட்ரி கொடுத்து ஹீரோவிடம் தாறுமாறாக அடிபடுகிற இயக்குநர் ராஜ்கபூர் உட்பட இன்னபிற பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு நிறைவு.

என் ஆர் ரகுநந்தன் இசையில் ‘என்னங்கடா நியாயம் இப்போ வெளுக்கப் போவுது சாயம்’ பாடலில் உற்சாகம் தெறிக்க, ‘வாடி வளர்பிறையே’ பாடல் மனம் வருடுகிறது.

சினிமா இயக்குவதை லட்சியமாக கொண்ட இளைஞர்கள் படும் அவதிகளை, முயற்சிகளை அநேக படங்களில் பார்த்தாயிற்று. அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருக்கிறது திரைக்கதை.

உணர்வுபூர்வமான மண்மணமிக்க படங்களை இயக்குகிற சீனு ராமசாமியின் உதவியாளரும் உடன்பிறந்த தம்பியுமான ஆர். விஜயகுமார் இயக்கியிருக்கும் முதல் படம் இது. அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களின் இதயத்தை ஈர்க்க வாழ்த்துகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here