பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியை 25 வருடங்களுக்குப் பிறகு இணைத்து வைக்கும் ‘பிஹைண்ட்வுட்ஸ்.’

பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் படத்தின் மூலமாக ‘பிஹைண்ட்வுட்ஸ்’ (Behindwoods) நிறுவனம் திரைப்படத் தயாரிப்பில் இறங்குகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ‘பிஹைண்ட்வுட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான மனோஜ் என் எஸ் இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இந்த படம் இந்தியாவின் இரண்டு மாபெரும் கலைஞர்களான ஏ.ஆர் ரஹ்மான், பிரபு தேவா இருவரையும் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய திரையிசை மற்றும் நடனத்துறையில் பேராற்றல் மிக்கவர்களான இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணியை ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் மூலம் மீண்டும் இணைத்துள்ளோம். இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொமுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகவிருக்கும் இந்த படம் வெகுஜன மக்களை நிச்சயம் ஈர்க்கும்.

காமெடி நடிப்பில் உச்சம்தொட்ட யோகிபாபு ஒரு வித்தியாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்தில் ரத்தமோ, வன்முறையோ, முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளோ எந்த வடிவத்திலும் இருக்காது. இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு மிக முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழில் ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா கூட்டணியை குறிக்கும் வகையில் #arrpd6 என தற்காலிகமாக பெயரிட்டுள்ளோம். சில மாதங்களில் படத்தின் தலைப்பை வெளியிடுவோம். படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்குகிறது. 2025-ம் ஆண்டு பான் – இந்தியா படமாக திரைக்கு வர திட்டமிட்டு உள்ளோம்” என்றார்.

படம் குறித்து பிரபுதேவா பேசியபோது “நடன இயக்குநர்களை ஊக்கப்படுத்திய இசைப்புயல் ரஹ்மானுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

படம் பற்றி ஏ.ஆர். ரஹ்மான் பேசியபோது, “சில நல்ல யோசனை நம் மனதுக்கு வரும், அதை இப்போ செய்யலாம் பிறகு செய்யலாம் என வருடங்கள் ஓடிவிடும், இந்த திரைப்படம் அதை மீண்டும் கண்டுபிடித்து என் கவனத்தை ஈர்த்தது” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here