‘பிக் பாஸ்’ ராஜு கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பன் பட்டர் ஜாம்‘ படத்தின் அறிமுகவிழாவும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடும் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
சாதாரணமாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பேப்பரிலும், சோசியல் மீடியாவிலும் வெளியிடுவதுதான் வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இப்படத்தின் 30 அடி உயரம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரசாத் லேப் திரையரங்க வளாகத்தில் உள்ள உயர்ந்த சுவரில் மேலிருந்து கீழாக இறக்கி மீடியா முன்பாக வெளியிட்டது புதுமையாக இருந்தது. அனைவரின் கை தட்டல்களுடன் கதாநாயகன் ராஜு அந்த ஃபர்ஸ்ட் போஸ்டர் முன்பு தோன்றி பேசினார்.
வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகள் நம்மைச் சுற்றி இருந்தாலும், அதை இதயத்தில் ஏற்றிக் கொண்டு வருந்தாமல், அந்தந்த கணத்தை கடந்தபடி சந்தோஷமாக சென்றால் வாழ்வு பன் பட்டர் ஜாம்’ போல் இனிக்கும் என்கிற ஜாலியான கருத்தை முதல் பார்வை போஸ்டரிலேயே அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்கள். இது அனைவரையும் ரசிக்க வைத்தது.
வழக்கமான போஸ்டர் பாணியில் இல்லாமல், முழுக்க முழுக்க கைகளாலேயே வரைந்து, ரினைசன்ஸ் ஓவிய அமைப்பில் இந்த போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள். சுற்றி பல்வேறு கால கட்டத்தில் உலக வரலாற்றில் நடந்த போர் காட்சிகளைப் போல், நடு நாயகமாக, படத்தின் நாயகன் ராஜு அமர்ந்திருக்கிறார். அவர்மேல் அம்புகள் துளைக்கப்பட்டும், வல்லூறுகள் அவர் மீது அமர்ந்து அவர் சதையை உண்ணுவது போலவும், ஆனாலும் நெற்றியில் வழியும் ரத்தத்தோடு, புன்னகை மாறாமல் ராஜு அமர்ந்து பன் பட்டர் ஜாம்’
சாப்பிடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அந்த போஸ்டர் மிகப் பெரிய கவன ஈர்ப்பை பெற்றிருக்கிறது.
இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக ராகவ் மிர்தாத் இயக்குகிறார். ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ராகவ் மிர்தாத் இயக்கும் இரண்டாவது படம் இது. படத்தை சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். எண்ணித்துணிக’ படத்தையடுத்து இரண்டாவது படமாக இந்த படத்தை தயாரிக்கிறார்.