காட்டுக்குள் நடந்த படப்பிடிப்பில் கதாநாயகி தைரியமாக நடித்தார்! -‘பெல்’ பட பிரஸ் மீட்டில் இயக்குநர் வெங்கட் புவன் பேச்சு

குருசோம சுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா டாரதி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியிருக்கிற படம் ‘பெல்.’

வெங்கட் புவன்‌ இயக்கியிருக்கும் இந்த படம்‌ இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந்தமிழர் களின்‌ மருத்துவம்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும் விதத்தில் உருவாகியுள்ளது. படம் வரும் ஜூன் 9-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் பத்திரிகையாளர்களுக்கு படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் நடிகர் குருசோமசுந்தரம் பேசும்போது, ‘‘பெல் படக் கதையை இயக்குநர் புவன் கூறும்போதே பிடித்தது. ரொம்ப பொடன்ஷியல் உள்ள கதை. எனது கதாபாத்திரம் வித்தியாசமான பார்வை கொண்டது என்பது தெரிந்தது. அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன். படத்திற்கு இசையும் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் வெற்றி பெறும் . அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவு தேவை” என்றார்.

இயக்குநர் வெங்கட் புவன் பேசும்போது, ‘‘படத்தை எடுக்க தயாரிப்பாளர் முக்கியம். பீட்டர் ராஜ் எனது நண்பர். அவர் இந்த படத்தை எடுங்கள் நான் தயாரிக்கிறேன் என்றார். நம்மை நம்பி படமெடுக்கிறார், படம் நன்றாக வரவேண்டும் என்று நினைத்தேன். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நல்ல படம் தர வேண்டும் என்று ரொம்பவும் ஆராய்ந்து இந்த கதையை தேர்வு செய்தோம். அவர் ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் படத்தின் உதவி இயக்குநர் போல் என்னுடனேயே இருந்து எல்லா பணிகளிலும் உதவினார். அவர் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு.

படத்தின் கதை வசனத்தை வெயிலோன் எழுதி உள்ளார். அவரும் எனது நண்பர்தான். தமிழில் நிறைய விஷயங்கள் மறைந்து கிடக்கிறது. வெயிலோன் தமிழ் விரும்பி. நிறைய படிப்பார், பேசுவார். அவர்தான் பழந்தமிழர் மருத்துவம் பற்றி கூறி அகத்தியர் ஆறு ரகசிய மருத்துவ குறிப்புகள் இருக்கிறது. அது பலருக்கு தெரியாது. அதை மையமாக வைத்து படம் எடுப்போம் என்றார். அது சொல்ல வேண்டிய விஷயம் என்று எனக்கும் தோன்றியது. அதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவரும் ஊக்குவித்தார்.

படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கும் குரு சோமசுந்தரம் நடிப்பு பற்றி எல்லோருக்குமே தெரியும். மிகவும் அருமையாக கலக்கியிருக்கிறார். ரொம்ப ஆதரவாகவும் இருந்தார் . அவரிடம் முதலில் கதையை சொன்னபோதே நடிக்க சம்மதம் தெரிவித்தார் அதுவே எனக்கு பெரிய தைரியத்தை கொடுத்தது. கதாநாயகனாக நடித்திருக்கும் ஶ்ரீதர் மாஸ்டருக்கு கதையை ஒன்லைன் தான் சொன் னேன் அவருக்கும் பிடித்திருந்தது. அவர் நடன இயக்குநராக இருந்தாலும் அவருக்குள் ஒரு நடிகன் மறைந்திருக்கிறான். அது இந்த படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. கதாநாயகி துர்கா. அவரும் மிகவும் நன்றாக நடித்துள்ளார். காட்டுக்குள் பெரும்பகுதி படப்பிடிப்பு என்றபோது ஆண்கள் சமாளித்து விடுவார்கள். ஆனால் ஒரு பெண் எனும்போது பல அசெளகரியங்கள் இருக்கிறது. அதை பொருட்படுத்தாமல் ரொம்ப தைரியமாக நடித்திருக்கிறார். மற்றொரு நாயகி ஸ்வேதாவும் நன்றாக நடித்திருக்கிறார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்‌ வாழ்ந்த அகத்தியர்‌, பாதுகாக்கப் படவேண்டிய ஆறு ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய ஆறு சீடர்களுக்குச்‌ சொல்லி, அதை பாதுகாக்கவும்‌ கட்டளையிட, ரகசியங்களைப்‌ பாதுகாப்பதில்‌ நன்மைக்கும்‌ தீமைக்கும்‌ இடையே நடந்த போராட்டமே படத்தின்‌ மையக்கதை‌. நான் லீனியர்‌ முறையில்‌ காதல்‌, குடும்பம்‌, ஆக்ஷன்‌ என அனைத்து அம்சங்களும்‌ மிகச்‌ சரியான விகிதத்தில்‌ கலந்த படமாக உருவாக்கியிருக்கிறோம். அந்த வகையில் பெல் அனைத்து வயதினருக்கும்‌ ஏற்ற படமாக இருக்கும்‌” என்றார்.

கதை, வசனகர்த்தா வெயிலோன் பேசும்போது, ‘‘இயக்குநர் வெங்கட் புவனும் நானும் நண்பர்கள். தமிழர்கள் வரலாறு நிறைய இருக்கிறது. அதில் ஒன்றை தேர்வு செய்து இக்கதை அமைக்கப்பட்டது. இது சொல்லப்பட வேண்டிய கதை என்று தயாரிப்பாளரும் சொன்னார். குருசோமசுந்தரம், மாஸ்டர் ஶ்ரீதர் உள்ளிட்ட எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக மறைந்த நிதிஷ் வீரா இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்ததை மறக்கவே முடியாது. அவர் அவ்வளவு சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் பீட்டர் ராஜ் முக்கிய பாத்திரத்தில் நடித்தி ருக்கிறார். கிணற்றில் குதித்து நடிக்க வேண்டும் என்றபோது உடனே நடிக்கிறேன் என்றார். ஆழமான கிணற்றில் குதிக்கத் தயாராக இருந்தவரிடம் சென்று உங்களுக்கு நீச்சல் தெரியுமா என்று கேட்ட போது தெரியாது என்றார். நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். நடிப்புக்காக உயிரை பணயம் வைக்கிறாரே என்று ஷாக் ஆகி, பிறகு அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து நீச்சல் காட்சியில் நடிக்க சொன்னோம். அவர் டைவ் அடித்து குதித்த பிறகு பாதுகாப்புக்கு இருந்தவர்கள் அவரை கிணற்றில் குதித்து காப்பாற்றினார்கள்” என்றார்.

படத்தின் நாயகன் ஶ்ரீதர் மாஸ்டர் பேசும்போது, ‘‘இந்த படத்தில் பெல் என்ற கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க கிடைத்த வாய்ப்பு பெரியது. இதற்காக இயக்குனர், தயாரிப்பாளருக்கு நன்றி. படத்தில் வசனம் பெரிய அளவில் ஒர்கவுட் ஆகியிருக்கிறது. வெயிலோனின் வித்தியாசமான சிந்தனை வசனத்தில் வெளிப்பட்டி ருக்கிறது. பார்வையற்ற ஒருவனுக்கு மற்றவர்களது உருவம் எப்படி தெரிகிறது என்பதை வசனத்திலேயே அருமையாக சொல்லியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அசத்தியிருக்கிறார்கள். நடன இயக்குநராக இதுவரை எனக்கு ஆதரவு தந்து ஊக்குவித்தீர்கள். இப்போது நடிகனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.

கதாநாயகி துர்கா பேசும்போது, ‘‘சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பலமுறை முயன்றிருக்கிறேன். ஆனால், நான் திருமண ஆன பெண் என்பதால் அதை சொல்லி வாய்ப்பு தர மறுத்தார்கள். பெல் படத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பு வாழ்வில் மறக்க முடியாது. சீனியர்களுடன் இணைந்து நான் நடித்தது நல்ல அனுபவம். இந்த படத்தில் வேறு பாத்திரத்துக்குத்தான் ஆடிஷன் செய்தேன். ஆனால், ஹீரோயின் வேடம் தந்தார்கள். இயக்குநர், தயாரிப்பாளர் உடன் நடித்தவர்கள், டெக்னீஷியன்கள், நடிக்க அனுமதித்த என் கணவர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.

படக்குழு:
தயாரிப்பு நிறுவனம்: ப்ரோகன் மூவிஸ்
இயக்குநர்: ஆர்.வெங்கட் புவன்
கதை & வசனம்: வெயிலோன்
ஒளிப்பதிவாளர்: பரணிக்கண்ணன்
படத்தொகுப்பு: தியாகராஜன்
இசை: ராபர்ட்
கலை இயக்குநர்: நட்ராஜ்
சண்டை: ஃபயர்’ கார்த்திக்
பாடலாசிரியர்: பீட்டர் ராஜ்
நடனம்: தீனா
சிகை அலங்காரம்: கணபதி
மக்கள் தொடர்பு: வேலு
புகைப்படம்: குமரேசன்
விளம்பர வடிவமைப்பு: ஷபீர்
நிர்வாக தயாரிப்பாளர்: கிருஷ்ணகுமார் & அழகர்
DI வண்ணமயமானவர்: ராகேஷ்
ஆடை வடிவமைப்பாளர்: சிவகார்த்திக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here