ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று விநாயக சதுர்த்தி நன்னாளில் வெளியிடப்பட்டது.
பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கே ஜி எஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
படத்தை ராஜேஷ் எம் இயக்க, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கிறது.
படம் பற்றி இய்ககுநர் எம். ராஜேஷ் பேசும்போது, “ஆக்ஷன் ததும்பும் வித்தியாசமான திரைப்படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து முத்திரை பதித்து வந்தாலும் ‘ஜெயம்’, ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’, மற்றும் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஆகிய குடும்ப கதையம்சம் உள்ள படங்கள் அவரது திரையுலகப் பயணத்தில் மிகவும் முக்கியமானவை. அந்த வரிசையில் ‘பிரதர்’ இணையும் என்பதில் சந்தேகம் இல்லை.
சென்னை, ஹைதராபாத், ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கலகலப்பான குடும்ப கதைக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி மீண்டும் திரும்பும் இந்த படம் 6 முதல் 60 வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்” என்றார்.
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இந்த படத்திற்காக இணைந்துள்ளதால் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் உடன் பல்வேறு படங்களில் பணியாற்றிய இவர், தனுஷ் நடித்த ‘மாறன்’, ஜிவி பிரகாஷ் நடித்த ‘செம’ மற்றும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றிய மற்ற விவரங்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளில் வெளியாகும்.