பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி, வெற்றிமாறனின் உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியுள்ள Bad Girl படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
படத்தின் தயாரிப்பாளர்கள் வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகைகள் அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, நடிகர் ஹ்ரிது ஹருண், படத்தின் எடிட்டர் ராதா ஸ்ரீதர், சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி எஸ் தாணு, இயக்குநர் மிஷ்கின், நடிகை டாப்ஸி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ”இந்தக் கதை எனக்கு முன்பே தெரிந்தாலும் கூட, கடைசியாக தான் இந்தப் படத்தில் இணைந்தோம். இந்தப் படத்தின் சூட்டிங்கிக்கு போனபோது சாந்தி பிரியா மேடமை சந்தித்தேன். அப்பொழுது அவர், ‘சார். இந்த படம் எல்லா ஃபெஸ்டிவல்லேயும் ஹிட் அடிக்கும் சார். நேஷனல் அவார்டு கூட கிடைக்கும் சார்’ என்று சொன்னார். அப்போது நான் வர்ஷாவிடம், ‘இந்தப் படத்தை உன்ன விட, உன் படத்துல நடிக்கிறவங்க ரொம்ப அதிகமா நம்புறாங்க. அதனால இந்த படத்தை நல்லா எடுத்துடுமா?’ என்றேன். வர்ஷாவும் எனக்கு கொடுத்த கமிட்மெண்டை விட 100% அதிகமாகவே கொடுத்துள்ளார்.
எனது கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனியில் வரும் கதைகளில், எந்தக் கதை வித்தியாசமாக தெரிந்தாலும், அனுராக் கேஷ்யப்பிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படி இந்த கதையை பகிர்ந்து கொள்ளும் போதே நாங்கள் இருவரும் சேர்ந்து பண்ணும் ஐடியா இருந்தது. வேறு சில காரணங்களுக்காக தள்ளிப் போனது. ஆனால் விடுதலை 2 பட சூட்டிங்கின் போது, இந்தப் படத்தின் முதல் பாதியை பார்த்த அனுராக், படத்தை மிகவும் பாராட்டி நானே இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினார். ஆக அனுராக் கேஷ்யப் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இதுதான்.
அனுராக் கேஷ்யப் இந்தப் படத்தின் இசைக்காக அமித் திருவேதியை நானே தொடர்பு கொண்டு பேசுகிறேன் என்று கூறி, அமித் திரிவேதியை இந்த படத்தின் இசைக்கு கொண்டு வந்தார். ஆக அமித் திரிவேதிக்கும் இதுதான் முதல் படம். மேலும் ரோட்டர் டாம் திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதில் முக்கிய பிரிவான டைகர் காம்படிசன் பிரிவில், முதல் பெண் இயக்குனரான வர்ஷா பரத்தின் Bad Girl படமும் இடம்பெற்று இருப்பது, தனிச்சிறப்பு . இப்படி பல ‘முதல்’ விஷயங்கள் இருப்பதால் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இந்த நிகழ்வை பெரிதாக நடத்துகிறது” என்றார்.
படத்தின் இயக்குநர் வர்ஷாபரத், ”பொதுவாக வெற்றிமாறன் சாரிடம், நாங்கள் ஏதாவது ஒரு ஐடியாவை சொல்லிக் கொண்டே இருப்போம். அதைக் கேட்டு அவர் இந்த கதை தேரும், தேராது! படமாக வரும், வராது என்று ஃபீட்பேக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அப்படித்தான் இந்தப் படத்தின் கதையைப் பற்றி கூறும் பொழுது, இது ஒரு படமாக வரும் என்று கூறினார். இப்படித்தான் இந்த படத்தின் கதை உருவானது.
நம் தமிழ் சினிமாவில் பெண் என்றால் தாய், கடவுள், தேவதை இப்படி பல விதமாக காட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் என்ன நினைக்கிறாள், அவளின் உண்மையான உணர்வு என்ன என்பதை சொல்லக்கூடிய கதை தான் இந்த Bad Girl. பெண்களை புனிதர்களாக பார்க்காதீர்கள், மனிதர்களாக பாருங்கள் என்று தான் இந்த படம் கூறுகிறது என்றார்.
இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், ”விடுதலை பட சூட்டிங்கின் போதுதான் வெற்றிமாறன் இந்த படத்தின் கதையை பற்றி சொன்னார். படத்தின் முதல் பாதியை பார்த்து பிரமித்து போனேன். பெண்கள் உலகம் எப்படிப்பட்டது என்று ஆண்கள் புரிந்து கொள்வதற்காகவே இந்தப் படம் எடுக்கப்பட்டது போல் இருந்தது. படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்” எனறார்.
மூத்த நடிகை சாந்தி பிரியா, “செண்பகமே செண்பகமே” பாடல் மூலம் இன்னும் என்னை மக்கள் ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பதற்கு நன்றி. இப்பொழுது ‘Bad Girl’ படத்தின் மூலம் மீண்டும் என்னை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். நான் மீண்டும் சினிமாவில் ஒரு கம்பேக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சமயத்தில், காஸ்டிங் வர்ஷாவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, ” வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்க வேண்டும் எனக் கூறியதும், நானும் உடனே சரி என்று ஒத்துக் கொண்டேன்” . ஆனால் படம் முழுவதும் மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும், ஒரே ஒரு போட்டோ மட்டும் அனுப்ப முடியுமா? என்று கூறியதும் ஒரு நிமிடம் திடுக்கிட்டேன், பின் சன் லைட்டில் ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுத்து அனுப்பினேன்.
பின் இயக்குனர் வர்ஷா பரத் இந்தக் கதையை சொல்லி முடித்த பின், நான் அவரிடம், இந்தப் படம் ரிலீஸ் ஆனவுடன் உங்களுக்கு சிகப்பு கம்பளம் காத்துக் கொண்டிருக்கிறது’ என்று கூறினேன். ஏனெனில் இந்தப் படம், அப்படி ஒரு கதையைத்தான் அழுத்தமாக கூறி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த கதை, எனக்கும் எனது பெற்றோருக்கும் உள்ள உறவு மற்றும் எனக்கும் எனது மகனுக்கும் உள்ள உறவு என்று பல நிகழ்வுகளை சம்பந்தப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. படம் வெளிவந்தவுடன், பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையிலும் இந்தக் கதை கனெக்ட் பண்ணக்கூடியதாகவே இருக்கும்” என்றார்.
படத்தின் கதை நாயகி அஞ்சலி சிவராமன், இயக்குநர் மிஷ்கின், நடிகை டாப்ஸி உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.