இந்த படம் எந்த மதத்தையும் புண்படுத்தாமல், மனிதநேய அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது! -‘பாய்’ பட விழாவில் கமலநாதன் புவன்குமார் பேச்சு

மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தும் விதத்தில் உருவாகியுள்ள படம் ‘பாய்.’

கமலநாதன் புவன்குமார் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகனாக ஆதவா ஈஸ்வரா, நாயகியாக நிகிஷா, வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளனர்.

‘கே ஆர் எஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா டிசம்பர் 13;2023 அன்று சென்னையில் நடந்தது.

படம் பற்றி இயக்குநர் கமலநாதன் புவன் குமார், ‘‘நானும் நாயகன் ஆதவா ஈஸ்வராவும் நண்பர்கள்.அவர் என்னிடம் பேசும்போது நீங்களும் வளருங்கள் நானும் வளர்கிறேன் என்று தான் சொல்வார். அப்படி சம மரியாதை கொடுப்பவர்.

பாய் என்றால் சகோதரன் மட்டுமல்ல நண்பன் என்றும் சொல்லலாம். இது ஒரு நான் லீனியர் வகை திரைப்படமாக உருவாகியிருக்கிறது. படத்தின் முதல் பாதியில் கேள்விகளாகவும் இரண்டாவது பாதியில் அதற்குரிய பதில்களாகவும் வரும்படி இந்த திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் எந்த மதத்தையும் புண்படுத்தவில்லை. மனித நேயம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது என்கிற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வேறு எதுவும் படத்தைப் பற்றி நான் கூற விரும்பவில்லை” என்றார்.

நாயகன்ஆதவா ஈஸ்வரா, ‘‘திரையுலகில் சிறிய படம் பெரிய படம் என்கிற பாகுபாடு தேவையில்லை. இது ஒரு படம் அவ்வளவுதான். சிறிய படத்திற்கும் பெரிய படத்திற்கும் எல்லாருமே உழைக்கிறார்கள் அதைவெளியிடுகிற திரைகளின் எண்ணிக்கை தான் வேறுபடுகிறது. அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி எல்லாம் ஒன்றுதான். அந்த வகையில் நாங்கள் எங்கள் உழைப்பை இந்த படத்திற்கு நூறு சதவீதம் கொடுத்துள்ளோம்” என்றார்.

இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிற, பிரபல திரைப் பாடலாசிசிரியர் உடுமலை நாராயண கவியின் கொள்ளுப்பேத்தி ஸ்ரீ நியா, ‘‘பாய் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்.சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். இதில் நிறைய திருப்பங்களும் அழகழகான முடிச்சுகளும் இருக்கும். இன்றைய சமுதாயத்தில் நடக்கிற விஷயம் மட்டுமல்ல நடக்கப் போவதையும் இப்படத்தில் கூறியிருக்கிறோம் .தமிழ் சினிமாவிற்கு இந்தக் கதை புதிதாக இருக்கும்” என்றார்.

நடிகர் லொள்ளு சபா ஜீவா, ‘‘இந்த படத்தின் போஸ்டரை பார்த்தேன் குல்லா, விபூதிப் பட்டை, கையில் சிலுவை என்று உள்ளது .இது தலைவரின் ஜக்குபாய் ஸ்டைல் ஆச்சே என்று இயக்குநரிடம் கேட்டேன் அவரும் தலைவரின் விசிறி என்றார். அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டியது அன்பையும் நல்லவற்றையும் மட்டும் தான். அப்படி மனிதநேயத்தை பேசும் இந்தப் படம் சரியான நேரத்தில் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு, ‘‘முதலில் இந்தப் படத்தைத் தணிக்கை செய்த சென்சார் துறைக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்.பாய் என்று தலைப்பு வைத்து, அந்தப் படத்தை எப்படி சென்சாருக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைத்திருந்தேன். ஒரு வழியாக சென்சார் முடிந்துள்ளது அதற்காகப் பாராட்டுகிறேன்.
இந்த தலைப்பைத் தணிக்கைக்கு ஏற்று பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்தப் படம் சமூக நல்லிணக்கம் பேசும் படமாகத் தான் இருக்கும். இன்று குறைந்த முதலீட்டுப் படங்களும் நன்றாக இருந்தால் ஓடுகின்றன. நல்ல படங்களை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். இந்தப் படத்திற்கும் மக்கள் ஆதரவு தந்து கொண்டாட வேண்டும்” என்றார்.

விழாவில் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் அக்ஷய், நடிகர் தீரஜ், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன், பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி. எஸ். ஆர். சுபாஷ், பாடலாசிரியர் சங்கத் தலைவர் தமிழமுதன், இயக்குநர் ஷிவானி செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here