‘பர்த்மார்க்’ சினிமா விமர்சனம்

மனிதர்கள் சந்திக்கும் உளவியல் சிக்கல்களை ஊடுருவிப் பார்க்கும் படங்களின் வரிசையில் ‘பர்த் மார்க்.’

தாய்மையடைந்திருக்கும் பெண்களை இயற்கை முறையில் சுகப்பிரசவத்துக்கு தயார் படுத்துகிற மையம், அதில் கணவனின் வலியுறுத்தலால் வந்து சேர்கிற ஒரு பெண். அங்கு அவள் சந்திக்கும் சவால்கள், சங்கடங்களை சுற்றிச் சுழலும் சைக்கலாஜிக்கல் திரில்லர்.

கர்ப்பிணியாக மிர்னா மேனன். இயற்கை முறை பிரசவ மையத்துக்கு தயங்கித் தயங்கி போய்ச் சேர்வது, தலைமை மருத்துவ பெண்மணி பயங்காட்டும் தோற்றத்திலிருப்பதை பார்த்து மிரள்வது, அந்த மையத்தின் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாமல் தவிப்பது, கணவனின் ஏடாகூடமான எக்குத் தப்பான நடவடிக்கைகளால் மன உளைச்சலுக்கு ஆளாவது, கணவனின் சுயரூபம் தெரிந்தபின் தப்பிப் பிழைக்க அதிரடி முயற்சியில் ஈடுபடுவது என காட்சிகளுக்குப் பொருத்தமான நடிப்பை தந்திருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக அவர் அனுபவிக்கும் வேதனைகள் மென் மனதுக்காரர்களை கலக்கமடையச் செய்வது உறுதி.

மிர்னாவின் கணவராக, ராணுவ வீரராக, கல் மனசுக்காரராக ஷபீர் கல்லாரக்கல். போர்க்களத்தில் ஏற்பட்ட மனரீதியிலான பாதிப்பால், மனைவியின் கருவிலுள்ள குழந்தை தன்னுடையதில்லையோ என சந்தேகப்படுவது, மனைவியிடம் அன்பு காட்டிக் கொண்டே இவன் நல்லவனா கெட்டவனா என குழப்பும்படியான செயல்பாடுகளில் இறங்குவது என சற்றே சைக்கோ தனமான பாத்திரத்திற்கு தரமான நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார்.

இயற்கை சுகப்பிரசவ மையத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கிற பி.ஆர்.வரலட்சுமி, அவரது உதவியாளர்களாக தீப்தி, பொற்கொடி, மையத்தில் பாதுகாவலராக கெடுபிடி ஆசாமியாக இந்திரஜித் என மற்ற கதாபாத்திரங்கள் கதைக்குத் தேவையான நடிப்பை தெளிவாக தந்திருக்க,

மையம் அமைந்துள்ள மலைப் பகுதியின் பரந்து விரிந்த பசுமையை அதன் அழகு துளியும் குறையாமல் படமாக்கியிருக்கிறார் உதய் தங்கவேல்.

உயிரும் உணர்வும் பின்னிப் பிணைந்த கதையோட்டத்துக்கு கனம் சேர்த்திருக்கிறது விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை.

‘வலி’மையான கதையை எடுத்துக் கொண்டு, ஆறேழு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு, எளிமையான படைப்பாக்கியிருக்கிற இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரனின் உருவாக்கத்திலிருக்கும் உழைப்புக்கு பாராட்டு எனும் உரத்தை பரிசளிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here