வித்தியாசமான படங்களை விரும்புவோர் அதிகரித்தபின் அவர்களைத் திருப்திபடுத்தும் விதத்திலான படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறது டார்க் காமெடி ஜானரில் உருவான ‘ப்ளடி பெக்கர்.’
அதுவொரு அரண்மனை. அங்கு, சொத்து பிரிப்பு விவகாரத்தில் பேச்சு வார்த்தைகளால் மோதிக் கொள்கிற வாரிசுகள் ஒரு கட்டத்துக்கு மேல், ஒருவரை ஒருவர் கொல்லவும் தயாராகிறார்கள். அந்த நிலையில் அவர்களிடம், பிச்சைக்காரன் ஒருவன் சிக்குகிறான். அவனை ஒரு வாரிசாக கணக்கு காட்டி, போட்டுத்தள்ள திட்டமிடுகிறது அந்த கும்பல்.
அவர்களிடமிருந்து அவன் தப்பிக்க நினைக்கிறான். ஆனால் அது சாத்தியமில்லை என்பதுபோல் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறுகின்றன… தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்… இயக்கம் சிவபாலன் முத்துக்குமார்
அட கவினா இது? என ஆச்சரியப்படும்படி நிஜ பிச்சைக்காரன் போலவே மாறியிருக்கிறார் கவின். உழைக்க விரும்பாமல் பிச்சையெடுக்கும் ஆரம்பக் காட்சிகளில் ரசிக்க வைத்து, அரண்மனைக்குள் சிக்கி உயிர் பிழைக்க போராடும்போது தேவைக்கேற்ப பயத்தையும் பதற்றத்தையும் கலந்து கட்டி கவனிக்க வைக்கிறார். விபத்தில் மனைவியை இழந்த வலியை பிரதிபலிக்கும்போது தனக்குள் தேர்ந்த நடிகன் இருப்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார்.
‘போர்த்தொழில்’ பட வில்லன் சுனில் சுகதாதான் இதிலும் வில்லன். ஆனால், வழக்கமாக இல்லாமல் வேறோரு விதமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு. அதை சரியாகப் பயன்படுத்தி தன்னைக் கவனிக்க வைக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லி முந்தைய படங்களில் பார்த்தது போன்ற அதே தோற்றத்தில் வந்து அதே ஜெராக்ஸ் நடிப்பைத் தந்திருந்தாலும் சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். கதையில் அவர் பேய் என்பது விசேஷச் செய்தி.
டி.எம்.கார்த்திக், மாருதி பிரகாஷ்ராஜ், பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, அனார்கலி நசர், திவ்யா விக்ரம், முகமது பிலால், யு.ஸ்ரீ சரவணன், தனுஜா மதுரபாந்துலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி ஏகப்பட்ட நடிகர் நடிகைகள்… அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
கதை நடக்கும் அரண்மனையைப் பார்க்கும்போது, கலை இயக்குநர் யார் என தெரிந்துகொள்ளும் ஆர்வம் வருகிறது. ஒளிப்பதிவாளர் சுஜித் சரங்கின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.
ஜென் மார்ட்டினின் பின்னணி இசை கதையோட்டத்திற்கு தேவையான பலத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது.
அது எப்படி, இது எப்படி என சிலபல கேள்விகளை மனதுக்குள் உருவாக்கி, கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க அத்தனை கேள்விகளுக்கும் பதில் தரும் விதமான காட்சிகளைக் கோர்த்திருப்பது சுவாரஸ்யத்தின் சதவிகிதத்தைக் கூட்டுகிறது.
வித்தியாசமான படங்களை வெறித்தனமாக பார்க்கிறவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை… பாட்டு, பைட்டு, ரெகுலர் காமெடி என கமர்சியல் டெம்ப்ளேட்டுக்குள் அடங்கும் படங்களை விரும்புகிறவர்களுக்கு இந்த படம் தலைவலியைத் தராமல் விடாது!