திறமையாளர்களை செல்வாக்கு மிக்கவர்கள் செல்லாக் காசாக்க முயற்சிப்பதும், அந்த முயற்சியை முறியடிப்பதற்கான போராட்டமுமாய் பல படங்களைப் பார்த்தாயிற்று… இது பந்துவீச்சு மைதானத்தில் பந்தாடப்படுகிறவர்களின் கதை. எளிய மக்கள் சந்திக்கிற ஏற்றத்தாழ்வு போராட்டம். இந்த கதைக்கு கனம் சேர்க்க எழுதிய திரைக்கதை மூலம் காட்சிக்கு காட்சி ஃபோர், சிக்ஸர் என எகிறியடித்திருக்கிறார் எஸ். ஜெயக்குமார்!
அந்த கிராமத்தில் கிரிக்கெட் பிரியர்கள் சிலர் ‘ப்ளூ ஸ்டார்’, ‘ஆல்பா’ என அணி பிரிந்து ஆடுகளத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டுதான் என்றாலும், இருதரப்பும் எதிரணியை நிஜ எதிரியாக நினைக்க வெறியாட்டமாகிறது பந்தாட்டம்.
இரு அணிகளின் மோதலை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள, சிறிய மனம் கொண்ட ஒரு பெரிய மனிதன் சூழ்ச்சி செய்கிறான். சாதி, பொருளாதாரம் என எல்லாவற்றிலும் ஏற்றத்திலிருக்கிற சில வெளியூர் வீரர்களை களமிறக்கி புளூ ஸ்டார் அணியை அலற விடுகிறான். அப்படி அலற விடுகிற வீரர்கள் ஒரு கட்டத்தில் இரு அணிக்கும் பொது எதிரியாகிவிட இனி கதையின் போக்கு நாம் நினைத்தபடி, யூகித்தபடி, எதிர்பார்த்தபடி…
புளூ ஸ்டார் அணியின் தலைவனாக ரஞ்சித் என்ற பெயர் சுமந்து வருகிற அசோக் செல்வன், அவருக்கு தம்பியாக வருகிற பிரித்வி, ஆல்பா அணியின் தலைவனாக சாந்தனு மூவருமே நிஜத்திலும் கிரிக்கெட்’டில் தேர்ந்தவர்கள் என்பதால் ஏற்றுள்ள பாத்திரத்தில் 100% பொருந்துகிறார்கள். ஹேர் ஸ்டைல், நடை உடை, பழக்க வழக்கம், காதல் மோதல் என எல்லாவற்றிலும் 90 களின் காலகட்ட இளைஞர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே மாறியிருக்கிறார்கள்!
ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட கதையில் ‘மென்டார்’ இல்லாமலா? கிரிக்கெட்டில் கில்லியாக இருந்து, எதிராளிகளால் வெட்டுப்பட்டு ஊனமான காலும் உரமேறிய மனதுமாய் பக்ஸ் பகவதி பெருமாள். தன்னை மதிக்கிற இரு அணி வீரர்களையும் ஓரணியில் இணைப்பது, பலசாலியை எதிர்ப்பதற்கான பக்குவத்தை அவர்களிடம் விதைப்பது, விளையாட்டின் நுணுக்கங்களை விளக்கிச் சொல்லி வீரியமேற்றுவது என அவரது நடிப்பு கதையோட்டத்துக்கு பலம்!
அசோக் செல்வனின் காதலியாக கீர்த்தி பாண்டியன். விடலைப் பருவத்து காதல், சின்னச் சின்ன சந்திப்பு, சிலிர்ப்பு தரும் பேச்சு, மெல்லிய புன்னகை, இன்லேன்ட் லெட்டர் பரிமாற்றம் என அவ்வப்போது அட்டனன்ஸ் போடுகிறார்.
பிரித்விக்கு ஜோடியாக திவ்யா துரைசாமி. ஒன்றிரண்டு காட்சிகளில் மின்னல் போல் எட்டிப் பார்ப்பதோடு சரி.
அசோக் செல்வனின் அப்பாவாக குமரவேல், அம்மாவாக லிஸி ஆண்டனி, இந்த இடத்துக்கு இன்னார்தான் வரவேண்டும் என்ற உயர்சாதி இறுமாப்பில் ஊறிப்போன கிரிக்கெட் கோச் என மற்ற பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு நேர்த்தி!
காட்சிகளின் தேவைக்கேற்ப பின்னணி இசையில் ஏற்ற இறக்கங்களை தந்திருக்கும் கோவிந்த் வசந்தா, ரயிலைத் தள்ளும் மேகமே’ பாடலில் இதம் கூட்டியிருக்கிறார்.
கதை நிகழ்விடமான அரக்கோணத்தை கவனம் ஈர்க்கும்படியான பல கோணங்களிலும், கிரிக்கெட் போட்டிகள் பெயருக்காக அல்லாமல் நிஜத்திலேயே நடந்தேற அதனை ஸ்டேடியத்தில் அமர்ந்து பார்க்கிற உணர்வைத் தருகிற விதத்திலும் படமாக்கியிருக்கிறார் தமிழ் அ அழகன்.
போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களை தேர்வு செய்பவர்களிடம் இருக்கிற ஏற்றத்தாழ்வு பார்க்கிற மனோபாவம், சாதிப் பாகுபாடு என பலவற்றையும் இழுத்துப் போட்டு வெளுத்திருக்கிறது பிளே கிரவுண்டை சுற்றிச் சுழலும் ஸ்கிரின்பிளே!
படத்தின் நீளம் சற்றே அயர்ச்சி தருவது உட்பட உருவாக்கத்தில் சில குறைகள் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி விளையாட்டில் தான் விரும்பிய உயரத்தை அடைய நினைக்கும் ஏழை எளியோர் அனுபவிக்கும் வலிகளை உணர்வுபூர்வமாகவும், உண்மைத் தன்மையோடும் கருவாக்கி உருவாக்கியிருப்பதற்காக படக்குழுவை பாரபட்சமின்றிப் பாராட்டலாம்!