மனிதர்களாக இருந்தாலும் விலங்குகளாக இருந்தாலும் தாய்ப்பாசம் என்பது ஒரே விதத்திலான உணர்வை உள்ளடக்கியது என்பதை, கரடிகளை முக்கிய கதாபாத்திரங்களாக்கி எடுத்துக் காட்டியிருக்கிற அசத்தலான அனிமேஷன் படைப்பு.
ப்ரையர், ப்ராம்பிள் என்ற இரண்டு கரடிக் குட்டிகள் ஒரு அசம்பாவித சம்பவம் மூலம் தங்களின் பாசமான தாயைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றன. அந்த குட்டிகள் நன்கு வளர்ந்த நிலையில் தங்களின் தாயை சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. தாயுடன் குட்டிகள் உற்சாகமாக நாட்களைக் கடத்துகின்றன.
அந்த உற்சாகத்தைக் கெடுக்கும்படி, ஒருசில சம்பவங்கள் நடக்கிறது. அப்போது அந்த தாய்க்கரடி நிஜக் கரடியல்ல; ரோபோ என்பது தெரியவருகிறது. இப்படி நகரும் கதையில், அந்த கரடிகளின் தாய்க் கரடிக்கு என்னவானது? கரடியைப் போன்ற ரோபோவை உருவாக்கியவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது அசத்தலான ஃபிளாஷ்பேக். கரடிகளுக்கு தாய் கிடைத்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்.
பூனி பியர்ஸ் தொடரில் வெளியாகும் இந்த 9-வது படத்தை Lin Yongchang, Shao Heqi இருவரும் இயக்கியிருக்கிறார்கள்.
ஆதரவற்ற கரடிக் குட்டிகளை வளர்க்க உருவாக்கப்படும் ரோபோ, குட்டிகளுக்கு உணவூட்டும் விதம், குளிப்பாட்டும் விதம், சிரிக்கும் விதம் கலகலப்பூட்டுகிறது. குட்டிக் கரடிகளின் சேட்டைகளும் ரசிக்க வைக்கின்றன. மூன்று கரடிகளும் மகிழ்ச்சி, சோகம், கோபம் என உணர்வுகளை கச்சிதமாக பிரதிபலிப்பது மனதில் வெகுநாட்கள் தங்கியிருக்கும்.
நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ரோபோ கரடிக்கு, சிப் மாற்றி தீய இயல்பை திணிக்கிற அறிவியல் பேராசிரியரிலிருந்து மற்ற பாத்திரங்கள் அனைத்தும் கதையை விட்டு துளியும் நகராதபடி உருவாக்கப்பட்டிருப்பது கதையோட்டத்தின் பலம். அந்த பாத்திரங்களின் தோற்றங்களும் கவனிக்க வைக்கின்றன.
சயின்ஸ் பிக்சன் பேன்டஸி கதைக்களத்துக்கு உரிய பிரமாண்டம், அதே பிரமாண்டத்துடன் நீளும் சாகசக் காட்சிகள், கதையின் சுறுசுறுப்புக்கேற்ற பின்னணி இசை என எந்த அம்சத்திலும் குறையில்லை.
இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளை குஷியாக்க, பெற்றோரும் ரசித்து மகிழ இந்த படத்துக்கு தயங்காமல் டிக்கெட் எடுக்கலாம்!