‘குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய நகைச்சுவைப் படம்’ என்று சொல்லிச் சொல்லி, எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டு வெளிவந்திருக்கும் படம்.
கார்த்திக் (ஜெயம் ரவி) சட்டப் படிப்பை பாதியிலேயே விட்டு விலகி, எதெற்கெடுத்தாலும் ‘லா’ பாயிண்ட் பேசிக் கொண்டு திரிகிறார். ஊர் வம்பை விலைக்கு வாங்கும் அவரால் அவருடைய அப்பா, அம்மாவுக்கு ஏகப்பட்ட தலைவலி. ஒரு கட்டத்தில், கார்த்திக் மீது உயிருக்கு உயிராய் பாசம் காட்டும் அவனது அக்கா, தம்பியைத் திருத்துகிறேன் என்று சொல்லி தன்னுடன் அழைத்துப் போகிறார். போன இடத்திலும் கார்த்திக்கின் வா’லா‘ட்டம் தொடர, குடும்பத்தில் ஈகோ மோதல் உருவாகி அந்த அக்கா கணவனை விட்டுப் பிரிகிற அளவுக்கு நிலைமை மோசமாகிறது.
அதுவரை தான் செய்வதெல்லாம் சரி என நினைத்துக் கொண்டிருந்த கார்த்திக், தன் இயல்பை சற்றே மாற்றிக்கொண்டு அக்காவை அவரது கணவரோடு சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்குகிறார். அந்த முயற்சியில் அவர் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களே மீதிக்கதை…
கடந்த சில வருடங்களாக கடுமையான உடலுழைப்பை தர வேண்டிய கதாபாத்திரங்களில் ஆக்சன் அடிதடி என வலம்வந்த ஜெயம் ரவிக்கு ரிலாக்ஸாக களமாடுகிற வாய்ப்பு. பொதுப் பிரச்சனைகளில் தலையிட்டு அது தப்பு இது தப்பு என ரூல்ஸ் பேசி ரகளை செய்வதாகட்டும், அக்காவின் குடும்பத்துடன் சேர்ந்து வகிக்கும்போது தனது இயல்பால் அவமானங்களைச் சந்தித்தாலும் அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் கடப்பதாகட்டும், அக்காவை அவரது கணவனுடன் சேர்த்துவைக்க சாதுர்யமாக முயற்சி செய்வதாகட்டும் நடிப்புப் பங்களிப்பில் மனிதர் குறைவைக்கவில்லை. ‘மக்காமிஸி’ பாடலில் குஷியாக ஆடுவதும் ரசிக்க வைக்கிறது.
கதாநாயகியாக பிரியங்கா மோகன். ஜெயம் ரவியைக் காதலிப்பதும் பாடல் காட்சியில் அவருடன் இணைந்து ஆடுவதையும் தவிர வெறெந்த வேலையுமில்லை.
தன் ‘பிரதர்’ மீது பாசம் நேசம் என அனைத்தையும் கொட்டிக் குவிக்கும் பூமிகாவின் அலட்டலான நடிப்பு, பூமிகாவின் கணவராக வருகிற நட்டி நட்ராஜின் கெத்தான நடிப்பு, பூமிகாவின் மாமனாராக ஈகோ பேர்வழியாக வருகிற ராவ் ரமேஷின் பந்தாவான நடிப்பு என அவரவர் பங்கிற்கு பலம் சேர்க்க விடிவி கணேஷின் காமெடி கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. சரண்யா பொன்வண்னன், சீதா, அச்யுத் குமார், எம்.எஸ் பாஸ்கர் என தேர்ந்த நடிகர்களும் படத்தில் இருக்கிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ஏற்கனவே தாறுமாறாய் ஹிட்டடித்த ‘மக்காமிஸி’ பாடலை திரையில் பார்ப்பது புத்துணர்ச்சிக்கு உதவுகிறது.
சீரியலையே சினிமா ரேஞ்சுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சினிமாவையே சீரியலுக்கும் குறைந்த தரத்தில் எடுத்திருக்கும் இயக்குநர் ராஜேஷ்,
‘எதற்கெடுத்தாலும் சட்டம் பேசிக் கொண்டிருந்தால் வாழ்க்கைப் பாதை கரடுமுரடாகி விடும்தான். அதற்காக தவறுகளை தட்டிக் கேட்கிற குணத்தை மாற்றிக்கொள்ள அவசியமில்லை’ என எடுத்துச் சொல்லியிருக்கும் கருத்து கனமாகத்தான் இருக்கிறது!